
அமாவாசையை முன்னிட்டு அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் சார்பில் மதுரை தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவிலில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், “ஸ்டாலின் அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லை. மக்களுக்கும் ஆட்சிக்கும், இடைவெளி உள்ளது, இதைத்தான் எடப்பாடியார் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார்.
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை மூலம் இந்த சதிக்கு யார் காரணம் என்பது தெளிவாக வெளிவரும். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் மீது சந்தேக பார்வை உள்ளது. பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று விஜய் பாடும்போதுதான் அவர் மீது செருப்பு விழுந்தது. அதேபோல ஆம்புலன்ஸ் சென்றது. கரூர் சம்பவத்தில் டிஜிபி, ஏடிஜிபி, முதலமைச்சர் ஆகியோரின் அறிக்கை முரண்பாடாக உள்ளது.
திமுகவை வீழ்த்தும் சக்திகள் எடப்பாடியாரின் பின்னால் அணி திரள வேண்டும். நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஜெயிக்க முடியும், இல்லையென்றால் முடிவு வேற விதமாக அமைந்துவிடும். சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி சரியாக முடிவெடுக்கவில்லை. ஆனால் பவன் கல்யாண் சரியான முடிவு எடுத்து இன்றைக்கு ஆந்திராவில் துணை முதலமைச்சராக உள்ளார்
ஐக்கிய நாடுகள் சபையில் கஜித்த வைகோ, கருணாநிதி மீது பழி சுமத்தி தனி கட்சி தொடங்கினார் அப்போது அவர் பின்னால் இளைஞர்கள் வந்தார்கள். சில தவறான முடிவால் கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்ற முடியாத நிலையில் அவர் உள்ளார். விஜய் நல்ல முடிவை எடுப்பார் என்று மக்களும், அவரது தொண்டர்களும் எதிர்பார்த்து உள்ளார்கள். அவருக்கு நல்ல வாய்ப்பு உள்ளது, அதை அவர் நழுவவிடக்கூடாது.
அதிமுகவுடன் விஜய் பயணம் செய்ய வேண்டும். அதுதான் மக்கள் எண்ணமாக உள்ளது. திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் சேர வேண்டும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மட்டுமல்லாது, த.வெ.க-வையும் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.
Also Read : சென்னையில் தங்கம் விலை பவுன் ₹1 லட்சத்தை நோக்கிப் பாய்ச்சல்! விலை உயர்வுக்கு டிரம்ப் காரணமா? நகை வாங்கலாமா?
தைவான் நாட்டைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ஸ்டாலினை சந்தித்தார், இதனைத் தொடர்ந்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 15,000 கோடி அளவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்கிறது. இதனால் 14,000 பேருக்கு வேலை வய்ப்பு கிடைக்கும், பொறியாளர்கள் எல்லாரும் தயாராக இருங்கள் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.
முதலமைச்சரோ ஒரு படி மேலே சென்று இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்றும், தெற்கு ஆசியாவில் உற்பத்தியில் புதுமை மையமாக தமிழ்நாடு உள்ளது என்றும் கூறினார். ஆனால் பூனைகுட்டி வெளிவந்தது போல ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் புதிய முதலீடு எதுவும் செய்யப்படவில்லை என்று கட்டுச்சோற்றை அவிழ்த்துவிட்டனர்.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பது போல, திமுக புளுகு அரை நாள் என்பதை ஃபாக்ஸ்கான் நிறுவனம் அம்பலப்படுத்தி உள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி கேட்ட பொழுது, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் வேறு நிறுவனம் முதலீடு செய்துள்ளது என்று அமைச்சர் கூறுகிறார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் தான் அமைச்சர் பேச்சு உள்ளது.
இதுவரை தமிழகத்திற்கு எவ்வளவு முதலீடு வந்துள்ளது, எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது? என்று எடப்பாடியார் வெள்ளை அறிக்கை கேட்டால், அதற்கு வெள்ளைத்தாளை அதிபுத்திசாலித்தனமாக காண்பிக்கிறார் அமைச்சர் ராஜா.
தமிழ்நாட்டில் 2011 முதல் இருமல் மருந்து கம்பெனிகளை தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வந்தோம். ஆனால் தமிழக அரசு கண்காணிக்கவில்லை. இதனால் 35 குழந்தைகள் இறந்துவிட்டனர். கோல்ட்ரிஃப் மருந்தை உலக சுகாதார அமைப்பு கூட தடை செய்துள்ளது. ஆனால் இதுபற்றி அமைச்சர் மா.சு. பொறுப்பில்லாமல் பேசி வருகிறார். தாங்கள் செய்த தவறை நியாயப்படுத்தும் வகையில் அவர் பேசுகிறார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. வடகிழக்கு பருவமழையால் தேனி அதிக அளவில் பாதிப்பு அடைந்து வருகிறது, இதுவரை ஒரு அமைச்சரும் நேரில் பார்க்கவில்லை. கடந்த 2022, 2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அப்போது நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் தியாகராஜன், வானிலை கண்காணிப்பு கருவி வாங்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். அந்தக் கருவி வாங்கப்பட்டதா என்று தெரியவில்லை?
முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் ரோடு ஷோ நடத்துகிறார். தற்பொழுது வட கிழக்கு பருவ மழையில் சாலைகள் எல்லாம் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மக்கள் தத்தளிக்கிறார்கள். முதலமைச்சர் ரோடு ஷோ நடத்தி நிலைமை கண்டறிய முன்வருவாரா?” இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry