பாரதி ஒவ்வொரு தமிழனின் ஆன்மா! மகாகவியை இழித்த கயவர்களை முடக்கு! – படைப்பாளர்கள் சங்கமத்தின் அதிரடி எச்சரிக்கை!

0
62
demand-action-against-youtuber-minor-for-insulting-poet-bharathiyar
Padaippalar Sangamam strongly condemns the derogatory remarks made against Mahakavi Bharathi by YouTuber. The organisation demands immediate legal action from the DMK government to protect Tamil heritage.

“பாட்டுக்கொரு புலவன் பாரதி” என்றும், “செந்தமிழ் தேனீ” என்றும் உலகத்தமிழர்களால் கொண்டாடப்படும் யுகபுருஷன் மகாகவி பாரதியை, திராவிட இயக்கச் சார்பு நபர்கள் சிலர் அண்மையில் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் இழிவாகப் பேசியிருப்பது கண்டு தமிழினமே கொதித்துப் போயிருக்கிறது. தமிழினத்தின் அடையாளத்தைச் சிதைக்க முயலும் இந்த இழிசெயலைப் படைப்பாளர்கள் சங்கமம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நிலைகுலைந்த நீதிக்கட்சிக் வாரிசுகள்:

கடந்த 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ‘விஜில்’ அமைப்பின் விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பாரதியின் பெருமையையும், அவருக்கும் திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் உள்ள அறிவுசார் வேறுபாட்டையும் மிகத் துல்லியமாகப் பேசினார். சீமானின் அந்த ஆழமான பேச்சு திராவிட இயக்கக் கட்டமைப்பின் அடித்தளத்தையே அசைத்துப் பார்த்திருக்கிறது. இதன் விளைவாக எழுந்த விரக்தியில், சீமானை எதிர்க்கத் துணிவில்லாதவர்கள், அவர் போற்றிய மகாகவி பாரதி மீது தங்கள் நச்சுக்கருத்துக்களைக் கக்குகிறார்கள்.

‘யூ டூ புரூட்டஸ்’ – அறியாமையின் உச்சம்:

சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில், ‘யூ டூ புரூட்டஸ்’ வலையொளி நடத்தும் மைனர் என்ற அறிவிலி, எட்டயபுரத்துச் சிங்கத்தைப் பற்றித் தரம் தாழ்ந்து வசைபாடியிருப்பது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, தண்டனைக்குரியதுமாகும். தமிழ் மொழியையும், பாரத தேசத்தையும் தன் இரு கண்களாகக் கருதிய அந்தத் தேசபக்தரை, வரலாற்று அறிவற்ற தற்குறிகள் கிண்டல் செய்வதை மானமுள்ள எந்தத் தமிழனும் சகித்துக்கொள்ள மாட்டான்.

தமிழக அரசின் மௌனம் ஏன்?

பாரதியின் பெயரில் விருதுகள் வழங்குவதும், பாரதி பெயரில் பல்கலைக்கழகம் நடத்துவதும் வெறும் அரசியல் சடங்குகள்தானா? மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பாரதியை ஏளனம் செய்தபோது, தரம்தாழ்ந்து விமர்சனம் செய்தபோது அதை வேடிக்கை பார்த்தது ஏன்? பாரதிக்குச் செய்யும் பெருமை என்பது அவர் பெயரில் மணிமண்டபம் கட்டுவது மட்டுமல்ல, அவரைத் தூற்றும் கயவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதுமே ஆகும்.

திராவிடத்திற்கு முன்பே முழங்கிய புரட்சி:

பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, பகுத்தறிவு, ஏகாதிபத்திய எதிர்ப்பு – இவை எதையும் திராவிட இயக்கம் கண்டுபிடித்துவிடவில்லை. திராவிட இயக்கம் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே, சாதிப் பூணூலை அறுத்து எறிந்தவனும், “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்” எனப் பெண்மையைப் போற்றியவனும் பாரதிதான். ஆங்கிலேயனின் சிறைக்கும் சித்திரவதைக்கும் அஞ்சாமல், “சுதந்திர தேவியின்” புகழ் பாடிய அந்தப் புரட்சிக்காரனை, சிறை செல்ல அஞ்சியவன் என்று ஒரு கோழை விமர்சிப்பதை அந்த மேடையிலேயே எவரும் தடுக்கவில்லை என்பதுதான் வேதனையின் உச்சம்.

படைப்பாளர்கள் சங்கமத்தின் எச்சரிக்கை:

தமிழ் இலக்கியத்தின் பொற்காலப் பாலம், இதழியல் உலகின் முன்னோடி, நாட்டு விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த பாரதியை அவமதிப்பது, நம் தாய்மொழியாம் தமிழை அவமதிப்பதாகும்.

  • தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்: மகாகவி பாரதியை இழிவாகப் பேசிய அந்த நபர் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை: பாரதியைப் போற்றும் மத்திய அரசு, தேசபக்தி மிக்க ஒரு யுகபுருஷனைத் தூற்றும் தீய சக்திகளை ஒடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

“ரௌத்திரம் பழகு” என்று பாடிய அந்தப் பாட்டுடைத் தலைவனுக்காக, ஒவ்வொரு தமிழனும் அறச்சீற்றத்துடன் வீதியில் இறங்க காத்திருக்கிறார்கள். பாரதியைச் சிறுமைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், தமிழகத்தின் மானமுள்ள இளைஞர்கள் பாரதியின் கவிதைகளையே ஆயுதமாக ஏந்தி எதிர்வினை ஆற்றுவார்கள்! ‘யூ டூ புரூட்டஸ்’ மைனர் தற்குறி மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம்!”
படைப்பாளர்கள் சங்கமம் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry