உலக அளவில் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொற்றா நோய்களில் ஒன்றான சர்க்கரை நோயால் இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை பலரும் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் 1980-ம் ஆண்டு 10.8 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த எண்ணிக்கை 2014-ம் ஆண்டில் 41.4 கோடியாக அதிகரித்தது. 2000 முதல் 2019 வரையில் நீரிழிவு நோய் காரணமாக மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபலமான மருத்துவ இதழான ‘லான்செட்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் 10.1 கோடி பேர், அதாவது நாட்டின் மக்கள் தொகையில் 11.4% பேர் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர். 2019ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சுமார் 3 கோடி அதிகம். மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, நாட்டின் மக்கள் தொகையில் 15.3% பேர், முன் நீரிழிவு நோயுடன் (Pre Diabetes) வாழலாம் என்று கண்டறியப்பட்டது. இவர்கள் விரைவாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுவிடுவார்கள் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நீரிழிவு நோய் தேசிய சராசரி 11.4% என்ற நிலையில், கோவாவில் 26.4%, புதுச்சேரியில் 26.3% மற்றும் கேரளாவில் 25.5% பேருக்கு நீரிழிவு நோயின் பாதிப்பு உள்ளது. நாட்டிலேயே மிகக் குறைவான அளவாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் நீரிழிவு பாதிப்பு 4.8% ஆக இருக்கிறது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் உ.பி., ம.பி., பீகார் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற குறைவான பாதிப்பு உள்ள மாநிலங்களில், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக லான்செட் ஆய்வு எச்சரிக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 44 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட 7.7 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.5 கோடி மக்கள் Pre Diabetics எனப்படும் முன் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்(ICMR) 2017-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான நோய் சுமை முன்முயற்சி திட்டத்தின் “இந்தியா: தேசத்தின் ஆரோக்கியம்” என்ற ஆய்வு அறிக்கையின்படி, தொற்றா நோய்களால் ஏற்படும் இறப்புகளின் விகிதம் 1990-ல் 37.9 சதவீதத்திலிருந்து இருந்து 2016-ல் 61.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2020-ம் ஆண்டில் இந்தியாவில் பதிவான மொத்த மரணங்களில் 5 சதவீத மரணங்கள் நீரிழிவு நோயால் ஏற்பட்டது என்று மத்திய சிவில் பதிவு அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இதன்படி 2020-ம் ஆண்டில் மருத்துவக் காரணங்களுக்காக பதிவு செய்யப்பட்ட 18,11,688 மரணங்களில் 91,123 மரணங்களுக்கு நீரிழிவு நோய் காரணமாக உள்ளது.
1990-ம் ஆண்டில் தமிழகத்தில் பதிவான மரணங்களில் 10.8 சதவீத மரணங்களுக்கு Diarrhoeal Diseases என்று அழைக்கப்படும் வயிற்றுப்போக்கு நோய்கள் தான் காரணமாக இருந்தது. இரண்டாவது இடத்தில் 6.9 சதவீதத்துடன் Lower Respiratory Infection என்று அழைக்கப்படும் நோய்கள் தான் காரணமாக இருந்தது. ஆனால், 2016-ஆம் ஆண்டு ஏற்பட்ட மரணங்களில் அதிகட்சமாக 14.3 சதவீத மரணங்களுக்கு இருதயம் தொடர்பாக நோய்கள் காரணமாக இருந்தது.
2-வது இடத்தில் 4.9 சதவீத மரணங்களுக்கு நீரிழிவு நோய் காரணமாக உள்ளது. தமிழகத்தில் 2020-ம் ஆண்டு மருத்துவ காரணங்களுக்காக பதிவு செய்யப்பட்ட 2,95,539 மரணங்களில் 17,532 மரணங்கள் நீரிழிவு நோய் காரணமாக பதிவாகி உள்ளது. இதன் சதவீதம் 5.7 சதவீதம் ஆகும். இதன்படி இந்தியாவில் நீரிழிவு நோய் காரணமாக அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
Also Read : வரைமுறையின்றி ஆன்டிபயாடிக் உட்கொள்ளும் இந்தியர்கள்! மருத்துவ இதழ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றா நோய்களின் பாதிப்பு குறித்த ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் (INdia DIABetes [INDIAB] Study ) கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, நீரிழிவு நோயைப் பொறுத்தவரையில் தேசிய அளவில் நோய் பரவல் 11.4 சதவீதமாக உள்ளது. தேசிய அளவில் 15.3 சதவீதத்தினர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படக்கூடும் (pre diabetes) என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஐசிஎம்ஆர் ஆய்வு அறிக்கையின்படி, தமிழகத்தில் நீரிழிவு நோய்ப் பரவல் 14.4 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் நீரிழிவு நோய் பரவல் 10 சதவீதத்திற்கு அதிகமாகவும், கிராமபுறங்களில் 7.5 முதல் 9.9 சதவீதம் வரை உள்ளது. தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையிலான (Pre Diabetes) நோய்ப் பரவல் சதவீதம் 10 முதல் 14.9 வரை உள்ளது. நகர்ப்புறங்களில் இது 10 முதல் 14.9 சதவீதம் வரையும், கிராமப்புறங்களில் இது 5 முதல் 9.9 சதவீதம் வரையும் உள்ளது.
இதன்படி பார்த்தால் தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 14.4 சதவீத பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 சதவீத பேர் நீரிழிவு நோயால் (Pre Diabetes) பாதிக்கப்படக்கூடும். இதில் குறிப்பாக, சில ஆண்டுகளாக இளம் வயதினர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 18 வயது முதல் நீரிழிவு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry