சென்னையில் பேட்டர்சன் புற்றுநோய் சிகிச்சை மையமும், புற்றுநோய் ஒழிப்பு அறக்கட்டளையும் இணைந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் கண்டறிதல் இலவச முகாமை சென்னையில் ஒருமாதம் நடத்த உள்ளது.
உலக நாடுகளின் வரிசையில் புற்றுநோய் பாதிப்பு பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக சராசரியை விட இந்தியாவில் அதிகமாக உள்ளது, இந்த நிலை தொடர்ந்தால், இந்தியா விரைவில் ‘உலகின் புற்றுநோய் தலைநகராக’ மாறும்.
2022 ஆம் ஆண்டில், 14.1 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 9.1 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இதில் மார்பக புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையே மிகவும் அதிகமாக உள்ளது, இது புற்றுநோய் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் வாய் புற்றுநோயால் இந்தியாவில் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
மார்பகப் புற்றுநோயில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. மார்பகப் புற்றுநோய் கடந்த 5 ஆண்டுகளில் 4 சதவிகிதத்தில் இருந்து 14 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 28 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய், 53 பெண்களில் ஒருவருக்கு கர்ப்பபை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. மரபணு மூலம் 14 சதவீதமே புற்று நோய் பாதிக்கக்கூடும்.
Also Read : மருந்தாக பயன்படுத்தப்பட்ட புகையிலை, போதைக்கானதாக மாறியது எப்படி? புகைப்பழக்கத்தால் 4 வினாடிக்கு ஒரு மரணம்!
கடந்த ஆண்டு இந்தியாவில் பதிவான புற்றுநோய் பாதிப்பு 19 முதல் 20 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலவரம் இதைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பான FICCI கூறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையிலும், புற்றுநோயின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. புற்றுநோய் வகைகளை ஒப்பிடும்போது, தமிழகத்தில் ஆண்களுக்கு வயிற்றுப் புற்றுநோய், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பதாக தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இந்தியாவில் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் உள்ள முக்கிய சவால் என்னவெனில், தாமதமான நோயறிதல், சுகாதார வசதிகளுக்கு போதுமான முக்கியத்துவம் தராதது, புகையிலைப் பொருட்கள் பயன்பாடு, அதிக சிகிச்சை செலவுகள் மற்றும் தொடக்கநிலை கண்டறிதலில் உள்ள தேக்கம், வரையறுக்கப்பட்ட விழிப்புணர்வு இருந்தும் அதைப் பின்பற்றாதது ஆகியவை அடங்கும்.
புற்றுநோய் வந்தால் குணப்படுத்த முடியாது என துவண்டு விடுவது உடலை இன்னும் பலவீனப்படுத்தும். புற்றுநோய் வந்தாலும் மீண்டுவிடலாம் என்ற மன உறுதி வேண்டும். புற்றுநோய் கட்டிகளை துவக்கத்திலேயே கண்டறிந்து விட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம். எனவேதான் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பேட்டர்சன் புற்றுநோய் சிகிச்சை மையமும், புற்றுநோய் ஒழிப்பு அறக்கட்டளையும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் “புற்றுநோய் இல்லாத சமூகம்” என்ற பரந்துபட்ட பார்வையை நிறுவ, பேட்டர்சன் புற்றுநோய் சிகிச்சை மையம் கடுமையாக முயற்சி செய்து, ஏராளமான புற்றுநோய் கண்டறிதல் முகாம்கள் மற்றும் “பொதுமக்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு திட்டம்” ஆகியவற்றை, புற்றுநோய் ஒழிப்பு அறக்கட்டளையின் (CALF – CANCER ALLEVIATION FOUNDATION) ஆதரவுடன் நடத்துகிறது.
தற்போது 19-ந் தேதி தொடங்கி ஒருமாதம் புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடைபெறவுள்ளது. நாளொன்றுக்கு 60 நபர்கள் வீதம் சற்றேறக்குறைய 2000 ஏழைகளுக்கு புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனை இலவசமாக செய்யப்பட உள்ளது. முகாமை நடத்த குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் நிதி தேவைப்படுவதாக அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பி.டி. கோவிந்தராஜன் கூறியுள்ளார். இதற்கு தங்களால் ஆன நன்கொடை வழங்கலாம். இது 80G வரி விலக்கு சான்றளிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். நன்கொடை வழங்குவோர் உரிய விவரங்களைத் தெரிவித்தால், 80ஜி விலக்குடன் கூடிய ரசீது அனுப்பி வைக்கப்படும் என பி.டி. கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார். நன்கொடை அளிக்க விரும்புவோர், Cancer Alleviation Foundation, Bank Name: Indian Overseas Bank SB A/c no. 006001000036497, IFSC code. IOBA0000060. Pan Number: AAATC5695H என்ற வங்கிக் கணக்கில் தொகையை செலுத்தலாம்.
சென்னையில் வடபழனியில் உள்ள விஜயா ஹெல்த் சென்டர் வளாகத்தில், மூத்த மருத்துவர் எஸ். விஜயராகவன் நிறுவியுள்ள பேட்டர்சன் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் 20 ஆண்டுகளாக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், மையம் நிறுவப்பட்ட 21வது ஆண்டின் தொடக்க நாளான வரும் 19ந் தேதி புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் கண்டறிதல் இலவச முகாம் நடைபெற இருக்கிறது. (தொடர்புக்கு – 9962577181 / 755022110)
இதற்கான நிகழ்ச்சி 19ந் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. டாக்டர் நஸீமா மரக்காயர் காணொலி வாயிலாக துவக்க உரையாற்றுகிறார். இண்டஸ் இண்ட் வங்கியின் மண்டல தலைவர் ஆர். கணேசன்; பாடலாசிரியர், எழுத்தாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட ‘கலைமாமணி’ இசைக்கவி ரமணன்; இசையமைப்பாளரும் – நடிகருமான மதன் பாப் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர். பேட்டர்சன் கேன்சர் மைய மேலாண் இயக்குநரும், மூத்த மருத்துவருமான டாக்டர் எஸ். விஜயராகவன் வரவேற்புரையாற்ற, CALF நிர்வாக அறங்காவலரான பி.டி. கோவிந்தராஜன் நன்றி கூற உள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry