இந்திய விமானப்படையின் 92 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் மெரினா கடற்கரையில் விமானப்படையினர் நிகழ்த்திய சாகச நிகழ்வு ஒரு பெரும் துயரச் சம்பவமாக மாறியிருக்கிறது. வெயிலின் தாக்கத்தாலும் கூட்ட நெரிசலாலுல் 230 பேர் மயங்கி விழுந்திருக்கின்றனர். அதில் 93 பேர் ஓமந்தூரார் மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.
அரசு இயந்திரத்தின் முழுமையான அலட்சியப் போக்கையே இந்த துயரச் சம்பவம் தோலுரித்து காட்டியிருக்கிறது. வழக்கத்தை விட சென்னையில் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் சூழலில், மதியம் 11 மணி முதல் 1 மணி வரை என உச்சக்கட்ட வெயில் சமயத்தில் நிகழ்வை நடத்தியதே பெரிய பிரச்சனைதான். 15 லட்சம் பேர் நிகழ்வை காண கூடியதாக விமானப்படையின் தரப்பிலேயே அதிகாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
விமானப்படை தலைமை தளபதி ஏ.பி சிங், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு விமானப் படை அதிகாரிகள், காவல் அதிகாரிகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.
அத்தனை லட்சம் பேருக்கும் ஏற்றவகையில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்ததா என்பது மிகப்பெரிய கேள்வி. வெயிலின் தாக்கத்தில் தண்ணீரும் கிடைக்காதது பல மக்களும் மயக்கமடைந்து விழ முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. அத்தனை லட்சம் பேரும் ஒரே சமயத்தில் கடற்கரையிலிருந்து வெளியேற முயற்சிக்கும்போதுதான் கடும் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. கூட்டத்தை வெவ்வேறு வழிகளில் பிரித்து அனுப்பி வெளியேற்றும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை.
போக்குவரத்தையும் முறையாக ஒழுங்குப்படுத்தாமல் விட்டதால் சாகச நிகழ்வு நடந்துகொண்டிருந்த சமயத்திலேயே நகருக்குள் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் கட்டி ஏறியிருக்கிறது. இதனிடையேதான் புறநகர் ரயில்களிலும் மெட்ரோவிலும் அத்தனை கூட்டம். கூட்டநெரிசலை சமாளிக்க முடியாமல் இரயில்வேயும், மெட்ரோ நிர்வாகமும் திணறிவிட்டனர். இரயில்களின் ஜன்னல்களிலெல்லாம் தொத்திக் கொண்டு மக்கள் சென்றதெல்லாம் அவலம்.
பெரும் மக்கள் திரள் கூடும் நிகழ்வுகளை அரசு சரியான முன்திட்டமிடலுடனும், முன்னேற்பாடுகளுடன் செய்திருக்க வேண்டும். இத்தனை லட்சம் மக்கள் கூடுவார்கள் என்பதை முன்பே கணித்து அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யத் தவறியதுதான் இப்படியொரு துயரச் சம்பவத்திற்குக் காரணமாகியிருக்கிறது. இதை எதிர்பாராமல் நிகழ்ந்த தவறு போல சித்தரிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பாகவே இந்த விமான சாகசத்தின் ஒருங்கிணைப்பாளர் துணைத் தளபதி கே.பிரேம்குமார், ’15 லட்சம் பேர் இந்த நிகழ்வை காண கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.’ என்று கூறியிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மெரினாவில் விமானப்படையினர் ஒத்திகை செய்த போதே ஆயிரக்கணக்கான மக்கள் அதைக் காண கூடியிருக்கின்றனர்.
அதுபோக கடந்த சில நாட்களாகவே செய்தி சேனல்களில் இந்த விமான சாகச நிகழ்வு பற்றிய செய்திகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இன்ஸ்டாகிராம் உட்பட அத்தனை சமூகவலைதளங்களிலும் இதைப் பற்றி பேசுகிறார்கள். விமானப்படையினர் செய்த ஒத்திகைகளுமே இந்த சாகச நிகழ்வு மீது மக்களுக்கு கூடுதல் ஆர்வத்தைத் தூண்டியது.
மேலும் நிகழ்வானது விடுமுறை தினத்தில் நடக்கிறது. மக்களை ஈர்க்கும் வகையில் இந்த வாரம் எந்தத் திரைப்படமும் வெளியாகவில்லை. நகருக்குள் பெரிய விளையாட்டுப் போட்டிகளோ பொழுதுபோக்கு நிகழ்வுகளோ நடக்கவில்லை. அப்படியிருக்கதான் இந்த நிகழ்வு மீது மக்கள் கூடுதல் ஆர்வம் காட்டியிருந்தனர். இத்தனைக்குப் பிறகும் காவல்துறையும், ஏனைய அரசு இயந்திரமும் இவ்வளவு மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்த்திருக்கவில்லை எனில் அது அலட்சியமன்றி வேறில்லை.
ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ கான்செர்ட்டில் இதுபோன்ற கூட்ட நெரிசல் ஏற்பட்டு நிகழ்வே அல்லோகலப்பட்டு மக்கள் திணறிப்போய் சரியாக ஒரு ஆண்டுதான் நிறைவடைந்திருக்கிறது. அந்த நிகழ்வின் போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் முதலமைச்சரின் கான்வாயே 15 நிமிடங்களுக்கு நகர முடியாமல் நடுவழியில் நின்ற சம்பவமெல்லாம் நடந்திருந்தது.
அப்போதே அந்த நிகழ்வை நடத்திய தனியார் நிறுவனமும் முறையாக பாதுகாப்பு வழங்காத காவல்துறையும் கடும் விமர்சனங்களையும் சந்தித்திருந்தன. அப்போதே சென்னை நகருக்குள் பெரும் நிகழ்வுகளை முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் நடத்தலாமா எனும் விவாதம் கிளம்பியிருந்தது. அதற்குள் மெரினாவில் இப்படியொரு சம்பவம். வான் சாகச நிகழ்ச்சி குளறுபடிக்கும், 5 பேர் உயிரிழப்புக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அஇஅதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
வான் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளருபடிகளுக்கு திரு. @mkstalin தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.#நீரோமன்னன்_ஸ்டாலின் pic.twitter.com/h3qvsvckWI
— AIADMK IT WING – Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) October 7, 2024
சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.
குடிநீர்,உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை.… pic.twitter.com/L8J0ZZZFRk
— DJayakumar (@djayakumaroffcl) October 6, 2024
5 பேர் உயிரிழப்பு குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ‘இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை,சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டை துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது. எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும்’ என்று கூறியுள்ளார்.
மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் ‘வான்படை சாகச’ கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது.
கொளுத்தும் வெயிலில் சுமார் பத்துலட்சத்திற்கும் மேறபட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன்காரணமாக உடலில்… pic.twitter.com/q6V17VlUWy
— Aadhav Arjuna (@AadhavArjuna) October 6, 2024
ஐ.பி.எல் போட்டிகள் நடக்கிற சமயத்தில் ஐ.பி.எல் டிக்கெட்டை காண்பித்தாலே இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவிக்கும். அதுபோல போட்டி முடிய இரவு தாமதமாகும் என்பதால் மெட்ரோ இரயிலின் இயக்க நேரத்தையே நீட்டிப்பார்கள். 30000-40000 பேர் கூடும் நிகழ்வுக்கே இப்படியான விஷயங்களை செய்கையில், விமானப்படை நடத்தும் ஒரு நிகழ்வுக்கு முன்கூட்டியே கூடும் கூட்டத்தை நிர்வகிக்க மெட்ரோ நிர்வாகம் தயாராக இருந்திருக்க வேண்டும்.
ஆனால், மெட்ரோவில் கூட்டம் அலைமோதி பல மணி நேரம் கழித்தே இரயில் இயக்கத்தை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக அதிகாரப்பபூர்வ அறிவிப்பு பத்திரிகையாளர்களுக்கான மெட்ரோவின் வாட்ஸ் அப் க்ரூப்பில் வெளியானது. அப்போதே கிட்டத்தட்ட மதியம் 2 மணி ஆகிவிட்டது.
இணையம் முழுவதும் விமர்சனங்கள் குவியத் தொடங்கிய நிலையில் தெற்கு இரயில்வேயும் இதுசம்பந்தமாக விளக்கம் கொடுத்திருக்கிறது. ‘ஒரு நாளைக்கு 55000 பேர் மட்டுமே பயணிக்கும் வழித்தடத்தில் மாலை 4:30 மணி வரைக்கும் மட்டுமே 3 லட்சம் மக்கள் பயணித்திருக்கின்றனர். எங்களால் இயன்றவரைக்கும் அதிகப்படியான இரயில்களை இயக்கியிருக்கிறோம்.’ எனத் தெரிவித்திருக்கிறது.
எல்லா தரப்பும் இந்தத் துயரம் நிகழ்ந்ததற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை நிரூபிக்கவே முயல்கின்றனவே தவிர மக்களின் துயரில் பங்குகொண்டு அதற்கு தாங்களும் ஒருவிதத்தில் காரணம் என்பதை ஏற்றுக்கொண்டு பொறுப்பை சுமக்க யாருமே தயாராக இல்லை. தவறை ஒப்புக்கொள்ளும்போதுதான் இனி இதுபோன்று நடக்காமல் தவிர்க்க முடியும். அதைவிட்டுவிட்டு பொறுப்பை உதறித்தள்ளுவது மக்களுக்காக இயங்குகிறோம் என சொல்லும் அரசுக்கு அழகல்ல.
அதிக மக்களைக் கூட்டி சாகசம் செய்து உலக சாதனை படைத்துவிட்டதாக பெருமிதம் கொள்கிறார்கள். அது பெருமிதம்தான். ஆனால், அதற்கு காரணமாக இருந்த மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டியதும் அரசின் கடமைதானே! அவர்களை நடுத்தெருவில் அல்லாடவிட்டுவிட்டு, ‘உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி’ என்பதற்காக இந்த நிகழ்ச்சி லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பெற்றுவிட்டது என பெருமிதம் பேசித் திரிவது கேவலத்தின் உச்சம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry