தமிழை வளர்ப்பதாக முதலமைச்சர் நாடகம்! ‘ரூ’ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடாது! டாக்டர் ராமதாஸ் கண்டனம்!

0
17
Dr. Ramadoss has accused the Chief Minister of merely pretending to promote Tamil. Read the full controversy and political reactions here. Pic. - TN CM M.K. Stalin & PMK Founder Dr. Ramadoss.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத் தான் நிதிநிலை அறிக்கைக்கான இலட்சினையில் ‘ரூ’ அடையாளத்தை வைத்திருந்தோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தமிழை இந்த அரசு தேடிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்த அணுகுமுறையை வைத்துக் கொண்டு அன்னைத் தமிழுக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது.

ஆணிவேரில் அமிலத்தை ஊற்றி விட்டு, துளிருக்கு குடை பிடிக்கும் வேலையைத் தான் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. அன்னைத் தமிழை வளர்ப்பதற்கோ, மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்டுவதற்கோ ‘ரூ’ போடத் தேவையில்லை. மாறாக அன்னைத் தமிழை வளர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதுமானது. அதை செய்யாமல் ‘ரூ’ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடாது.

Dr. Ramadoss questions the Chief Minister’s commitment to Tamil, calling it a political stunt.

உலகில் பொருளாதார அடிப்படையில் வளர்ச்சியடைந்த முதல் 10 நாடுகளில் இந்தியாவின் தமிழ்நாட்டைத் தவிர மீதமுள்ள அனைத்து நாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது; தாய்மொழி கட்டாயப்பாடமாக கற்பிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே தமிழ் படிக்காமலும், தமிழில் படிக்காமலும் பட்டம் பெற முடியும் என்ற அவலநிலை நிலவுகிறது. இந்த அவலத்தைத் துடைத்தெறியாமல் தமிழை வளர்ப்பதாகக் கூறுவதெல்லாம் நாடகம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

தமிழை எட்டாம் வகுப்பு வரையிலாவது பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 1999-ஆம் ஆண்டில் சென்னையில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டனர். அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி தமிழை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்றத் தவறிய அன்றைய கருணாநிதி அரசு, அதற்கு பதிலாக ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் தமிழை பயிற்று மொழியாக்கி அரசாணை பிறப்பித்தது. ஆனால், அடுத்த 5 மாதங்களில் அந்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. அதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு 25 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது.

Also Read : விளம்பர பட்ஜெட்..! காகித பட்ஜெட்..! ஏமாற்றுகிற பட்ஜெட்..! வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து விவசாயிகள் கொந்தளிப்பு!

தமிழை பயிற்று மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய திமுக அரசு, 2006ஆம் ஆண்டில் முதன் முதலில் சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகம் செய்து அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்தது. இன்று வரை அதன் தமிழ்த் துரோகம் தொடர்கிறது.

தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்குவதற்கான சட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டில் எனது வலியுறுத்தலால் அன்றைய முதல்வர் கருணாநிதியால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டப்படி 2015-16ஆம் ஆண்டில் மாநிலப் பாடத் திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப் பாடமாகியிருக்க வேண்டும். ஆனால், தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கால் அது சாத்திமற்றதாகி விட்டது. தனியார் பள்ளிகளின் திட்டத்தை முறியடிக்க அன்றைய அதிமுக அரசு தவறி விட்டது.

தமிழ்நாட்டில் இன்னும் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கையும் விரைவாக விசாரணைக் கொண்டு வந்து தமிழைக் கட்டாயப்பாடமாக்க எந்த நடவடிக்கையையும் இன்றைய அரசு மேற்கொள்ளவில்லை.

மொழி விஷயத்தில் உணர்ச்சிகளைத் தூண்டுவது அரசியல்; ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது தான் தீர்வு என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். உணர்ச்சி அரசியலைத் தெரிந்தே செய்தால் அதைக் கைவிட்டு ஆக்கப்பூர்வ அரசியலுக்கு மாற வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து தமிழைக் கட்டாயப்பாடமாக்க வேண்டும். பள்ளி இறுதிவகுப்பு வரை தமிழைப் பயிற்றுமொழியாக்க நடப்புச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry