கும்பகோணம் சாரங்கபாணி தெருவில் வாழ்ந்துவந்த சீனிவாசன் – கோமளம் தம்பதிக்கு 1887-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி ஈரோட்டில் பிறந்தார் ராமானுஜன். கணிதத்தில் அசாத்தியமான சாதனைகள் புரிந்த ராமானுஜன் பிறந்தது ஈரோட்டில் என்றாலும், அவரது இளமைக் காலத்தின் பெரும்பகுதி அவருடைய பூர்வீகமாக கும்பகோணத்தில்தான் கழிந்தது.
கணிதத்தின் மீது கொண்ட தீராத காதலால் கணித துறையில் பல சாதனைகளைச் செய்தவர் ராமானுஜன். வறுமை இவரை ஆட்கொண்ட போதும் கணிதத்தை இவர் கைவிடவில்லை. தமிழனின் புகழை உலகுக்கு உணர்த்திய உன்னத மனிதர். 20ஆம் நூற்றாண்டில் உலகத்தையே வியக்கச் செய்த ஒப்பற்றக் கணித மேதையாகத் திகழ்ந்தவர்.
Also Read : கேரளாவின் குப்பைமேடாக மாறிவிட்ட தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள்! அடகு வைக்கப்படுகிறதா தமிழர்களின் நலன்?
33 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜன், சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இன்றி வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 முதல் 1918-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கணிதத் தேற்றங்களை ராமானுஜன் கண்டுபிடித்தார்.
அடிப்படை இயற்பியல் முதல் மின்தொடர்புப் பொறியியல் வரை எனப் பல்துறைகளின் உயர்மட்ட ஆய்வில் ராமானுஜனின் சூத்திரங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. ராமானுஜனின் பெயரால் 1997-ல் தொடங்கப்பட்ட The Ramanujan Journal என்ற கணித ஆய்விதழ் இன்றும் வெளியாகிறது. ராமானுஜன் இந்த உலகை விட்டு மறைந்து நூற்றாண்டுகள் கடந்தும் உலகிலுள்ள கணிதவியலாளர்களுக்கு ஓர் உத்வேகமாக இன்றும் திகழ்கிறார்.
ராமானுஜனின் தந்தையும், தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு நீதிமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ராமானுஜனின் தந்தை வழித் தாத்தா வேலைபார்த்த கடை 1891-ல் காஞ்சிபுரத்திற்கு இடம்மாறியதால், இவர் குடும்பமும் காஞ்சிபுரத்துக்கு வந்தது. 1892-ல் காஞ்சிபுரத்திலிருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் ராமானுஜன் தொடக்கக் கல்வியைப் பெறத் தொடங்கினார்.
1894-ல் அவர் தெலுங்குவழிக் கல்விக்கு மாற்றப்பட்ட சில நாள்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்கப் பள்ளியில் ராமானுஜன் கல்வியைத் தொடர்ந்தார். மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று, 1897-ல் தொடக்கக் கல்வியை நிறைவுசெய்தார் ராமானுஜன். 1897-ம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடங்கிய ராமானுஜனின் கணிதப் பயணம், கேம்பிரிட்ஜ் வரை பயணித்தது.
தனது பள்ளிப் பருவத்திலேயே, எஸ்.எல்.லோனி அவர்கள் எழுதிய மேம்பட்ட கோணவியல் புத்தகத்தை தனது வீட்டில் குடியிருந்த கல்லூரி மாணவரிடம் வாங்கிப் படித்தார். அப்போது அவருக்கு வயது 11 ஆகும். தனது 13வது வயதில் அந்த புத்தகத்தை முழுவதும் கற்று தேர்ச்சி பெற்றார்.
உலகப் புகழ்பெற்ற கணித மேதையின் ஆரம்ப காலங்கள் கழிந்த இந்த வீட்டின் முக்கியத்துவம் மிகச் சமீபத்திய ஆண்டுகள் வரை உணரப்படவில்லை. 2003-ம் ஆண்டுவரை வெவ்வேறு நபர்கள் இந்த வீட்டில் வசித்துவந்தனர். இந்நிலையில், இந்திய குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் முன்னெடுப்பால் ராமானுஜன் வாழ்ந்த வீடு பாதுகாக்கப்பட்டது; தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம் இப்போது இந்த வீட்டை நிர்வகித்துவருகிறது.
கோயில் மண்டபங்களின் சுவர்களில் சாக்பீஸ்களால் கணக்குகளைப் போட்டு அதற்கு ராமானுஜன் பதில்களைக் கண்டுபிடிப்பார். விழித்திருந்தபோது கண்டுபிடிக்காத கண்டுபிடிப்புகளைத் தூக்கத்தில் கனவில் விடை கண்டுபிடித்து கணிதத்தின் மேல் அவர் கொண்ட தீராக் காதலை மெய்ப்பித்தார். 1909 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தன் குடும்ப வறுமை காரணமாக 20 ரூபாய் சம்பளத்துக்கு சென்னை துறைமுகத்தில் எழுத்தாளர் பணியில் சேர்ந்தார்.
எனினும் தவறாமல் கணிதத்தைப் பயிற்சி செய்துகொள்வார். பெர்நெவுவியன் எண்கள் என்ற கணிதத்துறை பற்றிய சிறப்புக் கட்டுரையை ராமானுஜன் வெளியிட்ட பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு ஆங்கிலேயர் ஒருவர் அவரை அனுப்பி வைத்தார். ராமானுஜனனின் கணக்கு சூத்திரங்கள் மற்றும் குறிப்புகளைப் பார்த்து பல்கலைக்கழக வல்லுனர்கள் வியந்தனர். அதன் பின் இங்கிலாந்து வர அழைப்பு விடுத்தனர். இதன்காரணமாக 1914ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார் ராமானுஜன்.
பல கணித மேதைகளுக்கு மத்தியில் தனது கணக்குத் திறமையை நிரூபித்தார். இங்கிலாந்து அரசு இவரது திறமையைக் கண்டு வியந்தது அவரை ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு செய்து பெருமைப்படுத்தியது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெல்லோஷிப் பதவியும் இவருக்குக் கிடைத்தது.
மூன்று ஆண்டுகளில் 32 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். 1911இல் முதன்முறையாக இந்தியக் கணிதக் கலை ஆய்விதழில் ராமானுஜனின் கணிதப் புதிர்கள் வெளியாகின. சிறப்பு இயல்புகளைக் கொண்ட எண்களைப் பற்றிய அவரின் முதல் ஆய்வுக் கட்டுரையும் அதே ஆண்டு வெளிவந்தது. லண்டன் கணிதக் கழகத்தின் கௌரவ உறுப்பினர், கேம்பிரிட்ஜ் தத்துவக் கழகத்தின் கௌரவ உறுப்பினர் போன்ற பதவிகளோடு 1918 மே மாதம் சிறப்புவாய்ந்த எஃப்.ஆர்.எஸ் பட்டமும் கிடைத்தது.
இவரின் ஆவணங்களை கொண்ட உயர் கலப்பு எண்களின் [Highly Composite numbers] விளக்கவுரை இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது. ராமானுஜனனின் பசிவு சூத்திரம் போன்றன அணுக்களைத் துகள்களாக பிரிக்கும் தன்மையைப் பற்றி ஆராயப் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு முன் எந்த ஒரு இந்தியருக்கும் இத்தகையப் பாராட்டும் கௌரவமும் இங்கிலாந்தில் கிடைத்ததில்லை.
1919 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி கடல் வழி பயணம் செய்து மும்பைத் துறைமுகம் வந்து சேர்ந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘கணித மேதை சீனிவாச ராமானுஜரே வருக வருக’ என பதாகைகளுடன் பெரியவர்கள் பூங்கொத்துக்கள் கொடுத்து வரவேற்றனர். 1919 ஏப்ரல் 2ஆம் தேதி சென்னை வந்தார். ராமானுஜரின் இந்திய வருகை பற்றி பத்திரிகைகளில் பெருமை பேசி செய்திகள் வெளியாகின. உடல் நலம் குன்றிவரும் செய்தியைக் கேட்டதும் சென்னையில் அவர் தங்கி சிகிச்சை பெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.ஆதிநாராயண செட்டியார் பங்களாவில் வைத்து டாக்டர் நஞ்சுண்டராவ் தனிப்பட்ட அன்போடு சிகிச்சை அளித்தார். ஆனால் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.
Also Read : கொய்யா பழங்களைச் சாப்பிடுவதால் கிடைக்கும் வியக்கத்தகு நன்மைகள்! கொய்யா பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்?
இதன்பின் 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி இவர் உயிர் பிரிந்தது. 100 ஆண்டுகள் கடந்தும் கணித உலகம் நிரூபிக்கப் போராடி வரும் ஆயிரக்கணக்கான சூத்திரங்களைத் தந்த மேதை தனது 33வது வயதில் உலகை விட்டுப் பிரிந்தார். ராமானுஜரின் முழு வாழ்க்கை நூலை முதன் முதலாக இந்திய நூலகத் தந்தை எஸ். ஆர். ரங்கநாதன் எழுதினார்.
ராமானுஜர் பெயர்களில் கணித விருதுகளும் சங்கங்களும் கண்காட்சிகளும் நிறுவப்பட்டன. இவர் பயின்ற பள்ளி, வேலை பார்த்த துறை என ஏராளமான இடங்களில் இவரது சிலைகள் உள்ளன. கும்பகோணத்தில் இவர் வாழ்ந்த வீடு தேசிய அருங்காட்சியகமாக உள்ளது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் தேசிய கணித நாளாகக் கொண்டாடப்படுகின்றது.
உலகம் போற்றும் ராமானுஜனின் பிறந்தநாள் தேசிய கணித நாளாக கொண்டாடப்படும் நிலையில், கணிதம் என்றவுடன் அதை நினைத்து சில மாணவர்களுக்கு ஒரு பதற்றம் வரும், குறிப்பாக கணித தேர்வுக்கு முந்தைய நாள் தொடங்கி, தேர்வு அறைக்குள் நுழைவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை.
மாணவர்களுக்கு கணிதம் குறித்த இந்த பயம், நாளடைவில் கணித ஆசிரியர் மீதான பயமாக மாறுகிறது அல்லது கணித ஆசிரியர் மீதான பிம்பம், கணிதம் குறித்த பதற்றத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வு கூறுகிறது. கணிதம் மீதான பயத்தைக் குறிக்கும் ‘Math phobia’ என்ற சொல் 1953-ஆம் ஆண்டு, அமெரிக்காவில், மேரி டி லெல்லிஸ் கோஃப் எனும் கணிதவியலாளரால் உருவாக்கப்பட்டது.
சில பிள்ளைகளுக்கு ‘கணித பயம்’ என்பது கற்றல் குறைபாட்டின் அறிகுறியாக கூட இருக்கலாம். உதாரணமாக ‘டிஸ்கால்குலியா’ (Dyscalculia), எனும் கற்றல் குறைபாடு. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், எண்களை அடையாளம் கண்டுக்கொள்வதிலும், எளிமையான கணித கேள்விக்கு விடை அளிப்பதற்கு கூட கஷ்டப்படுவார்கள். இவர்கள் கணிதத்தை முடிந்தளவு தவிர்க்க முயற்சிப்பார்கள், முடியாதபட்சத்தில் முயற்சி செய்து மோசமான மதிப்பெண்கள் பெறும்போது, மன அழுத்தம் ஏற்படும். அதை சிறுவயதிலேயே கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும்.”
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry