
அகில இந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியச் செயலாளரும் (AIFETO – ஐபெட்டோ), தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில், என்சிஇஆர்டி வெளியிடும் ஆங்கில வழிப் பாட புத்தகங்களின் பெயர்களை இந்தியில் மாற்றம் செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. AIFETO அமைப்பும், கல்வியாளர்களும் இதைக் கண்டிக்கிறோம். இதை ஒருக்காலும் ஏற்கவும் முடியாது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டு, மத்திய பாடத் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகளில் இந்தி மொழி திணிப்பு தீவிரமாக காணப்படுகிறது.
குறிப்பாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான மத்திய கல்வி அமைச்சகம் இந்தி திணிப்பில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. என்சிஇஆர்டி வெளியிடும் புத்தகங்களின் பெயரை இந்தியில் மாற்றுமாறு இந்தி பேசும் மாநிலங்களே கேட்காத நிலையில், புத்தகங்களின் பெயர்களை பொதுமொழியான ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மாற்றியிருப்பதை இந்தி திணிப்பு என்று சொல்லாமல், வேறு எப்படி சொல்ல முடியும்?

சிபிஎஸ்இ 6, 7-ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்திற்கு ‘பூர்வி’ என்றும், 1,2-ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்களுக்கு ‘மிருதங்’ என்றும், 3,4 ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்களுக்கு ‘சந்தூர்’ எனவும் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் 6ஆம் வகுப்பு கணித புத்தகத்திற்கு ‘கணித பிரகாஷ்’ என்றும், 6ஆம் வகுப்பு கலை பதிப்புக்கு ‘கிருதி1’ மற்றும் 3-ஆம் வகுப்பு உடற்கல்வி புத்தகத்துக்கு ‘கேல் யாத்ரா’, 6ஆம் வகுப்பு தொழிற்கல்விக்கு ‘கவுஷல் போத்’ என்றும் இந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பிறவகுப்பு பாடங்களுக்கான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாட புத்தகங்களுக்கும் ஆங்கிலத்தில் இருந்து இந்தியில் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தி பேசாத மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இவ்வாறு பெயர்களை மாற்றுமாறு கல்வி அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது யார்?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தி உள்ளிட்ட எந்த மொழிகளையும் எதிர்ப்பதில்லை. ஆனால், இந்தியை படித்துத்தான் ஆக வேண்டும் என்கிறபோது ஒட்டுமொத்த மாநிலமும் தன்னெழுச்சியாக எதிர்க்கிறோம். மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த பெயர் மாற்றத்தை ஏற்கவே முடியாது, முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.
தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்க தங்களது தலைமையிலான மத்திய கல்வி அமைச்சகம் முயற்சிப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்றால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை தர இயலாது என்று நீங்கள் கூறுகிறீர்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது மட்டுமின்றி கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதும் ஆகும்.
பொதுவாக மொழி என்பது மக்களை இணைக்கும் முக்கியமான பங்கை ஆற்றுகிறது. ஆனால் இந்தி என்ற மொழியை திணிப்பதில் மத்திய கல்வி அமைச்சகம் காட்டும் ஆர்வம், இந்தி பேசாத மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில், நீங்கள் சார்ந்திருக்கும் பாஜகவுக்கு மேலும் பெருமளவு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக அதிகாரப் பகிர்வில் தென்னிந்திய மாநிலங்கள் பின்னடைவை சந்திக்கும் என்ற சூழலில், மோடி அரசின் இந்தி மொழி திணிப்பு எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும்.
மொழி பன்முகத்தன்மை என்பது இந்தியோடு நின்றுவிடவில்லை என்பதை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எப்போதெல்லாம் இந்தி மொழி திணிப்பு முயற்சி நடக்கிறதோ அல்லது மும்மொழிக் கொள்கையை வலுக்கட்டாயமாக திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறதோ, அப்போதெல்லாம் இந்தி பேசாத மாநிலங்கள் அதனை எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படுவதில்லை. இது தவறான போக்கு. மக்களின் உணர்வுகளை புறந்தள்ளும் இத்தகைய செயல்களை மொழி மற்றும் கலாசாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களாகவே நாங்கள் கருதுகிறோம்.
Also Read : சென்னையில் மார்க்ஸ் சிலை! சமூக வளர்ச்சி, சமத்துவக் கொள்கை வளர அடிகோலும் என ஐபெட்டோ வரவேற்பு!
இந்திய அரசமைப்பின் படி ஒன்றியத்திற்கான அலுவல் மொழி இந்தி. யார் அதைக் கற்றுக் கொள்ள விரும்பினாலும், அதனை கற்றுக் கொள்ள இயலும். ஆனால், மூன்றாவதாக இந்தியைக் கற்றுக் கொண்டே தீர வேண்டும் என்று மத்திய அரசு திணிக்க நினைத்தால் அதன் எதிர்வினைகளை மத்திய அரசு எதிர்கொண்டுத்தான் ஆக வேண்டும்.
அண்மையில் ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, தமிழ்நாடு அரசிடம் வரும் கடிதங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், அதிகாரிகள் தாய்மொழியான தமிழில் கையெழுத்திடுவதில்லை என்று பேசினார். இது ஏற்புடையதே. அதேநேரம் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லும் பிரதமர், தனது தலைமையின் கீழ் இயங்கும் கல்வி அமைச்சகம் இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருப்பதை ஏன் கண்டிப்பதில்லை?
தமிழ்நாட்டை பொறுத்தவரை தாய்மொழி என்பது உணர்வுப்பூர்வமானது. எனவே, இந்தி திணிப்பு முயற்சியைக் கைவிட்டு, என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களின் பெயரை மீண்டும் ஆங்கிலத்தில் மாற்ற வேண்டும். மேலும், இந்தி திணிப்பு மூலம், இந்தி பேசும் மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்களிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.” இவ்வாறு ஐபெட்டோ அண்ணாமலை கூறியுள்ளார்.
Contact AIFETO Annamalai @ 94442 12060 / 9962222314. annamalaiaifeto@gmail.com
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry