சென்னையில், கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு மருத்துவராக பணியாற்றி வருபவர் பாலாஜி. இன்று(13.11.2024) காலை பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை, தனது தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி விக்னேஷ் என்ற இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
கழுத்து, முதுகு, நெற்றி, காதின் பின்புறம் என 7 இடங்களில் மருத்துவருக்கு படுகாயம் ஏற்பட்டு ரத்தம் அதிகளவு வெளியேறியுள்ளது. ரத்தவெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே இதய நோயாளியான அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள், மருத்துவமனை காவலாளிகள் சேர்ந்து மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் என்ற இளைஞரை பிடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து கிண்டி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்துக்கு விரைந்து வந்த கிண்டி போலீஸார், பிடிபட்ட பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த மருத்துவமனையில் அவரது தாயாருக்கு கொடுத்த சிகிச்சை குறித்து தவறான புரிதலின் காரணமாக தாக்குதல் நடத்தியதாக விக்னேஷ் விசாரணையின்போது கூறியதாக தெரிகிறது.
தலைநகர் சென்னையில் பரபரப்பு மிகுந்த முக்கியமான மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கிண்டி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம் அரசு மருத்துவமனை வளாகத்திலும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதேபோல தமிழ்நாட்டின் பல இடங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் அரசு மருத்துவமனைக்குள் ஆயுதங்களுடன் புகுந்து அரசு மருத்துவரை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் அறிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் அரசு புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில், அவசரகால சிகிச்சை மற்றும் உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து, மற்ற அனைத்துத் துறைகளிலும் அரசு மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும்.
சென்னையில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலமாக மருத்துவர்கள் மீது தாக்குதல் நடந்த வண்ணம் உள்ளது. கடுமையான மருத்துவச் சட்டங்களால் மருத்துவமனைகள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது, ஆனால் மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் குறையவில்லை. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சங்கத்திடம் பேசிவருகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்குக் கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது” என்று காட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி. விஜயபாஸ்கர், டி. ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, வைகைச் செல்வன் உள்ளிட்டோர் டாக்டர் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
சென்னை கிண்டிஅரசு மருத்துவமனையில்,
புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.ஏற்கனவே கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல்… pic.twitter.com/cYtOx8ByYX
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) November 13, 2024
சென்னையில் கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவருக்கு கத்திக்குத்து விவகாரத்தில், தமிழகத்தில் திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அப்பாவி பொதுமக்களில் தொடங்கி மருத்துவர்கள் வரை யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத் தான் இந்த நிகழ்வு காட்டுகிறது.
இத்தகைய கொடுமைகள் ஒருபுறம் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து வருவது குரூரமான நகைச்சுவை ஆகும். கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கிண்டி சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள், சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவர் ஹரிஹரனை நோயாளி ஒருவர் தாக்கியுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நெல்லை அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், வேலூர் அரசு மருத்துவமனையில், மருத்துவப் பயிற்சி மாணவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்.
கடந்த வாரம், திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில், மருத்துவர் மீது, திமுக உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்காமல், உரிய நடவடிக்கை எடுப்போம் என்று மட்டுமே முதலமைச்சர் கூறிவருவதாக மருத்துவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry