
சென்னையில் பெரும்பாக்கத்தை ஒட்டியுள்ள, சர்வதேச ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில், சட்டத்துக்குப் புறம்பாக ₹2000 கோடி மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட, அரசு நிர்வாகமே அனுமதி வழங்கியுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களையும், ராம்சார் ஒப்பந்தத்தையும் மீறிய செயல் என அறப்போர் இயக்கம் கடுமையாகக் குற்றம் சாட்டியது. இது குறித்து சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதன்பிறகே பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் அறிக்கை வெளியானது.
Also Read : பள்ளிக்கரணை ராம்சார் நில ஊழல்: ₹250 கோடி லஞ்சம்? பெரும் சிக்கலில் 3 அமைச்சர்கள், அதிகாரிகள்?
இந்த குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அளித்துள்ள விளக்கத்தில், “ஈரநில விதிகளின்படி பள்ளிக்கரணை ஈரநில அறிவிப்பு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண்கள் பட்டா நிலங்கள் என்பதால், செய்தித்தாள் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ராம்சர் தல எல்லை வரையறையானது, குறிப்பிட்ட சர்வே எண்களுடன் ஒப்பிட்டு பரப்பளவை வரையறுப்பது, நில உண்மைகண்டறிதல் சோதனை மற்றும் அறிவிப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.
ராம்சர் தலம் அமையும் நிலங்கள் இன்னும் புல எண்களுடன் குறிப்பிடப்பட்டு வரையறுக்கப்படாததால், தற்போதைய பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காட்டு எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.” என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள அறப்போர் இயக்கம், “ராம்சர் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் குறித்த அரசின் விளக்கம், பதில்களை விட அதிக கேள்விகளையே எழுப்பியுள்ளது. உண்மையில், அது எங்கள் குற்றச்சாட்டுகளை மேலும் வலுவாக உறுதிப்படுத்தியுள்ளது. பிரச்சனைக்குரியதாக அறியப்படும் இடம் ராம்சர் எல்லைக்குள் வரவில்லை என்று அரசு கூறவில்லை. மாறாக, ராம்சர் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ‘அதிகாரப்பூர்வமாக’ வரையறுக்கப்படல்லை என்று கூறவே முயன்றுள்ளது. இது, சதுப்பு நிலங்களைக் காப்பாற்ற அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது. சதுப்பு நிலங்களைக் காப்பாற்றுவதில் அரசுக்கு ஆர்வம் இல்லாவிட்டால், ராம்சர் அங்கீகாரத்தின் நோக்கம் என்ன?

முதல் விளக்கம்: ராம்சர் விதிகள் உடனடியாகப் பொருந்தும்
முதலாவதாக, ராம்சர் நிலங்கள், சதுப்பு நிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017-இன் கீழ் வருவதற்குத் தனியாக அறிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. பதிவிடப்பட்ட தேதியிலிருந்து (ஏப்ரல் 8, 2022) அது ராம்சர் நிலங்கள் ஆகும். ராம்சர் அல்லாத மற்ற சதுப்பு நிலங்கள் மட்டுமே, தனித்தனியாக அறிவிக்கப்பட வேண்டும் மற்றும் அந்த அறிவிப்புத் தேதியிலிருந்து விதிகள் பொருந்தும்.
இரண்டாவது விளக்கம்: அறிவிப்பு எல்லைகளைப் பிரிப்பதற்காகவே
அனைத்து ராம்சர் தலங்களும் பதிவிடப்பட்டவுடன் தானாகவே விதிகளின் கீழ் வந்துவிடுகின்றன. தலத்தின் எல்லைகள் சரியாகப் பிரிக்கப்படுவதையும், அது குறித்த தகவல்கள் பொதுத் தளத்தில் கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்பது விதி. எனவே, நிரந்தர கட்டுமானம் எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்ற விதி, பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து ராம்சர் நிலத்தின் சர்வே எண்களுக்குப் பொருந்தும்.
யானையைச் சோற்றில் மறைக்கும் முயற்சி
இது தவிர, ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டச் செயல்பாட்டை அரசு 3 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதப்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது. NCSCM செய்துவரும் சர்வே எண்களின் எல்லையைப் பிரிக்கும் பணியால், வரைபடத்தில் உண்மையான எல்லை ஓரிரு அங்குலங்கள் மாறலாம், ஆனால் அது ராம்சர் சர்வே எண்களை மாற்ற முடியாது.

பிரிகேட் நிறுவனத்தின் சர்வே எண்களும், முழு 14.7 ஏக்கர் நிலமும் மாநிலச் சதுப்பு நில ஆணையத்தின் அசல் வரைபடத்தில் மட்டுமல்லாமல், அக்டோபர் 2025-இல் வெளியிடப்பட்ட CMDA-இன் சமீபத்திய வரைபடத்திலும் ராம்சர் எல்லைக்குள் தெளிவாக உள்ளன! எனவே, அரசின் முயற்சி சோற்றுப் பானைக்குள் யானையை மறைக்க முயற்சிப்பதற்குச் சமமேயாகும்.
அரசின் சொந்த ஒப்புதலின்படி, 698 ஹெக்டேர் மட்டுமே பள்ளிக்கரணை சதுப்பு நிலமாக வனத்துறையிடம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியானால், இன்று தனிநபர்களின் கைகளில் உள்ள மீதமுள்ள 550 ஹெக்டேரை ஏன் தமிழக அரசு ராம்சர் பகுதியாகச் சேர்த்து, மொத்தமாக 1247 ஹெக்டேராக ஆக்கி, ஏப்ரல் 2022-இல் நியமித்தது?
அதற்குக் காரணம், இன்று தனியார் கைகளில் உள்ள இந்த நிலங்கள் அனைத்தும் அசல் சதுப்பு நிலத்தின் பகுதிகளே ஆகும்; அவை வெவ்வேறு காலகட்டங்களில் சட்டவிரோதமாகப் பட்டா வழங்கப்பட்டவை. அரசு தனது தவறை உணர்ந்து, பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் (Brigade Morgan Heights) திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் திட்ட ஒப்புதலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
