தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. அதிலும் கடந்த தேர்தலில் பாஜகவால் பெரும்பான்மை பெற முடியவில்லை. அங்கு பாஜக எப்படி ஆட்சியை அமைத்து என அனைவருக்கும் தெரியும். எனவே தென்மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்த ‘மிஷன் சவுத்’ என்ற திட்டத்தை பாஜக கையிலெடுத்துள்ளது.
2024 மக்களவை தேர்தலைக் குறி வைத்து பாஜக வேலைகளில் இறங்கிவிட்டது. வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. பாஜகவுக்கு சவாலாக இருப்பது தென் மாநிலங்கள் மட்டுமே. எனவே மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, தென் மாநிலங்களில் பாஜகவின் சித்தாந்தத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லும் அதேநேரம், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதே ‘மிஷன் சவுத்’ன் முக்கிய குறிக்கோளாகும். இதற்கான காய் நகர்த்தல்களை அமித் ஷா தொடங்கிவிட்டார்.
கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. அதேபோல், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற தென் மாநிலங்களில் தனது பலத்தை அதிகப்படுத்த பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ’மிஷன் சவுத்’ திட்டம் மூலம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் களமிறங்க ஆர்.எஸ்.எஸ். பணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அரசியல் ரீதியான சில யுக்திகளைப் பயன்படுத்த அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
‘மிஷன் சவுத்’ திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் 2-3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இவ்வாறான நகர்வுகளுக்கு மத்தியில் புதுச்சேரியில் புதிய கேம் பிளானை கையில் எடுத்துள்ளார் அமித் ஷா. காங்கிரஸ் தலைமை உதாசீனப்படுத்தியதால், தனிச்செல்வாக்கு மிக்க நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார். இவரை மையப்படுத்தியே புதுச்சேரி மாநில தேர்தல் மற்றும் அரசியல் களம் சுழல்கிறது.
பாஜக தங்களை நம்பி வந்தவர்களின் மதிக்கும் கட்சி என்பதை யாரும் மறுக்க முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைப்பவர்களுக்கு அக்கட்சி உரிய அங்கீகாரம் தரும் என்பதற்கு தமிழிசை சவுந்தரராஜன், L. முருகன், புதுச்சேரி செல்வகணபதி போன்றோரே உதாரணம். இந்தப் பட்டியலில்தான் நமச்சிவாயமும் இடம்பெறுகிறார். நமச்சிவாயத்தின் வரவு கட்சிக்கு பலம் என்பதே தேசியத் தலைவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைய நமச்சிவாயமும் முக்கிய காரணம் என்பதால், அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி அரசியல் விளையாட்டை தொடங்க அமித் ஷா திட்டமிட்டுள்ளார். அவரை முழுமையாக பயன்படுத்துவதற்கான திட்டமிடல்கள் தொடங்கிவிட்டன.
புதுச்சேரி பாஜகவில் நமச்சிவாயமே வலுவான சக்தி என்றாலும், மாநில தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட சிலர் சிறிய குழுக்களாக தனித்து இயங்குவதாக தெரிகிறது. ஆனால், புதுச்சேரி பாஜகவில் நமச்சிவாயம்தான் சக்திமிக்க தலைவர் என்பதை அமித்ஷா தனது வருகையின்போது கோடிட்டு காட்டினார். கட்சி மாறுபவர் என்ற விமர்சனம் இருந்தாலும், அவரால் கட்சிக்கு லாபம் என்பதை உணர்ந்ததாலேயே அமித் ஷா அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என புதுச்சேரி பாஜகவினரே கூறுகின்றனர்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் பொறுப்பு தருவதாக நமச்சிவாயத்துக்கு பாஜக மேலிடம் உறுதியளித்தது. ஆனால் தற்போதைய சூழலில் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் சில நடைமுறை சிக்கல் இருப்பதை பாஜக மேலிடம் உணர்ந்துள்ளது. இதனால் சற்றே ஏமாற்றமடைந்த நமச்சிவாயத்துக்கு பெரிய பதவியை பரிசளிக்க அமித் ஷா வியூகம் வகுத்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி பாஜக எம்பி வேட்பாளராக நமசிவாயத்தை நிறுத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாம். புதுச்சேரி முழுவதும் நன்கு அறிமுகமானவர், அரசியல் அனுபவம் உள்ளவர், பரவலாக அனைத்து தொகுதியிலும் தனக்கான ஆதரவை கொண்டுள்ளவர் என்பதை எல்லாம் தாண்டி, ‘மிஷன் சவுத்’ புதுச்சேரிக்கு இந்த நகர்வு கைமேல் பலன் கிடைக்கும் என பாஜக கணக்குபோட்டுள்ளது. பெரிய போட்டியின்றி எளிதாக அவர் வெற்றுபெறுவார் என டெல்லி தலைமை பலமாக நம்புகிறது.
தேசிய அளவில் காங்கிரஸ் முற்றிலுமாக பலவீனமடைந்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தாலும், இடப்பங்கீடு, கூட்டணி தலைமை என்ற அளவிலேயே அது கலகலத்துவிடும் என பாஜக நம்புகிறது. எனவே 2024ல் மத்தியில் தேசிய ஜனநாயக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்றே பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். அப்படியொரு நிலையில், நமச்சிவாயத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து, புதுச்சேரியில் பாஜகவை வலுப்படுத்த தலைமை வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது.
‘மிஷன் சவுத்’ திட்டம் முக்கியமான இலக்கை அடைய நமச்சிவாயத்தை சக்தி மிக்க தலைவராக உருவாக்குவது அவசியம் என பாஜக தலைமை கருதுவதாக டெல்லி பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே, பிற மாநிலங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டு, நமச்சிவாயத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுவதாக நம்பத் தகுந்த ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry