அறநிலையத்துறை கோவில்களில் தமிழிலும் குடமுழுக்கு! செயல்முறைகளை அனுப்ப ஆணையர் வேண்டுகோள்!

0
49
GETTY IMAGE

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிப்பேராணையின்படி, திருக்கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் “திருக்கோயில்களில் வழிபடும் பக்தர்கள் தாம் வழிபடும் கோயிலின் ஆகமத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு, திருக்கோயில் ஆகமத்தை ஆவணப்படுத்தி தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து புத்தகங்களாக பதிப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், குடமுழுக்கு நடைபெறும் சிறப்பான தருணங்களில் பாடப்படும் சமய சான்றோர்களின் பாடல்கள் மற்றும் சாத்திர நூல்களைப் புத்தகமாக வெளியிடுவதற்கும், இப்பணிகளுக்குத் தேவையான துறை அலுவலர்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்துகளை பெற்று செயல்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

Also Read : விரைவில் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணி தொடங்கும்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 18.08.2022 அன்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை இராமானந்த குமரகுருபர சுவாமிகள், முதுமுனைவர் சக்திவேல் முருகனார், சுகிசிவம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்ரியா ஆகியோரை கொண்ட கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்ட நடவடிக்கைகளின்படி தமிழில் மந்திரங்களை ஓதி, திருக்குட நன்னீராட்டு நடத்திவரும் அமைப்புகளிடமிருந்து கருத்துக்களை கோருவதென முடிவு எடுக்கப்பட்டது. ஆகவே, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் சமஸ்கிருதம் மட்டுமின்றி ஒரே சீராக தமிழில் திருக்குடமுழுக்குகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read : நெற்பயிரை காப்பபற்ற கோவை வேளாண் பல்கலை. முக்கிய அட்வைஸ்! வேளாண் படிப்புகளுக்கு 10ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியீடு!

தமிழ் ஆகம முறைப்படி திருமுறை (சைவ கோயில்கள்), பிரபந்த (வைணவ கோயில்கள்) மந்திரங்களை ஓதி திருக்குட நன்னீராட்டு விழா நடத்திவரும் அமைப்புகள், தங்களின் செயல்முறைகளை விளக்கங்களுடனும், சான்றுகளுடனும் தங்களது கருத்துகளை இணைத்து அனுப்ப கோரப்பட்டுள்ளது. கருத்துகளை அனுப்புவோர், ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry