வணிகர்களை ஒரு விழுக்காடு சந்தை வரி (Market Cess) செலுத்த ஆளாக்கியுள்ள திமுக அரசின் வணிக விரோத கொள்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வணிகர் நலன்” என்ற தலைப்பில் பல வாக்குறுதிகளை சொன்ன திமுக., அதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் வணிகர்களை எப்படி வஞ்சிப்பது என்று சிந்திப்பது “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்” உள்ளது. ஒரு வேளை இப்படி செயல்படுவதுதான் ‘திராவிட மாடல்’ போலும்.
விளைந்த விளை பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்து விவசாயிகள் பயன் பெறுவதற்குரிய விற்பனைத் தளத்தினை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பணிகள் தமிழகத்தில் உள்ள 27 விற்பனை குழுக்களின் கீழ் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், திமுக அரசு, புதிதாக பல பொருட்களை 1987 ஆம் ஆண்டைய தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் முதல் அட்டவணையில் சேர்த்து, அதனை 25-05-2022 நாளிட்ட அரசிதழ் எண் 21-ல் வெளியிட்டு இருக்கிறது.
இதன்படி, எல்லா வடிவ தானியங்களான சோளம், கம்பு, ராகி, தினை, குதிரைவாலி, வரகு, சாமை; எல்லா வடிவ பயறு வகைகளான உளுந்து, பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, பட்டாணி, மொட்சை, காராமணி, கொள்ளு; எண்ணெய் வித்துக்கள்; தேங்காய் நார் போன்ற நார்ப் பொருட்கள்; கிழங்கு வகைகள்; சுவையூட்டும் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள்; அனைத்து வகை கரும்பு வெல்லம், பனை வெல்லம், கச்சா ரப்பர், பூண்டு, மிளகாய் வத்தல் உள்ளிட்ட பல பொருட்களுக்கு ஒரு விழுக்காடு சந்தை வரி தற்போது விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே விற்பனை செய்யப்படும் விளை பொருள்களுக்கும் ஒரு விழுக்காடு சந்தை வரி விதிக்கப்பட்டு இருப்பதாகவும் வியாபாரிகளும், வணிகச் சங்கங்களும் தெரிவித்துள்ளன.
ஒரு விழுக்காடு சந்தை வரி விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் முதலில் பாதிக்கப்படுபவர்கள் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளும், பொருட்களை வாங்கும் வியாபாரிகளும்தான். இதன் காரணமாக பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும், உளுந்து போன்ற பயறு வகைகள் வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள வியாபாரிகளால் வியாபாரம் செய்யப்படுகிறது என்றும், இதற்கும் வரி கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடக்கும் வியாபாரத்திற்கு பிற மாநிலங்களில் சந்தை வரி விதிக்கப்படுவதில்லை என்றும், தமிழகத்தில் இருந்து வெளியே செல்லும் அனைத்துப் பொருட்களுக்கும் சந்தை வரி கட்ட வேண்டும் என்று சொல்வது எவ்விதத்திலும் நியாயமில்லை என்றும், ஏற்கெனவே உள்ள பொருட்களுக்கு மட்டும் சந்தை வரி வசூலிக்கப்பட வேண்டும் என்றும், புதிதாக எந்தப் பொருளுக்கும் சந்தை வரி விதிக்கக்கூடாது என்றும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடக்கும் வியாபாரத்திற்கு சந்தை வரி விதிக்கக்கூடாது என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அரசின் இதுபோன்ற நடவடிக்கை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க வழி வகுக்காது. மாறாக குறைக்க வழிவகுக்கும். திமுக அரசின் இந்த நடவடிக்கை வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரையும் பாதிக்கும் செயலாகும். திமுக அரசின் வணிக விரோத கொள்கைக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, தமிழக முதல்வர், இதில் உடனடியாக தலையிட்டு, இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தினைக் கருத்தில் கொண்டு, புதிதாக எந்த விளை பொருளையும் ஒரு விழுக்காடு சந்தை நுழைவு வரிக்கு உட்படுத்தாமல் இருக்கவும், பிற மாநிலங்களில் உள்ளது போன்று ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடக்கும் வியாபாரத்திற்கு ஒரு விழுக்காடு சந்தை வரி விதிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry