சென்னையை மீட்டுத் தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.! இன்றைய அரசியலுக்கும் பொருந்தும் சிலம்புச் செல்வரின் கருத்துகள்!

0
80
In 1946 Ma.Po.Si. started a movement called 'Tamil Arasu Kazhagam' and demanded proper status for Tamil in administration and education.  He is most renowned for his pivotal role in the demarcation of Tamil Nadu and his efforts to ensure that Madras remained the state capital.

4.30 Mins Read : மெட்ராஸ் ஸ்டேட்’ என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு, 1968ம் ஆண்டு தமிழ்நாடு என அழகான பெயர் சூட்டப்பட்டது. இதற்கான தீர்மானம், அன்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, முதலமைச்சர் அண்ணாவால் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார் அந்த தலைவர். அந்த பாராட்டுக்கும் பெருமைக்கும் உரிய அந்த தலைவர், ம.பொ.சி. என்கிற மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம். ‘தலைநகர் சென்னை’ என இன்று நாம் போற்றிக்கொண்டாடும் சென்னை, நம்மை விட்டு செல்லும் நிலை வந்தபோது, பெரும்போராட்டங்களை நடத்தி, அதை நமக்கு மீட்டுக்கொடுத்த பெருந்தகை இவர்தான் என்பது இன்றைய தலைமுறையினர் அறியாதது.

தமிழ்நாடு எனப் பெயர் வரக் காரணம்

ம.பொ.சி. 1967-71 காலகட்டத்தில் சட்டமன்ற மேலவைத் துணைத் தலைவராக பணியாற்றியபோதுதான் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது. அது தொடர்பான தீர்மானம் சட்டமன்றத்தில் அண்ணா தலைமையில் நிறைவேற்றப்பட  இருந்த சமயம், ஒரு சிக்கல் எழுந்தது. அதாவது வட இந்தியர்களுக்கு ழகர உச்சரிப்பு வராது என்பதால், தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் Tamilnad அதாவது ‘டமில் நாட்’  என உச்சரிப்புக்கு வசதியாக மாற்ற ராஜாஜி, திமுக அமைச்சரவைக்கு ஆலோசனை தந்தார். இதை ஏற்றுக்கொள்வதாக அண்ணா முடிவெடுத்தபோது ம.பொ.சி. அதை எதிர்த்தார். தமிழின் அழகிய ஓசையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல் நாடு என்பது Nadu என்றே ஆங்கிலத்தில் இடம்பெறவேண்டும் என வாதிட்டார்.

சென்னையை மீட்டுத் தந்தார்

முன்னதாக, இந்தியாவிற்கு சுதந்திரம் கைக்கெட்டும் தொலைவில் இருந்தபோது, தெலுங்கு பேசும் மக்களுக்காக தனி ஒரு மாநிலம் வேண்டும் என அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திரர்களிடமிருந்து கலகக்குரல் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் கூட்டங்களில் பேசிய ம.பொ.சியை,   ‘கிராமணியே திரும்பிப்போ…!’ என தாக்குதல் நடத்தி  விரட்டினர் அந்த மக்கள். மேலும் எதிர்ப்பு காட்டும்விதமாக,  “ஆந்திரம் பிரிக்கப்பட்டால் சென்னையையும் நாங்களே பெறுவோம்” என அவர்கள் சவால் விடுத்தனர்.

Also Read : பள்ளிக் கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? திராவிட மாடல் அரசு என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிந்து வைத்துள்ளாரா? என ஐபெட்டோ கேள்வி?


பொட்டி ஸ்ரீராமுலு என்ற தெலுங்கு மொழியுணர்வாளர், அதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். 58 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பின்னர் அவர் மரணமடைய, பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அவரது மரணத்திற்கு பரிசாக ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலத்தை அப்போதைய காங்கிரஸ் உருவாக்கியது. 1953 அக்டோபரில் ஆந்திரம் உருவானது. சவால் விட்டபடி மாநிலத்தைப் பிரித்துக்கொண்ட ஆந்திர மக்களின் அடுத்த இலக்காக சென்னை இருந்தது. 1956 ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ‘மதராஸ் மனதே’ என்ற கோஷத்துடன், ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டுப் போராட்டங்கள் மேற்கொண்டனர்.

வட சென்னை ஆந்திராவின் தலைநகராகவும், தென்சென்னை ‘சென்னை மாகாணத்தின்’ தலைநகராகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. அரசியல் களத்தில் இது பல அதிர்வுகளை ஏற்படுத்தின. அப்போது சென்னையை காக்க தமிழகத்தில் இருந்து புறப்பட்ட ஒரே தலைவர் ம.பொ.சி. எல்லா வழிகளிலும் தனது போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து, தமிழகத்தின் தலைநகரான சென்னையை மீட்டுக்கொடுத்தார்.

திருத்தணி, குமரியை மீட்டுக்கொடுத்தவர்

திருப்பதியும், திருத்தணியும் ஆந்திரர் வசம் செல்ல இருந்த நிலையில், தனது வலுவான போராட்டங்கள் மூலம் அதையும் முடக்கினார். ஆனாலும் திருத்தணியை மட்டுமே நம்மால் தக்கவைக்கமுடிந்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர்மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும், செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்தபோதிலும் பீர்மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. இப்படி தமிழர்கள் வாழ்வின் நில வளங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றைக் காக்க போராடியத் தலைவர் ம.பொ.சி. ‘தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்’ என சென்னையை காக்கும் போரில் இளைஞர்களை எழுச்சியடைச் செய்தவர்.

2 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம்

சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில், 1906ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார் ம.பொ.சி. மிகவும் வறுமையான சூழலில் பிறந்ததால், 3ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டு நெசவுத் தொழிலில் கூலியாளாக வேலை செய்தார்.  பின்னர் அச்சுக் கோர்க்கும் பணியில் நீண்ட வருடங்கள் பணிபுரிந்தார். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே பின்னாளில் ம. பொ. சி. என்று ஆயிற்று. 31ம் வயதில் திருமணம். காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு,  சிறைவாசம் சென்ற ம.பொ.சி., அந்தக் காலத்தில் காங்கிரஸின் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். போராட்டங்களின் விளைவாக,  தன் ஆயுட்காலத்தில் எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் கழித்தவர் ம.பொ.சி.

Also Read : திமுகவுக்கு சவால்விடும் கம்யூனிஸ்ட்! முல்லைப் பெரியாறு உள்பட 9 அணைகளை கட்ட கேரளா முடிவு! தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்க 4 ஆறுகளின் குறுக்கே தடுப்பணை!

1939ம் ஆண்டு, காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, வ.உ.சி.க்கு சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உதவி கேட்டுச் சென்றபோது, கட்சியின் பெரிய மனிதர்கள் நழுவிக்கொண்டது அவருக்கு அதிர்ச்சியளித்தது. எனினும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, அன்றைய ஹாமில்டன் வாராவதி சந்தையில் வசித்த எளிய மனிதர்களிடம் கையேந்தி, சில தொழிலாளர் சங்கங்களின் உதவியோடு அந்த சிலையை நிறுவினார். 1945ம் ஆண்டு ம.பொ.சி. தமிழ்முரசு எனும் திங்கள் இதழைத் தொடங்கினார். ஒன்றரை ஆண்டுக்காலம் அவ்விதழ் மூலம் புதிய தமிழகம் எனும் தனது கருத்தாக்கத்தை ம.பொ.சி. பரப்புரை செய்துவந்தார்.

‘தமிழரசுக் கழகம்’ தொடக்கம்

1946ம் ஆண்டில், கட்சியில் இருந்தபடியே தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். ஒருகாலத்தில் காங்கிரஸை எதிர்க்கிறவர்கள் யாரையும் தன்னுடைய எதிரியாக வரித்துக்கொண்டு அவர்களை எதிர்த்து நின்றவர் ம.பொ.சி. ஆனால் ஒருகட்டத்தில் காங்கிரசின் பாட்டாளி விரோதப் போக்கினாலும், காந்திய கொள்கைகளை கைகழுவிடும் போக்கினாலும் அதிருப்தியடைந்தார். அதன் விளைவாக உருவானதுதான் தமிழரசு கழகம். கொண்ட கொள்கையில் உறுதியும் துணிவும் மிக்கவர் ம.பொ.சி. இதற்கு கள்ளுக்கடை மறியலின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறலாம்.

கள்ளுத்தொழிலில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுவந்த சமயம், கள்ளுக்கடை மறியலை அறிவித்தது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கொள்கையை நெஞ்சில் நிறுத்திக்கொண்டவரான ம.பொ.சி., தன் கொள்கைக்காக வீதிவிதியாக சென்று கள்ளுக்கடைகள் முன் மறியல் செய்தார். கள்ளுக்கடைகள் மூடப்பட்டால் முதல் ஆபத்து அவரது குடும்பத்தினருக்குத்தான் என்றாலும், தன் கொள்கையிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. உச்சகட்டமாக, கள்ளுக்கடை தொழிலில் அந்நாளில் பிரபலமாக விளங்கிய அவரது தாய்மாமன் கடைமுன்னேயே மறியல் நிகழ்த்தி, உறவினர்களின் வெறுப்பை சம்பாதித்தார். ஆனால் ஒருபக்கம் தொழிலுக்காக கள் இறக்குவதும் மறுபக்கம் புகழுக்காக மறியலில் ஈடுபடுவதாகவும் கட்சிக்குள்ளாகவே ம.பொ.சி.க்கு எதிரான குரல் எழுந்தபோது, மனம் உடைந்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்

பின்னாளில் வேறு பல காரணங்களுடன் அவர் காங்கிரசுடன் முரண்டபடநேர்ந்தது. ஆகஸ்ட் 8, 1954ம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார். தமிழரசு கழகம் முன்னைவிட வேகம் பெற்று இயங்கியது. கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி.யின் புகழ்பரப்பும் பணியை ம.பொ.சி. செய்தார். அவரது வரலாற்றை பற்றி நுால் எழுதி,  வ.உ.சி.யின் தியாகங்களை உலகறியச் செய்தவரும் அவர்தான் . ம.பொ.சி. எழுதிய ‘கப்பலோட்டிய தமிழன்’ என்னும் நூல், வ.உ.சி.யின் பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இந்த நூலை தழுவித்தான் கப்பலோட்டிய தமிழன் என்னும் சிறந்த திரைப்படம் உருவானது என்பார்கள்.

3ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ம.பொ.சி., பின்னாளில் சங்க இலக்கியத்தில் தேர்ந்தவராக விளங்க களம் அமைத்துக்கொடுத்தது சிறைவாசம். தன் சிறைவாசத்தை சிலப்பதிகாரம், பாரதியின் படைப்புகள் உள்ளிட்ட இலக்கியங்களை படிக்கப் பயன்படுத்திக்கொண்டார். பாரதியின் மீது தணியாத காதல் கொண்ட ம.பொ.சி. அவரைப்பற்றி படைத்த நுால்கள் திறனாய்வுக்கு ஒப்பானவை.

சிலப்பதிகார மாநாடு

1950ல் சென்னையில், ராயப்பேட்டை காங்கிரஸ் திடலில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. இதற்கு பெரும் பங்காற்றியவர் ம.பொ.சி. ரா.பி.சேதுப்பிள்ளை, டாக்டர் மு.வரதராசனார், பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட  பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களையும் மாச்சர்யங்களின்றி அழைத்து ம.பொ.சி. விழாவை நடத்தினார். அனைத்துக்கட்சி பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட தமிழ் கலாச்சார விழாவாக அது நடந்தேறியது. தனது தமிழரசு கழகம் மூலம், சிலப்பதிகார விழாவை தொடர்ந்து நடத்தினார். ம.பொ.சி.யின் தமிழ்க்கொடையை பாராட்டி,  பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவருக்கு ‘சிலம்புச் செல்வர்’ என்னும் பட்டத்தை வழங்கினார்.

Also Read : வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி! இந்த ஒரு நம்பர உங்க ஃபோன்ல சேவ் பண்ணாலே போதும்..!

காங்கிரஸ், திமுகவுக்கு அடுத்தபடியாக திரையுலகப்பிரமுகர்கள் பலர் ம.பொ.சி.யின் தமிழரசு கழகத்தில் உறுப்பினர்களாகவோ அல்லது ஆதரவாளர்களாகவோ இருந்தனர். பழம்பெரும் இயக்குநர் ஏ.பி.என், அவ்வை டி.கே. சண்முகம், பிரபல தயாரிப்பாளர் ஜி.உமாபதி போன்ற இன்னும் பலரை சொல்லலாம். சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1952 முதல் 54 வரையிலும், சட்டமன்ற மேலவைத் தலைவராக 1972 முதல் 1978 வரையிலும் ம.பொ.சி பணியாற்றினார். 1986 நவம்பர் முதல் மூன்று ஆண்டு காலம் தமிழ் வளர்ச்சி உயர்நிலைக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர்.

அவரது தேசியவாத ஆர்வத்தின் மற்றொரு எடுத்துக்காட்டு, 1960களில் அவர் நடத்தி வந்த செங்கோல் இதழில் எப்போதும் தன்னை “இந்தியத் தமிழ்” இனம் என்றே மாபொசி குறிப்பிடுவார். இந்த அறிவிப்பு ஆழமாக எதிரொலித்தது. இந்தியர் மற்றும் தமிழர் என்ற தனது அடையாளத்தில் அவர் உறுதியாக இருந்தார்.

சாகித்ய அகாதமி, பத்மஸ்ரீ விருதுகள்

1966ல் ம.பொ.சி.யின் ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு மத்திய அரசு அவரது பொதுத்தொண்டை பாராட்டி “பத்மஸ்ரீ” விருதினை வழங்கி கவுரவித்தது. இது தவிர சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி., 1978 முதல் மேலவை கலைக்கப்பட்ட 86 ஆம் ஆண்டுவரை அதன் தலைவராக இருந்தார். அவர் தலைவர் பொறுப்பு வகித்த காலத்தில் மேலவை சிறப்பு பெற்று இயங்கியது.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என தன் இறுதி மூச்சுவரை தமிழ்த் தொண்டு புரிந்த ம.பொ.சி. 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி உடல்நலம் குன்றி தனது 89ம் வயதில் காலமானார். “அரசியல்வாதி ஒவ்வொருவருக்கும் முக்கிய தேவை தத்துவஞானம். தத்துவஞானம் இல்லாத அரசியல்வாதி தவறுகள் செய்ய அஞ்சமாட்டார். தத்துவஞானமானது அரசியல்வாதியின் ஆசைகளை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தும். ஆசாபங்கம் ஏற்படுகின்றபோது அதனை தாங்கிக் கொண்டு தருமநெறியில் ஊன்றி நிற்கின்ற ஆற்றலை தரும். இதனை என் வாழ்க்கை அனுபவத்திலே நான் கண்டு வருகின்றேன்“ என்று ம.பொ.சி. தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டார். அவரது இந்த கூற்று இப்போதும் பொருந்துகிறது. ம.பொ.சி.யின் பிறந்தநாளான இன்று வேல்ஸ் மீடியா அவரைப் போற்றி வணங்குகிறது.

With Input Vikatan

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry