20 நாளில் 20 கொலை! லட்சக்கணக்கான கிலோ கஞ்சா! இதுதான் திராவிட மாடலா?

0
258

சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை. மாட்டுக்கறி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பதாக கூறிக்கொள்ளும் மத்திய அரசு, அதை இஸ்லாமிய நாடுகளுக்கு தான் ஏற்றுமதி செய்கிறது. அனைத்து நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும் இவர்கள் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஏன் பேச வேண்டும். அங்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு யார் பொறுப்பு! உலக நாடுகள் நம்மை கைவிட்டு தனிமைப்படுத்தப்பட்டால் பொருளாதார சிக்கல் ஏற்படும், இலங்கை போன்ற நிலை உருவாகும்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு முதலமைச்சர் தடை விதிப்பதாக கூறியிருந்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சென்னையில் நேற்று ஒரு பெண் உயிர் இழந்தும் கூட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் புகழ்பெற்ற நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

குறுக்குவழியில் அதிகப் பணம் ஈட்டுவதற்கான ஆசையைத் தூண்டி இளைஞர்களை மாய வலையில் விழவைக்கும் இணையவழிச் சூதாட்ட செயலிகள், தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்குப் பேராபத்தாக மாறி நிற்கிறது. இணையவழி சூதாட்டங்களால் பொருள் இழப்பு, நேர இழப்பு மட்டுமின்றி வாழ்வின் முன்னேற்றப் பாதையிலிருந்து இளைய தலைமுறையினரைத் திசைமாற்றுகிறது.

மேலும், நேர்மை, உண்மை, துணிவு, தன்னம்பிக்கை உள்ளிட்ட அடிப்படை மனித நற்பண்புகளை அழித்து, இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, அவர்களின் வாழ்வினையே பாழ்படுத்துகிறது என்பதும் வலிமிகுந்த உண்மையாகும். பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படும்போது எப்படி அதை விளையாட்டு என்று எடுத்துக் கொள்வது? கொலை செய்வதும் ஒரு விளையாட்டா, அரசு தலையிட்டு சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

20 நாட்களில் 20 கொலைகள் என ஓராண்டு பொறுப்பேற்றதில் இருந்து 9 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளது. ஆனால் அரசு தரப்பில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக கூறி கொள்கிறார்கள். திராவிடம் என்பது சமஸ்கிருதம்! மாடல் என்பது ஆங்கிலம்! திமுக ஆட்சி மாடல் மட்டுமே. 20 நாளில் 20 கொலை என்பது திராவிட மாடல். லட்சக்கணக்கான கிலோ கஞ்சா பிடிபட்டிருப்பது திராவிட மாடல்.” என்று சீமான் கூறினார்.

மேலும், ஈழத்திற்காக தங்களோடு சீமான் சேர்ந்து போராட வேண்டும் என அண்ணாமலை கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், “அவர் முதலாளி அல்ல, தமிழ்நாட்டுக்கு அவர் ஒரு மேஸ்திரி மட்டுமே, டெல்லிக்கு காவடி தூக்கும் ஒரு அடிமை. 8 ஆண்டுகளாக பேசாத மோடி இனிமே என்ன பேசப் போகிறார், அவரை இனிமேலாவது பேச சொல்லுங்கள். அங்கு செல்லும் போது கூட மக்களை பற்றி எதுவும் பேசவில்லை.

FILE IMAGE

பாஜக, திமுகவுடன் கூட்டணி வைக்க நடவடிக்கை எடுத்தால் அண்ணாமலையை கழட்டி விட்டு வேறு ஒரு தலைவரை போட்டு விடுவார்கள். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். கடவுச்சீட்டை முடக்கி வைத்ததை விடுவிக்க வேண்டும். எல்டிடிஇ இல்லை என்று கூறும் அவர்கள், தடையை நீக்க வேண்டும். தமிழன் என்றாலே பயங்கரவாதிகளாக பார்க்கும் போக்கு உள்ளது.

இரண்டு தலைமுறையாக முகாம்களில் வாழ்ந்து வருபவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். திபெத்தியர்கள் சலுகைகளுடன் வாழ்ந்து வருகின்றனர், இந்தியாவில் சீக்கியர்கள், பௌத்தர்கள், முஸ்லிம்களுக்கு, கிறித்தவர்களுக்கு கொடுக்கப்படும் உரிமை இந்துக்களுக்கு, ஈழத் தமிழர்களுக்கு முகாம் வாசிகளுக்கு விரும்பும் வரை வாழ இரட்டை குடியுரிமை வழங்குங்கள்” என தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry