
திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்வது என்பது இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை உள்ளடக்கியது. ஆனால், சமீபகாலமாக சில தம்பதிகள் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் வாழ விரும்புகிறார்கள். இதைத்தான் “DINK” என்று அவர்கள் அழைக்கிறார்கள். அதாவது Double Income, No Kids.
டிங்க் என்பது என்ன?
DINK என்பது, பணிக்குச் செல்லும் தம்பதிகள், குழந்தைகள் பெறுவதைத் தள்ளிப்போடுவது அல்லது குழந்தைப் பெறவே வேண்டாம் என முடிவெடுப்பதைக் குறிக்கிறது. இவர்களிடம் செலவுகள் குறைவாக இருப்பதால், வரிகளை கழித்த பிறகு அதிகம் மீதமிருக்கும் பணத்தை (disposable income) அவர்களது விருப்பமான விஷயங்களுக்கு பயன்படுத்துவார்கள்.
Also Read : ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும்? தோல் மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!
யாரெல்லாம் இந்த வாழ்க்கை முறையைத் தேர்வு செய்கிறார்கள்?
1980 முதல் 2012 காலகட்டத்தில் பிறந்த மில்லனியல் மற்றும் ஜென் Z தலைமுறையினரே இந்த மாதிரியான வாழ்க்கை முறையை அதிகம் தேர்வு செய்கிறார்கள். ஒரு சமீபத்திய ஆய்வின் படி, 23% பேர் குழந்தை வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகள் இல்லாததால் பொருட்கள் வாங்குவது, சுற்றுலா செல்வது, பொழுதுபோக்கு மற்றும் சேமிப்பு ஆகியவையில் சுதந்திரம் கிடைத்ததாக தம்பதிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இளம் வயதினருள் பத்தில் ஆறு பேர், குழந்தை இல்லாததால் வேலைவாழ்க்கை மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்தில் வெற்றி கண்டதாகக் கூறியுள்ளனர்.
அதே ஆய்வில் 18-49 வயதுக்குட்பட்டவர்களில்:
- 57% பேர் குழந்தை வேண்டாம் என்கிறார்கள்.
- 44% பேர் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் தொழிலில் கவனம் செலுத்த விரும்புகிறார்கள்.
- 36% பேர் பொருளாதாரச் சூழல் காரணமாக குழந்தை பெறவில்லை.
சிலர் தங்கள் பெற்றோரின் மோசமான அனுபவங்களால் குழந்தை வேண்டாம் என முடிவு செய்கிறார்கள். மற்றொருபுறம், 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் சிலர் வாழ்க்கைத்துணை இல்லாதது அல்லது மனம் மாறியதற்காக குழந்தை பெறவில்லை என்கிறார்கள்.
Also Read : குழந்தையை கருவிலேயே பாதிக்கும் தந்தையின் குடிப்பழக்கம்..! எச்சரிக்கும் ஆய்வுகள்!
பொருளாதாரத்தைப் பாதிக்குமா?
DINK வாழ்க்கை முறை 1980–1990களில் மேற்கத்திய நாடுகளில் பிரபலமானது. தற்போது இந்தியாவிலும் இது பற்றி விவாதிக்கப்படுகிறது. இளம் தலைமுறையினர் பொருளாதார சுதந்திரத்துடன் வளர்ந்ததால், அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே வடிவமைக்க விரும்புகிறார்கள்.
இந்தியாவில் இதற்கு முந்தைய தலைமுறையினர் பெரும்பாலும் பெற்றோரையும் சமூகத்தையும் சார்ந்திருந்தனர். எனவே படிப்பு, வேலை, திருமணம், குழந்தைகள் பெற்றுக்கொள்வது என அனைத்தும் தீர்மானிக்கப்பட்டதாகவும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தது. தற்போதோ உலகமயமாக்கல் இளம் தலைமுறைக்கு பொருளாதார சுதந்திரத்தை அளித்துள்ளது. அதனால், இன்றைய தலைமுறையினர் இத்தகைய வாழ்க்கை முறையை விரும்புகிறார்கள் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொருளாதார ரீதியாக ஒரு தம்பதிக்கு இது உதவியாக இருக்கும் என்றாலும்கூட, இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். இந்தியா போன்ற ஒரு நாட்டில் வாழும் நாம், சரி-தவறு என இந்த விஷயத்தில் கருத்து சொல்ல முடியாது. பொருளாதார ரீதியாக நிச்சயம் சில நன்மைகள் இருக்கலாம், ஆனால் எதை இழந்து அதைப் பெறுகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தென்னிந்தியாவில் சரிந்து வரும் குழந்தை பிறப்பு விகிதமும் இங்கே கவனம் பெறுகிறது. சமீபத்திய SRS -Sample Registration Survey 2021 தரவுகள்படி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.5, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.6 ஆக உள்ளது. மக்கள் தொகையை நிலையாகப் பராமரிக்கத் தேவையான 2.1 என்ற குழந்தைப் பிறப்பு விகிதத்தைவிட இது குறைவு.
Also Read : தென் மாநிலங்களில் குறைந்துவரும் குழந்தை பிறப்பு விகிதம்! தமிழ்நாடு எதிர்கொள்ளும் சவால்கள்!
உண்மை அனுபவங்கள்
சில தம்பதிகள் திருமணத்திற்குப் பிறகு சில வருடங்கள் DINK வாழ்க்கை முறையை பின்பற்றி, பின்னர் குழந்தை பெற்றுள்ளனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் – பொருளாதார சுதந்திரம், கல்வி, தொழில்முனைவோர்கள் ஆகும் முயற்சி போன்றவை. இதே நேரம், சிலர் குழந்தை இல்லாமல் பல ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, மனதளவில் வெறுமையை உணர்ந்துள்ளனர். அந்த நிலையில் தத்தெடுக்க முடிவெடுத்தவர்கள் கூட உள்ளனர். இது ஒருவகை மனநல பாதிப்பாகக்கூட இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
மனநலக் கணக்கீடு
மனநல மருத்தவர்கள் கூறுவதாவது, சில தம்பதிகளில், இருவரில் ஒருவருக்கு குழந்தை வேண்டுமென்பது, இன்னொருவருக்கு வேண்டாமென்பது, மன அழுத்தமாக மாறும். சில நேரங்களில் விவாகரத்துக்கும் வழிவகுக்கும். அதே நேரத்தில், குழந்தைகளை வளர்த்து வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு தனிமையில் வாழும் பெற்றோரும் மனநல ஆலோசனை தேடுகிறார்கள். இதில் சரி-தவறு என்று எதையும் தீர்மானிக்க முடியாது. வாழ்க்கை முறையைத் தேர்வு செய்வது ஒவ்வொருவரின் விருப்பம். ஆனால், அதன் உண்மையான விளைவுகளையும் நன்மை-தீமைகளையும் மதிப்பீடு செய்து முடிவெடுப்பது தான் முக்கியம்.
Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &
  Tamilnadu  &  Pondicherry
  Pondicherry
