கரைபுரளும் கொள்ளிடம்! கடலில் கலக்கும் ஒன்றேகால் லட்சம் கன அடி தண்ணீர்! ஆளும் கட்சியினர் அட்டூழியம் என விவசாயிகள் குமுறல்!

0
67
The water released from Kallanai and Mukkombu flows into the Kollidam river from where 1,28,000 cusecs of water is flowing into the sea. Image - Kallanai.

கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், முக்கொம்பிலிருந்து வரும் தண்ணீர் என கொள்ளிடம் ஆற்றில் 1,28,000 கனஅடி தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

ஜூலை 30-ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டியதைத் தொடர்ந்து, உபரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. வினாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர் திருச்சி மாவட்டம், முக்கொம்பைக் கடந்து கல்லணையை சென்றடைந்துவிட்டது. கல்லணையிலிருந்து ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையில் திறந்துவிடப்படும் தண்ணீர் கொள்ளிடத்தில் மட்டுமே அதிகம் செல்கிறது. காவிரி, வெண்ணாற்றில் போதுமான தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Also Read : ரயில் பயணத்துக்கு காப்பீடு இருப்பது தெரியுமா? வெறும் 35 பைசாதான்… ரூ.10 லட்சம் வரை இழப்பீடு! பதிவு செய்வது ரொம்ப ஈஸிதான்!

இதுகுறித்து விகடன் இணைய இதழிடம் பேசியுள்ள தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன், “ஆகஸ்ட் 1-ம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணையிலிருந்து கிழக்கே சரியாக 60-வது கிலோமீட்டரில் உள்ள சுவாமிமலைக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி மாலைதான் வந்தது. கல்லணையிலிருந்து ஆடிப்பெருக்கை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள தண்ணீர், கல்லணையிலிருந்து 122-வது கிலோமீட்டரில் உள்ள பூம்புகாரை அடைவதற்கு தற்போது திறக்கப்பட்டு வரும் தண்ணீரின் அளவை மேலும் அதிகப்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டியது. இதன் காரணமாக ஆறுகள், கால்வாய்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளும் கடுமையாக வறண்டிருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர. விமலநாதன்.

காவிரியாற்று கரைகளை ஒட்டியிருக்கும் ஆழ் வடிமுனை குழாய்கள்கூட தண்ணீர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. கடுமையான வறட்சியை இந்த ஆண்டு காவிரி சமவெளி மாவட்டங்கள் சந்தித்திருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. எனவே, கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கிளை ஆறுகள், வாய்க்கால்களின் கடைமடை வரை தண்ணீர் சென்று சேருவதை நீர்வளத் துறையினர் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு காவிரியாற்றில் 8,108 கன அடி, வெண்ணாற்றில் 6,010 கன அடி, கல்லணை கால்வாயில் 2,017 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 25,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதோடு முக்கொம்பில் உள்ள மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 1,03,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், முக்கொம்பிலிருந்து வரும் தண்ணீர் என கொள்ளிடம் ஆற்றில் 1,28,000 கனஅடி தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.

கொள்ளிடம்

ஆனால், காவிரி, வெண்ணாறு பகுதியில் குறைந்தளவு தண்ணீரே சென்று கொண்டிருக்கிறது. கிளை ஆறுகளிலும் பாசன வாய்க்கால்களிலும் சாதாரண விநியோக மட்ட அளவிற்காகவாவது தண்ணீர் சென்றாக வேண்டும். இதில் தண்ணீர் சென்றால்தான் ஓரளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும். குளங்கள், ஏரிகளில் தண்ணீர் நிறையும். அதனால் கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவினை உடனடியாக உயர்த்தி தர வேண்டும்.

ஒப்பீட்டளவில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் பகுதிகளில்தான் விவசாய நிலங்கள் அதிகம். அதனால் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறப்பதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் மேலாண்மை செய்வதற்கு நீர்வளத்துறை திறமையற்றதாக இருக்கிறது என்கிற அவப்பெயர் தமிழ்நாடு அரசுக்கு ஏற்படும். அதேபோல் திறக்கும் தண்ணீரில் ஓர வஞ்சனை ஏன் என்ற கேள்வியும் விவசாயிகளிடத்தில் எழுகிறது. உபரி நீர் கிடைக்கும்போதும் உரிய அளவிற்கு கிளை ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் வரவில்லையென்றால் அதற்குரிய விளக்கத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் பொது மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” என்றார்.

Also Read : வன்னியர் இடஒதுக்கீடு குறித்த ஆர்.டி.ஐ. தகவலால் சர்ச்சை! சந்தேகம் கிளப்பும் சமூக ஆர்வலர்கள்! மண்டலங்களாகப் பிரித்து இடஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை!

தண்ணீரை கடலுக்கு அனுப்ப இதுதான் காரணமா?

”கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு, நேரடியாக கடலுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் மிகமிகக் குறைந்த அளவே நீர் செல்கிறது. உண்மையில், இந்த ஆறுகளிலும் முழுக்கொள்ளளவில் நீரைத் திறந்துவிட்டிருந்தால், இந்நேரம் கிட்டத்தட்ட கடைமடைப் பகுதிகளான சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளுக்கே நீர் சென்றடைந்திருக்கும். ஆனால், குறைந்த அளவே திறக்கப்பட்டதால், திருவையாறுக்கே இப்போதுதான் தண்ணீர் வந்துள்ளது. இப்படியிருந்தால், காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணைக் கால்வாயின் கிளைகளாக இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றாறுகள் மற்றும் கால்வாய்களில் எப்படி தண்ணீர் போகும்?

தண்ணீர் வரவில்லை, தண்ணீர் வரவில்லை என்று இத்தனை நாள்களாகக் கண்ணீர் வடித்துவிட்டு, தண்ணீர் வந்த பிறகு மொத்தத் தண்ணீரையும் நேரடியாகக் கொள்ளிடத்தில் திறந்துவிட்டு கடலுக்கு அனுப்புவது என்ன நியாயம்?” என்று கண்ணீர் வடிக்கும் விவசாயிகள், இதுகுறித்து சொல்லும் காரணங்கள் அதிர வைப்பதாக இருக்கின்றன.

”ஜூன் மாதம் 12-ம் தேதியே மேட்டூர் திறக்கப்பட்டு, 20-ம் தேதி வாக்கில் கல்லணையைக் கடந்து ஆறுகளிலும் தண்ணீர் வர ஆரம்பித்துவிடும். அதற்கேற்ப தூர்வாரும் பணிகளை செய்து முடித்துவிடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு இப்போது வரை தூர்வாரும் பணிகளை ஆங்காங்கே செய்து கொண்டுள்ளனர். இதைத் தவிர, சிறுசிறு பாலங்கள் தொடங்கி, பெரிய பாலங்கள் வரை ஆளும் தி.மு.க-வினர் கான்ட்ராக்ட் எடுத்துக் கட்டிக்கொண்டுள்ளனர். அதற்கெல்லாம் பாதிப்பு வரக்கூடாது என்றுதான் தண்ணீரை முழுமையாகத் திறக்கமால் கொஞ்சம்போல திறந்துவிட்டுள்ளனர்” என்று குமுறலுடன் சொல்கிறார்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry