
மழைக்காலம்… மனதிற்கு இதமான ஒரு பருவம். ஆனால், சில ஆரோக்கிய சவால்களையும் இலவச இணைப்பாகக் கொண்டு வருகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதிகரித்த ஈரப்பதம், நீர் தேங்குதல் போன்ற காரணங்களால், சில காய்கறிகள் எளிதில் பூஞ்சை வளர்ச்சி, பாக்டீரியா மாசுபாடு மற்றும் செரிமானப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
பொதுவாகவே ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படும் காய்கறிகள் கூட, மழைக்காலத்தில் சில சமயங்களில் ‘ஆபத்தாக’ மாறலாம். எனவே, இந்த காலகட்டத்தில் நம் உணவுமுறையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மழைக்காலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய அல்லது மிகக் கவனமாகச் சாப்பிட வேண்டிய காய்கறிகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
Also Read : விந்தணுவிலும், கருமுட்டையிலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்: மனித இனப்பெருக்கத்திற்கு பேராபத்து!
இலைக் கீரைகள்: பச்சை இலைக் காய்கறிகள் எப்போதுமே ஆரோக்கியமானவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் மழைக்காலத்தில் அவை முற்றிலும் பாதுகாப்பானவை என்று சொல்ல முடியாது. ஏனெனில், இந்தக் கீரைகள் தரைக்கு அருகில் வளருவதாலும், தண்ணீரை எளிதில் தக்கவைத்துக் கொள்வதாலும், பாக்டீரியாக்கள் மற்றும் புழுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக அமைகின்றன.
இதனால் வயிற்றுத் தொற்று, ஃபுட் பாய்சன் மற்றும் அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, மழைக்காலத்தில் முடிந்தவரை இந்தக் கீரைகளைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை பயன்படுத்த நினைத்தால், மிக மிக ஃப்ரெஷான இலைகளை வாங்கி, நன்கு சுத்தப்படுத்தி, சமைக்க வேண்டும். பொடி வடிவில் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
காலிஃபிளவர்: பெரும்பாலானவர்களுக்குப் பிடித்த, சுவையான காய்கறிகளில் காலிஃபிளவரும் ஒன்று. ஆனால், மழைக்காலங்களில் காலிஃபிளவரில் பூச்சிகள் மற்றும் புழுக்கள் எளிதில் வளர வாய்ப்புள்ளது. இவற்றின் அடுக்குகள் பூச்சிகள், புழுக்கள் மறைந்திருக்க ஏற்ற இடமாக அமைகின்றன. வெறும் கழுவுவது மட்டுமே அவற்றை முழுமையாக அகற்ற உதவாது. இதனால் வயிற்றுத் தொற்று மற்றும் அமிலத்தன்மை (அசிடிட்டி) போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மழைக்காலத்தில் காலிஃபிளவரை சமைப்பதைத் தவிர்ப்பது அல்லது மிகக் கவனமாகப் பார்த்து, நன்கு சுத்தம் செய்து, நன்றாக வேகவைத்து உண்பது நல்லது.
Also Read : குழந்தைகளின் மனதை சிதைத்து எதிர்காலத்தை விழுங்கும் வீடியோ கேம்கள்: ஒரு சமூக எச்சரிக்கை!
முட்டைக்கோஸ்: ஒரு அருமையான சைடிஷ் என்றால் அது முட்டைக்கோஸ் பொரியல்தான். ஆனால், மழைக்காலங்களில் முட்டைக்கோஸை அடிக்கடி சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். இது அதிக ஈரப்பதம் கொண்ட காய்கறி என்பதால், மழைக்காலங்களில் பாக்டீரியாக்களின் மையமாக மாற அதிக வாய்ப்புள்ளது. இதன் விளைவாக ஃபுட் பாய்சன், வயிற்றுப் பிடிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். முட்டைக்கோஸை சமைக்கும் போது, அதை நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும். பச்சையாக, சாலட்களில் சேர்ப்பதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம்.
காளான்கள்: காளான்கள் இயற்கையாகவே அதிக ஈரப்பதம் கொண்டவை. அவை ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சிச் சேகரிக்கும் தன்மை கொண்டதால், விரைவாகக் கெட்டுப் போகக்கூடியவை. மேலும், ஈரப்பதமான சூழ்நிலைகளில் பூஞ்சைத் தொற்றுகள் காளான்களில் எளிதில் வளரக்கூடும். இதனால் ஃபுட் பாய்சன் மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். காளான்களை வாங்கிய உடனேயே சமைத்துவிட வேண்டும். மழைக்காலத்தில், அதன் ஈரப்பதமான தன்மையைக் கருத்தில் கொண்டு, தவிர்ப்பதே சிறந்தது.
கத்திரிக்காய்: கத்திரிக்காய் பெரும்பாலானோருக்குப் பிடித்தமான ஒரு காய்கறி. ஆனால், மழைக்காலத்தில் இது அதிக பூச்சிகளை ஈர்க்கும் தன்மை கொண்டது. மேலும், இதில் அதிக நீர்ச்சத்து இருப்பதும், மழைக்காலச் சூழலில் வீக்கம் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக வயிற்றுப் பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில் கத்திரிக்காயைத் தவிர்ப்பது அல்லது மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தக்காளி: மழைக்காலத்தில் பச்சையான அல்லது சரியாகப் பழுக்காத தக்காளியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், மழைக்காலத்தில் நிலவும் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாகத் தக்காளிகள் எளிதில் அழுகிப் போகவும், பூஞ்சையை ஈர்க்கவும் வாய்ப்புள்ளது. இதனால் குடல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பிரச்சினைகளைத் தவிர்க்க, முழுமையாகப் பழுத்த, உறுதியான தக்காளியை மட்டுமே சமைக்கப் பயன்படுத்த வேண்டும். பச்சை தக்காளியை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
முளைவிட்ட பயிர்கள்: இது காய்கறி வகையைச் சாராது என்றாலும், பலர் சாலட்களில் இதைப் பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். மழைக்காலத்தில், முளைகட்டிய பயிர்களில் பாக்டீரியாக்கள் எளிதில் வளரக்கூடிய ஆபத்து உள்ளது. இதனால் வயிற்றுத் தொற்று ஏற்படலாம். இவற்றைச் சாப்பிடுவதற்கு முன், நீராவியில் (steaming) ஓரளவு வேகவைப்பது அல்லது நன்கு சமைப்பது பாதுகாப்பானது. பச்சையாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
மழைக்காலத்தில் காய்கறிகளை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்துவது?
* சுத்தம்: காய்கறிகளைச் சமைப்பதற்கு முன் எப்போதும் வெதுவெதுப்பான நீர் மற்றும் ஒரு சிறிய அளவு வினிகர் கரைசலில் நன்கு கழுவ வேண்டும். இது நுண்ணுயிரிகளை நீக்க உதவும்.
* சமைத்தல்: பச்சையாகச் சாப்பிடுவதைத் தவிர்த்து, காய்கறிகளை நன்றாக வேகவைத்து அல்லது கொதிக்க வைத்துச் சாப்பிடுவது நல்லது. இது பாக்டீரியாக்களை அழித்து, செரிமானப் பிரச்சினைகளைக் குறைக்கும்.
* பயன்பாடு: காய்கறிகளை எப்போதும் ஃப்ரெஷாக வாங்கி, முடிந்தவரை 24 மணி நேரத்திற்குள் உட்கொள்வது நல்லது. நீண்ட நாட்கள் வைத்திருப்பதைத் தவிர்க்கவும்.
* சேமிப்பு: காய்கறிகளை ஈரப்பதமில்லாத, காற்றோட்டமான இடத்தில் சேமிப்பது நல்லது. குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது, ஈரப்பதம் படாமல் கவனமாகப் பேக் செய்யவும்.
மழைக்காலத்தை மகிழ்வுடன் அனுபவித்தாலும், உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் உங்களை நோய்களில் இருந்து காக்கும்!
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry