3.30 Mins Read : பஞ்சபூதத்தில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்டார். கார்த்திகை தீபத்திற்கு மூலஸ்தலமான திருவண்ணாமலையில், சிவபெருமானே மலையாக காட்சியளிக்கிறார். பிரம்மா, விஷ்ணு ஆணவம் அழிந்த ஸ்தலம், சித்தர்களின் புனித ஸ்தலம். அருணகிரி நாதர் முக்தி பெற்ற ஸ்தலம். இப்படி பல போற்றுதலுக்குரிய திருத்தலம்தான் திருவண்ணாமலை. எத்தனையோ சிவஸ்தலம் இருப்பினும் தவம் செய்யவும், ஜீவசமாதி அடையவும் சித்தர்கள் ஏன் திருவண்ணாமலையை தேர்ந்தெடுக்கிறார்கள்?
திருவண்ணாமலை என்ற பெயரை கேட்டதுமே ஒரு ஆன்மீக ஈர்ப்பு ஏற்படும். இது ஆன்மீக பூமியாக இருப்பது மட்டுமில்லாமல், சித்தர்கள் பூமியாகவும் இருந்து வருகிறது. இந்த மலை எப்போது தோன்றியது என்று யாருக்குமே தெரியாது. பிரபஞ்சம் தோன்றியதில் இருந்தே இந்த மலை இருப்பதாகவும், இந்த மலை ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு விதமாக காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது. க்ருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகாவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
ஒருமுறை பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை வந்தது. இதை சிவனிடம் கூற, சிவனோ என்னுடைய அடிமுடியை யார் முதலில் பார்த்துட்டு வருகிறீர்களோ? அவரே உயர்ந்தவர் என்று சொல்லிவிட்டு தீப்பிழம்பாக காட்சி தருகிறார். விஷ்ணு பகவான் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்துக் கொண்டு செல்கிறார். பிரம்மன் அன்னப்பறவையாக மாறி பறந்துச் செல்கிறார்.
விஷ்ணுவால் சிவனின் அடியை பார்க்க முடியவில்லை என்று தோல்வியை ஒப்புக் கொள்கிறார். ஆனால் பிரம்மதேவனோ தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல அழைத்து வருகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மாவிற்கு கோவில்களே இருக்காது என்றும், தாழம்பூவை பூஜைகளுக்கு பயன்படுத்த மாட்டார்கள் என்றும் சாபம் விடுகிறார்.
தாழம்பூ பொய் கூறியதால், சிவபெருமான் கடும்கோபம் கொண்டு அக்னி பிழம்பாய் மாறினார். தேவர்கள் அனைவரும் சிவபெருமானை அமைதியாகும்படி வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்று மலையாக உருமாறி அடங்கினார். அதன் மீது அக்னி பிழம்பாய் காட்சித்தந்தார். அந்த நாளே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
‘அண்ணுதல்’ என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணாமலை என்பதற்கு நெருங்கவே முடியாத என்ற பொருளை தருகிறது. பிரம்மாவாலும், விஷ்ணுவாலும் சிவனின் அடியையும், முடியையும் நெருங்கவே முடியாததால் ‘அண்ணாமலை’ என்ற பெயர் பெற்றது. ‘அருணம்’ என்றால் சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு, ‘சலம்’ என்றால் மலையை குறிக்கும். சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பு மலையாக இருப்பதால் சிவபெருமானுக்கு ‘அருணாச்சலேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது.
இந்த மலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். அதனால் இந்த மலை ‘காந்தமலை’ என்றும் அழைக்கப்படுகிறது. பதினான்கு கி.மீ. சுற்றளவு தூரம் கொண்ட இந்த மலையில் ஏராளமான சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்துள்ளன. இறைவன் எங்கே குடியிருக்கிறாரோ அங்கேதான் சித்தர்களும் இருப்பார்கள். சித்தர்களுக்கு எல்லாம் தலையாய சித்தர் அந்த சிவபெருமானே! அதனால்தான் காலகாலமாக சிவபெருமானுக்கு நாம் பெரிதும் போற்றும் 18 சித்தர்களும், அவர்களுக்கு பக்கபலமாக 188 சித்தர்களும் அரூபமாக இன்றும் இருக்கிறார்கள். இது தான் சித்தர்கள் திருவண்ணாமலையில் இருப்பதற்கான ஆன்மீகக் காரணம் ஆகும்.
இதேபோல், திருவண்ணாமலை கிரிவல பாதையில் அடிக்கு 108 லிங்கங்கள் இருப்பதாக சொல்வார்கள். அப்படி பார்த்தால் கிரிவலம் வரும் போது பல கோடி லிங்கங்களை வலம் வந்து தரிசித்த பலனை ஒரு முறை கிரிவலம் வந்தாலே பெற்று விடலாம். ஆன்மிகவாதிகள், துறவிகள், சித்தர்கள், தேவர்கள், மனிதர்கள், மகான்கள் என அனைவரும் திருவண்ணாமலையை தேடி வருவதற்கு ஆன்மிக காரணம் மட்டுமல்ல, அறிவியல் காரணமும் நிறைந்துள்ளது.
பெளர்ணமி, அமாவாசை, தமிழ் மாதப்பிறப்பு, பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களில் சித்தர்கள், சாதுக்கள், முனிவர்கள், ரிஷி புங்கவர்கள், இன்றளவும் அருவமாக கிரிவலம் வந்து சிவனை வழிபட்டு செல்வதாக சொல்லப்படுவதால் அவர்களிடம் இருந்து வெளிப்படும் தெய்வீக அலைகளும் சேர்வதால் தான் இங்கு வந்து வழிபடுவோர், கிரிவலம் வருவோரின் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் நடக்கிறது.
தவம் என்பதன் முதல் நிலையே தியானம் எனப்படுகிறது. மனத்தை அடக்கி விட்டால் அனைத்து விதமான சித்துக்களையும் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்பார்கள். புவியியல் அமைப்பிலேயே மனத்தை அடக்கும் அதிர்வுகளை திருவண்ணாமலை கொண்டுள்ளது. பொதுவாக நமது உடலைச் சுற்றி அமைந்திருக்கும் அதிர்வலைகளை ஆரா என்கிறார்கள். இதனை அளவீடுகளின் அடிப்படையில் பீட்டா, தீட்டா என அறிவியல் உலகம் பிரிக்கிறது.
நாம் கோபம், கவலை, குழப்பம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் போது நமது உடலில் இருந்து உருவாகும் பீட்டா அதிர்வலைகள் 14 ஹெர்ட்சிற்கு மேல் இருக்கும். இந்த சமயத்தில் மனம் நமது கட்டுப்பாட்டில் இருக்காது. அதே சமயம் நாம் அமைதியாகவோ அல்லது தூக்க நிலையிலோ இருக்கும் போது அதிர்வலைகள் 14 ஹெர்ட்சிற்கு கீழ் இருக்கும். இதை ஆல்ஃபா அலைகள் என்கிறோம்.
நாம் தியான நிலையில் இருக்கும் போது அதிர்வலைகளானது பீட்டா, ஆல்ஃபா அலைகளுக்கு கீழ் சென்று விடுகிறது. கிட்டதட்ட 8 ஹெர்ட்ஸ் என்ற அளவிலான அலைகள் மட்டுமே வெளிப்படும். இதை தீட்டா அலைகள் என்கின்றனர். இந்த அலைகள் இயங்கும் போது தானாகவே நமது மனதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். சாதாரண மனிதர்கள் இந்த நிலையை அடைய பயிற்சி செய்ய வேண்டும்.
ஆனால் திருவண்ணாமலையில் தீட்டா அதிர்வுகள் இயல்பாகவே நிறைந்துள்ளன. அதனால் தான் சித்தர்கள் இங்கு தவம் செய்யவும், ஜீவ சமாதி அடையவும் விரும்புகின்றனர். தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து தீட்டா அதிர்வுகள் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பதால், இது கிரிவலம் வரும் பக்தர்கள் மீது பட்டு, அவர்களின் மனமும் அமைதி நிலைக்கு வர துவங்குகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும். மூன்றாம் நூற்றாண்டில் அவதரித்ததாக கணிக்கப்பட்டுள்ள இடைக்காடர் சித்தர் சுமார் 600 ஆண்டுகள் வாழ்ந்ததாக சுவடிகளில் குறிப்புகள் உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தில் அருள் அலைகள் நிரம்பி இருப்பதற்கு அங்கு அவரது ஜீவ சமாதி அமைந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்றும் திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தர் அருள்புரிந்து வருகிறார்.
Also Read : பாலும், பழமும் தவறான காம்பினேஷனா..? எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் 10 வகை ஃபுட் காம்பினேஷன்!
பொதுவாக பழமையான சிவாலயங்களில் சித்தர்கள் எந்த இடத்தில் அடங்கி இருக்கிறார்கள் என்பது தெரியாது. கருவறையில் சித்தர்கள் அடங்கி இருப்பார்கள் என்று பொதுவாக கூறப்பட்டாலும் அந்த ஜீவ ஒடுக்கத்தை கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இடைக்காடர் திருவிடைமருதூரில் சமாதியில் வீற்றிருப்பதாக போகர் தனது ஜனன சாகரத்தில் கூறியுள்ளார். சிலர் சிவகங்கை இடைக்காட்டூர் ஆழிகண்டீசுவரர் ஆலயத்தில் இடைக்காடர் சித்தர் ஜீவ சமாதி ஆகி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த ஆலயத்தில் இடைக்காடர் தவக்கோலத்தில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
ஆனால் இடைக்காடர் திருவண்ணாமலையில்தான் அடங்கி இருக்கிறார் என்பது 99 சதவீத சித்த ஆய்வாளர்களின் கருத்தாகும். நிஜானந்த போதம் என்னும் நூலில் இடைக்காடர் திருவண்ணாமலையில் சமாதி அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆகையால் திருவண்ணாமலையில் இடைக்காடரின் ஜீவ சமாதி உள்ளது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் திருவண்ணாமலை தலத்தில் இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி அல்லது ஒளி சமாதி எங்கு உள்ளது என்பதில்தான் மாறுபட்ட தகவல்கள் நீடித்து கொண்டே இருக்கின்றன.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry