காங்கிரஸில் ஆரம்பமானது தேர்தல் குஸ்தி! வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னரே சத்தியமூர்த்தி பவனில் போராட்டம்!

0
9

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்னரே பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெறுகிறது.

வேட்பாளர் பட்டியல் தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் மூன்று கோஷ்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி ஒரு தரப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர். விளவங்கோடு தொகுதியில் விஜயதரணியை வேட்பாளராக களமிறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஒரு கோஷ்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து விஷ்ணு பிரசாத் கூறும்போது, ”காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களது உறவினர்களுக்குத் தொகுதியைக் கேட்டுப் பெறுகிறார்கள். தமாகாவிலிருந்து விலகி மீண்டும் காங்கிரசில் இணைந்தவர்களுக்கு தொகுதி வழங்கப்படுகிறதுஎன்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கமர்ஷியல் கமிட்டி!

அதேநேரம், தேவையின்றி களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனிலேயே போட்டி உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சியில் வாரிசுகளுக்கும், பண பலத்துக்குமே முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்று மாநில மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவி ஜான்சிராணி குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல், பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெற முடியும் என்பது அக்கிரமம் என கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார். தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை அவர் சாடியுள்ளார்.

ஆனால், விஷ்ணு பிரசாத்தை எம்.பி மாணிக்கம்தாகூர் டிவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார். தனது தந்தையால் MLA, MP பதவி வாங்கியவர்கள், இப்போது மகன்களுக்கு கூடாது என தொண்டர்களை ஏமாற்றலாமா? அல்லது, பாஜக + அதிமுகவுக்கு உதவ இந்த குழப்பமா? என அவர் கேட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்னரே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியல் வெளியிடப்பட்டால் இன்னும் என்னவிதமான போராட்டங்கள் வெடிக்குமோ, அது, தேர்தலில் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்துமோ என தலைவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். காங்கிரஸாரின் இந்த கோஷ்டி மோதல் திமுகவினரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry