
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்ற தலைப்பில், 1973ல் உருவாக்கப்பட்ட நடத்தை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்து புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அனுமதியின்றி அரசு அலுவலக வளாகத்திலோ அல்லது அதை ஒட்டியுள்ள இடங்களிலோ, ஊர்வலங்கள் கூட்டங்கள் நடத்தக்கூடாது. அதில் உரையாற்றவும் கூடாது” என மார்ச் 6 தேதியிட்ட தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தவறான செய்தி எனில் அரசு மறுப்பறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும். அவ்வாறு வெளியிட முன்வராத காரணத்தினால் இந்தச் செய்தியானது உறுதி செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு விதித் திருத்தம் வெளியிட வேண்டிய அவசியம்தான் என்ன?
சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில் வெளியிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு, திராவிட மாடல் அரசு ஏன் நிறைவேற்றவில்லை? என்று கனிவோடு கேட்டோம். வாதாடியும் கேட்டோம்..! போராடியும் கேட்டோம்..! போராடியதற்குப் பிறகு சந்தித்துப் பேசியும் கேட்டோம்..! மாநாடு போட்டு முதலமைச்சரை அழைத்துப் பேசியும் கேட்டோம்..! ஆனாலும் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இழந்த உரிமைகளை மீட்பதற்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு மற்றும் பிற சங்கங்கள் கொள்கைப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள். மாணவர்கள் தேர்வினை மையப்படுத்தி போராட்டத்தினை தற்போது ஒத்திவைத்திருக்கிறார்கள். இதுதான் யதார்த்தமான சூழ்நிலையாகும். 1973 விதிகளை திருத்திய இந்த அரசு, கூச்சப்படாமல் 2003ல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த எஸ்மா, டெஸ்மா சட்டங்களையே கொண்டுவந்து நிறைவேற்றி இருக்கலாமே? வேறு ஏதாவது பெயரினை வேண்டுமானால் வைத்துக் கொண்டிருக்கலாம்.
Also Read : தமிழை அழித்தொழிக்கும் ‘தங்க்லிஷ்’..! அழிந்துவரும் தாய்மொழி! கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்!
ஒன்றை மட்டும் அழுத்தம் திருத்தமாக தமிழ்நாடு முதலமைச்சரின் இதயத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம். நாங்கள் மிசாவை பார்த்தவர்கள்.., பொடா சட்டத்தைப் பார்த்தவர்கள்.., மொழிப்போர் தியாகிகள் என்றெல்லாம் அரசியல் கட்சித் தலைவர்கள் கொள்கைப் போரினை வரிசையாகப் பட்டியலிடுவார்கள். அதைப்போன்று எங்களாலும் பட்டியலிட முடியும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், 1985 ஜாக்டீ போராட்டத்தில் 40 நாள் சிறை சென்று மீண்டோம்; 1988 ஜாக்டீ ஜியோ போராட்டம், மௌண்ட்ரோடை முற்றுகையிட்டு சிறை சென்று மீண்டு வந்தோம்;

2003 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பறிக்கப்பட்ட சலுகைகளைத் திரும்ப அமல்படுத்தக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, ஒரே நாளில் ஒன்றே முக்கால் லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட வரலாற்றைப் பார்த்தோம்; 999 பேர், எட்டு மாத காலம் நிரந்தரப் பணிநீக்கத்தில் தூக்கி எறியப்பட்ட போது, அத்தனை பேருக்கும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களும் துணை நின்றார்கள். உச்சநீதிமன்றம் வரை சென்று அனைவரையும் பாதுகாத்து, எந்த பாதிப்பும் இல்லாமல் அனைவரையும் நாற்காலியில் அமர வைத்தோம்; நாங்கள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.
Also Read : இந்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வெச்சு சாப்பிடாதீங்க..! ஃபுட் பாய்சன் ஆகலாம்.. ஜாக்கிரதை!
கொள்கைப் போரினை வரிசையாகப் பட்டியலிடுபவர்கள் தற்போது ஆட்சியில் இல்லை. ஆனால் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மகன் தற்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளார்கள். நாட்டில் ஆட்சி செய்தவர்கள் எவரும் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததாக வரலாறு இல்லை, ஒரு சிலரைத் தவிர! ஆனால் சங்கங்கள் எந்நாளும் நிலைத்து நின்று செயல்பட்டுக் கொண்டுள்ளன என்பது நிலைத்து நிற்கும் வரலாறாகும்.
உரிமைக்காக குரல் கொடுப்பவர்களுக்குக் கட்டுப்பாடு..! ஊழல் செய்பவர்களுக்கு விதித்தளர்வா..? ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை அச்சுறுத்துவதை விட்டு விட்டு, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வாருங்கள். கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்த்துத் தான் இந்தக் கருத்தினை வலியுறுத்துகிறோம். வெற்றியை நிர்ணயிப்பதில் எங்களுடைய பங்கும் உண்டு என்பதை நெஞ்சத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். நிதிநிலை அறிக்கையில் விடியல் தோன்றுமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்..!” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry