கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பொதுமக்கள் சுமார் 5,000 பேர் அதிபர் ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.
2019-ல் ராஜபக்சே ஆட்சி இலங்கையில் அமைந்த பிறகு, 2020 கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டது. தற்போது அந்த நெருக்கடியை விடவும் மிகக் கடினமான பொருளாதார வீழ்ச்சியை இலங்கை எதிர்கொண்டு வருகிறது. மின்வெட்டு, இணையதளம் துண்டிப்பு, கொரோனாவால் சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்றவை ஒட்டுமொத்த இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது.
கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய அந்நிய செலாவணியை கரைத்ததால், இலங்கையின் பண மதிப்பு செல்லாக்காசாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனால், மலிவு பொருட்களை வாங்குவதற்கு கூட நிறைய பணத்தை செலவழிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தொழில்கள் முடங்கிவிட்டன. கொரோனாவால் சுற்றுலாத்துறை ஸ்தம்பித்துவிட்டது. தேயிலை, ஆடைகள் ஏற்றுமதி சரிவால் அந்நியச் செலாவணி கையிருப்பு வறண்டு போய்விட்டது. கடனை திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு திவாலான நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது.
இதனால் நாளுக்கு நாள் இலங்கை மக்களுக்கு பிரச்னை கூடிக் கொண்டே போகிறது. பெட்ரோல், டீசல் தொடங்கி காகிதம் வரை அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் கடும் விலை உயர்வை சந்தித்துள்ளது. நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 13 மணிநேரம் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. சாலைகளில் மின் விளக்குள் நிறுத்தப்பட்டே உள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு கூட நீண்ட வரிசையில் காத்திருந்தும் அது கிடைக்காத நிலையே நீடிக்கிறது. இப்படி விலைவாசி உயர்வு, எரிபொருட்கள் தட்டுப்பாடு, நாள் முழுவதும் நீடிக்கும் மின் வெட்டு ஆகியவற்றால் இலங்கை மக்கள்நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்த ஆத்திரமும் தற்போது அதிபர் கோட்டபய ராஜபக்ச மீது திரும்பியிருக்கிறது.
அதிபர் பதவி விலகி மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்ற முழக்கத்துடன் கொழும்புவின், மிரிஹானயில் உள்ள அதிபர் இல்லம் அருகே பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். காவல்துறையினரும், ராணுவத்தினரும் மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினார்கள். இதனால் மேலும் ஆத்திரமடைந்த மக்கள், கற்கள், காலணிகள் என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வீசி காவல்துறையினருக்கு பதிலடி கொடுத்துள்ளனர். அதிபர் வீடு அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்கும் தீ வைத்து, தங்களது ஆத்திரத்தை கொட்டியிருக்கிறார்கள்.
ஆனால், அதிபர் கோட்டபய ராஜபக்சவோ தனது இல்லத்தை விட்டு பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சி பரவுவதை தடுக்க பல இடங்களில் இணையதளமும், மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் ஜூப்ளி சந்திப்பில் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என அதனை விரிவாக்கம் செய்தவர் கோட்டபய ராஜபக்ச. தற்போது அந்த விஸ்தாரமான பகுதியில் தான் அவருக்கு எதிராகவே போர்கொடி உயர்த்தியிருக்கிறார்கள் பொதுமக்கள். தலைநகரில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், கொழும்பு நகரின் வடக்கு, தெற்கு, மற்றும் மத்திய நுகேகொட காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry