தமிழகத்தில் ‘பீகார் காற்று’ வீசுகிறதா? – கோவை இயற்கை வேளாண் மாநாட்டு மேடையில் மோடி கேட்ட அதிரடி கேள்வி!

0
8
modi-speech-bihar-wind-farm-exports
PM Modi inaugurated the Organic Farming Conference in Coimbatore, releasing the 21st instalment of the Kisan Scheme (₹18,000 Cr) to 9 crore farmers. He mentioned the 'Bihar Wind' on stage. PM Modi spoke on making India a global hub for organic farming and the doubling of farm exports in the last 11 years.

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் மூன்று நாள்கள் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மாநாட்டில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருள்கள் இடம்பெற்ற 17 அரங்குகளைத் திறந்து வைத்த மோடி, விழா மேடையில் நாட்டின் 9 கோடி விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் 21-வது தவணையை விடுவித்தார். அதைத்தொடர்ந்து மோடி உரையாற்றினார்.

“நான் இங்கே மேடையில் வந்தபோது பல விவசாய வேளாண் குடிமக்கள் தங்களுடைய மேல் துண்டை சுழற்றிக் கொண்டிருந்தார்கள். பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் எண்ணியது. மருதமலையில் குடி கொண்டிருக்கும் முருகனை நான் தலை வணங்குகிறேன். கோயம்புத்தூர் என்பது கலாச்சாரம், கனிவு, படைப்புத்திறன் ஆகியவற்றை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட பூமி.

இந்த நகரமானது தென் பாரதத்தின் தொழில் முனைவு ஆற்றலின் சக்தி பீடம். இங்கிருக்கும் ஜவுளித்துறை தேசத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு அளிக்கக் கூடியது. இங்கே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைதலைவராக வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். இயற்கை விவசாயம் என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. ஒருவேளை நான் இங்கு வராமல் போயிருந்தால், பல விஷயங்களை நான் தெரிந்து கொள்ளாமல் போய் இருப்பேன், என்னுடைய கற்றல் குறைந்து போயிருக்கும்.

இயற்கை விவசாயத்தின் உலகளாவிய மையப்புள்ளியாக ஆகும் பாதையில் பாரதம் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. தேசத்தின் இளைஞர்கள் விவசாயத்தை நவீனமானதாக காணத் தொடங்கியிருக்கின்றனர். இதனால் ஊரகப்பகுதி பொருளாதாரம் மேம்படும். கடந்த 11 ஆண்டுகளில் நம் வேளாண் ஏற்றுமதி இரட்டிப்பாகியிருக்கிறது. விவசாயிகள் கடன் அட்டைகள் மூலமாக மட்டும் இந்த ஆண்டு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.

உயிரி உரங்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக ஆதாயங்கள் கிடைத்திருக்கின்றன. இப்போது சற்று நேரம் முன்பாக இந்த மேடையில் இருந்து விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவக் கொடையின் அடுத்த தவணை கொண்டு சேர்க்கப்பட்டது. தேசத்தின் அனைத்து மூலைகளில் இருக்கும் விவசாயிகளுக்கும் 18,000 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் பல லட்சம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை இந்த திட்டத்திற்கு உட்பட்டு தேசத்தின் சிறு விவசாயிகளுக்கு நான்கு லட்சம் கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது. இயற்கை வேளாண்மை விரிவாக்கம் 21-ம் நூற்றாண்டின் தேவை. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் அதிகளவு பயன்பாடு காரணமாக மண்ணின் வளம் வீழ்ச்சியடைகிறது. விவசாயத்தின் செலவினமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. இதற்கானத் தீர்வு பயிர்களின் பன்முகத்தன்மை மற்றும் இயற்கை வேளாண்மை மட்டுமே.

இயற்கை வேளாண்மைப் பாதையில் நாம் முன்னேறியாக வேண்டும் என்பதே நம் தொலைநோக்குப் பார்வை. தமிழ்நாட்டில் 35,000 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு தேனும் திணை மாவையும் நிவேதனப் பொருள்களாக படைக்கின்றோம். ஒற்றைப் பயிருக்கு பதிலாக பல்வகைப் பயிர் வேளாண்மை இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இதன் மீது மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம் தென்னிந்தியா. இந்த மண்ணில் ஆயிரம் ஆண்டுகளாக அறிவியல் பூர்வமான நீர் பொறியியல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்தை வேளாண் பாடத் திட்டத்தில் முக்கிய பங்காக்குங்கள் என்று அறிவியலாளர்களிடமும், ஆய்வு நிறுவனங்களிடமும் வேண்டிக் கொள்கிறேன். இயற்கை விவசாயத்தை அறிவியல் சார்புடைய இயக்கமாக ஆக்க வேண்டும். நம் விவசாயிகளின் பாரம்பரிய ஞானம், அறிவியலின் பலம், அரசாங்கத்தின் ஆதரவு ஆகிய மூன்றும் இணையும்போது விவசாயிகள் தன்னிறைவு அடைவார்கள்” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி 9 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry