மீண்டும் பயன்படுத்தக்கூடிய, முறையாக சுத்தம் செய்யப்படாத குடிநீர் பாட்டில்களில் கழிவறை இருக்கையை விட 40 ஆயிரம் மடங்கு அதிக பாக்டீரியாக்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. முறையாக சுத்தம் செய்யப்படாத தண்ணீர் பாட்டில்களில், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற பல நுண்ணுயிரிகள் குவிந்து, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
குடிநீரை நிரப்புவதற்கு முன்பு, குழாயின் கீழ் சில நொடிகள் காட்டி, தண்ணீரால் அலசிவிட்டு பயன்படுத்தினால் போதும், பாட்டில் சுத்தமாக இருக்கும் என்று நம்புகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்கிறது ஆய்வு முடிவுகள். முறையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், குடிநீர் பாட்டில்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற பல நுண்ணுயிரிகள் குவிந்து, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
அமெரிக்காவில் நீர் தரக் கட்டுப்பாட்டில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான ‘WaterFilterGuru’ நடத்திய ஆய்வில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு குடிநீர் பாட்டிலில் சுமார் 2.8 கோடி காலனி உருவாக்கும் அலகுகள் (CFU- Colony-Forming Unit) இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளது. அதாவது பாக்டீரியா இனப்பெருக்கம் செய்வது மற்றும் சாத்தியமான உயிரணுக்களின் எண்ணிக்கையை அளவிடுவது என மேலோட்டமாக இதைப் புரிந்துகொள்ளலாம்.
Source : Swabbing Water Bottles: How Clean Is the Water You Drink?
இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள், spout lid, straw lid and squeeze-top lid, என வெவ்வேறு தண்ணீர் பாட்டில்களை தலா மூன்று முறை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, Gram-negative rods and bacillus என்ற இரண்டு வகையான பாக்டீரியாக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். மிகவும் அசுத்தமான பிற பொருள்களுடன், ஒரு தண்ணீர் பாட்டிலின் மாசுபாட்டு அளவு ஒப்பிடப்பட்டது. எடுத்துக்காட்டாக, கழிப்பறை இருக்கையின் மேற்பரப்பில் சராசரியாக 515 சிஎப்யூ இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர், அதாவது கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு பாக்டீரியாக்கள் தண்ணீர் பாட்டிலில் இருந்தன. அதேபோல், குடிநீர் பாட்டிலுடன் ஒப்பிடும்போது செல்லப்பிராணிகளுக்கான உணவுத் தட்டுகள் அல்லது பாத்திரங்கள், கணினி மவுஸ் மற்றும் சமையலறை சிங்க் ஆகியவற்றிலும் பாக்டீரியாக்கள் குறைவாகவே இருந்தன.
சீனாவில் உள்ள ஹெனான் பல்கலைக்கழகத்தின் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், தண்ணீர் பாட்டில்களில் ‘மிக அதிக அளவு பாக்டீரியாக்களும், விரைவான நுண்ணுயிர் வளர்ச்சிக்கான சாத்தியமும்’ இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மில்லிலிட்டர் நீரிலும் சராசரியாக 75,000 பாக்டீரியாக்கள் இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த நுண்ணிய உயிரினங்கள், 24 மணிநேரத்தில் ஒரு மில்லி லிட்டருக்கு 2 மில்லியன் வரை பெருகும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
அழுக்கு பாட்டிலைப் பயன்படுத்துவதால் என்ன ஆபத்து? அதை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது எப்படி? என்பதை அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். நாம் எல்லா இடங்களிலும் பாக்டீரியாவால் சூழப்பட்டே வாழ்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் உயிர்வாழ பாக்டீரியாக்களும் தேவை. இந்த நுண் உயிரினங்கள் நமது தண்ணீர் பாட்டில்களுக்குள் மிகவும் வித்தியாசமான வழிகளில் நுழையலாம்.
முதல் மற்றும் எளிதான வழி, தண்ணீரைக் குடிக்க வாய்க்கு அருகில் பாட்டிலை கொண்டு செல்லும்போது, தோல், உதடுகள், ஈறுகள், பற்கள் மற்றும் நாக்கில் இருக்கும் சில நுண்ணுயிரிகள் (ஸ்டேஃபிலோகோகி மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கி போன்ற பாக்டீரியாக்கள்) பாட்டிலுக்குள் நுழைந்து, அந்தப் புதிய சூழலில் பெருகத் தொடங்குகின்றன.
பாட்டிலை எடுக்க நம் விரல்களைப் பயன்படுத்தும்போது அல்லது பாட்டிலின் மூடியை திறக்கும்போதும் இதேபோன்று நடக்கும். ஏனென்றால் பல நபர்கள் தொடும் பொருட்களை நாமும் தொடுகிறோம் (கதவுக் கைப்பிடிகள், மின்தூக்கியின் பட்டன்கள், படிக்கட்டு கைப்பிடிகள்). பாட்டிலை எடுத்துச் செல்லும் பைகளில், பள்ளி லாக்கர்களில், வேலை செய்யும் மேஜையில், சமையலறை சின்க் போன்றவற்றிலும் பாக்டீரியாக்கள் இருக்கும்.
அடிக்கடி பாட்டிலை சுத்தம் செய்யாவிட்டால், இந்த நுண்ணுயிரிகள் அதில் நுழைந்து, காலனிகளை உருவாக்கி, அதிவேகமாக பெருகிவிடும். இதனால் தான் அவை வெறும் 24 மணி நேரத்தில் ஒரு மில்லி லிட்டருக்கு 75 ஆயிரம் முதல் 2 மில்லியன் வரை கூட பெருகும் என்று சீன பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது. ஈரப்பதமான, சூடான மற்றும் இருண்ட சூழல் (பிளாஸ்டிக் அல்லது அலுமினிய பாட்டில்களில்) பல பூஞ்சை இனங்களுக்கு விருப்பமான இடமாக இருக்கிறது. மிக மோசமாக பராமரிக்கப்படும் பாட்டில்களில், இந்த நுண்ணுயிரிகளின் வேலையை வெறும் கண்ணால் கூடப் பார்க்க முடியும்.
தண்ணீரில் சில துகள்களைக் காணலாம். இது பொதுவாக பாட்டிலின் அடிப்பகுதியில் கிடக்கும் அல்லது மூடியின் மேற்பரப்பில் பச்சை அல்லது கருப்பு நிறத்தில் படிந்து இருக்கும். நுண்ணுயிரிகள் நிரம்பிய பாட்டிலை பயன்படுத்தும்போது, மூக்கடைப்பு, குமட்டல், தலைவலி, சோர்வு போன்ற பிற அசௌகரியங்களுடன் மேலும் சில எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
முக்கியமான கேள்வி என்னவென்றால், இவை ஆரோக்கியத்திற்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்துமா? என்றால், இதற்கான பதில் பல காரணிகளைப் பொறுத்தது என்கிறார்கள் நிபுணர்கள். “நம் உடலில் செல்களை விட பத்து மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் தொற்று நோய்கள் சங்கத்தின் தலைவரான லின்ஸ் விளக்குகிறார். உள்ளே செல்லும் நுண்ணுயிரிகளின் அளவு மற்றும் வகைகளைப் பொறுத்து, நமது நோயெதிர்ப்பு அமைப்பு பிரச்னைகளை சமாளிக்கும்,” என்றும் அவர் கூறுகிறார்.
உதாரணமாக, பாட்டிலில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் போது, பயன்படுத்துபவருக்கு குமட்டல் மற்றும் வாந்தி போன்ற சில லேசான அறிகுறிகள் ஏற்படலாம். பூஞ்சை ஒவ்வாமை உள்ளவர்களாக இருந்தால், நுண்ணுயிரிகள் நிரம்பிய பாட்டிலை பயன்படுத்தும்போது மூக்கடைப்பு, குமட்டல், தலைவலி, சோர்வு போன்ற பிற அசௌகரியங்களுடன் மேலும் சில எதிர்விளைவுகள் ஏற்படலாம்.
சௌ பாலோ (São Paulo) பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ அறிவியல் பிரிவைச் சேர்ந்த நுண்ணுயிரியலாளர் ஜார்ஜ் டைமெனெட்ஸ்கி, “சிறு குழந்தைகள், முதியவர்கள் அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் மோசமாக பாதிக்கப்படலாம், எனவே நாம் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் பொருட்களின் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார்.
குடிநீர் பாட்டிலை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் அதைக் கழுவுவதே சிறந்தது. ஒரு நாளைக்கு ஒரு முறை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். பாக்டீரியா வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, உணவுப் பாத்திரங்களைக் கழுவ பயன்படுத்தும் சோப்பு மற்றும் தண்ணீரையே பயன்படுத்துதல் போதுமானது. நுண்ணுயிரிகளை அகற்ற பிரஷ்களை பயன்படுத்துவது முக்கியம். வாரம் ஒரு முறை ஸ்டெரைல் செய்வது சிறப்பு. பாட்டிலை கழுவிய பிறகு குடிநீரை நிரப்புவதற்கு முன்னர் அதை சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.
பாட்டில்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஒவ்வொரு நபருக்கும் சொந்த பாட்டில் இருக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் பாட்டில்கள் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடும். பழச்சாறுகள், ஆற்றல் பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற பிற திரவங்களை குடிநீர் பாட்டிலில் நிரப்ப வேண்டாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனென்றால் இத்தகைய திரவங்களில் நுண்ணுயிர் காலனிகளைத் தூண்டக்கூடிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அமெரிக்காவின் பர்டுயு பல்கலைக்கழக ஆய்வின்படி, கண்ணாடி பாட்டில்களில் குறைவான நுண்ணுயிரிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கண்ணாடியோ, அலுமினியமோ, எதுவானாலும் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும் பாட்டில்களையே பயன்படுத்த வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry