இரவோடு இரவாக நிர்வாகிகள் கைது; பிய்த்து எறியப்பட்ட போராட்ட பந்தல்! #Samsung -க்கு ஆதரவாக அடக்குமுறையை கையாளும் தமிழக அரசு!

0
55
The government elected by the people should act in the interest of the people. However, in the Samsung issue, the Tamil Nadu government is blatantly siding with the multinational company and acting against the workers," said A. Soundararajan. Image Source - AP News

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள சாம்சங் ஆலை ஊழியர்கள் 30 நாள்களுக்கும் மேலாக வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சிலரை காவல்துறை இரவோடு இரவாக கைது செய்ததோடு, போராட்ட பந்தலை பிய்த்து எறிந்திருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த்தியிருக்கிறது.

ஊழியர்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வெ.கணேசன் ஆகியோர் சாம்சங் நிறுவனம் மற்றும் நிர்வாகிகள் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூகத்தீர்வு எட்டப்பட்டதாகவும், ஊழியர்கள் பணிக்கு திரும்புமாறும் அமைச்சர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். ஆனால், தொழிற்சங்க நிர்வாகிகள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். பேச்சுவார்த்தை தோல்விதான், அரசு சாம்சங் பக்கமாக நின்றுகொண்டு எங்களை வஞ்சிக்கிறது என புகார் கூறினர்.

Also Read : லீவு கிடையாது, ஒன்னுக்கு கூட போக முடியாது! ஊழியர்களை கசக்கிப் பிழியும் சாம்சங் நிறுவனம்! துணைபோகும் தமிழக அரசு! நீடிக்கும் போராட்டம்!

இதனையடுத்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ‘சாம்சங் ஊழியர்களின் கோரிக்கை சார்ந்து 7 முறை பேச்சுவார்த்தை நடந்தது. முதலமைச்சரின் உத்தரவுப்படி 3 அமைச்சர்களும் 10 மணி நேரத்திற்கு மேலாக பேசியிருக்கிறோம். எதற்காக போராட்டத்தை நீட்டிக்கிறார்கள் என்று தெரியவில்லை. போராட்டம் நடத்தும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான ஊதியம் மறுக்கப்படும்’ என கூறியிருந்தார்.

சாம்சங் ஆலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் எச்சூர் என்கிற பகுதியில் ஒரு நிலத்தில் பெரிய பந்தல் அமைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று ஊழியர்களை போராட்ட பந்தலுக்கு செல்லவிடாமல் காவல்துறை வழியிலேயே மறித்து மிரட்டுவது போன்ற சில வீடியோக்கள் வெளியாகியிருந்தது.

சரக்கு வாகனம் ஒன்றில் கூட்டாக சென்ற ஊழியர்கள் விபத்திலும் சிக்கிய வீடியோவும் வெளியாகியிருந்தது. போராட்டத்தை தடுக்கும் வகையில் வழக்கத்தை விட காவல்துறையின் கட்டுப்பாடும் நெருக்கடியும் அதிகமாக இருந்ததாகவும் ஊழியர்கள் சொல்கிறார்கள். மேலும், நேற்று இரவோடு இரவாக கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான நிர்வாகிகளையும் ஊழியர்களையும் காவல்துறை அத்துமீறி கைது செய்திருப்பதாகவும் ஊழியர்கள் புகார் கூறுகிறார்கள்.

இதுபற்றி கூறும் CITU நிர்வாகிகள், ‘அரசு சாம்சங்கின் குரலாகவே தொடர்ந்து ஒலிக்கிறது. அவர்கள் கொடுக்கும் நெருக்கடியில் ஊழியர்கள் மீது அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. ஆலை அமைந்திருக்கும் இந்த பகுதிக்கு சரியான பொது போக்குவரத்து வசதி கிடையாது. நெடுஞ்சாலையில் இறங்கி எதாவது வண்டி பிடித்துதான் ஊழியர்கள் போராட்ட பந்தலுக்கு வருவார்கள்.

அவர்களை நேற்று ஒரு லோட் வண்டிக்காரர் தாமாக முன்வந்து ஏற்றி செல்வதாக சொல்லியிருக்கிறார். அதை நம்பி 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதில் ஏறியிருக்கிறார்கள். ஆனால், வழியிலேயே எந்த தடங்கலும் இல்லாத இடத்தில் வேண்டுமென்றே வளைத்து வளைத்து ஓட்டி வண்டியை கவிழ்த்திருக்கிறார். அதற்கான சிசிடிவி ஆதாரங்களும் இருக்கிறது. உடனே அங்கே தயாராக இருந்த சாம்சங் நிறுவனத்தின் ஆம்புலன்ஸில் ஊழியர்களை அழைத்துக் கொண்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்கள்.

அங்கே ஊழியர்களை காண சென்ற நிர்வாகிகளை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள். சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்லன், துணைச் செயலாளர் பாலாஜி , சிவனேசன் மற்றும் துணைத் தலைவர்கள் ஆசிக், மோகன்ராஜ் , பொருளாளர் மாதேசு ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவோடு இரவாக வீடுகளில் புகுந்தும் சில நிர்வாகிகளை கைது செய்திருக்கிறார்கள். அத்தோடு போராட்ட பந்தலையும் பிய்த்து எறிந்திருக்கிறார்கள். அதை வீடியோ எடுத்த 10 க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.’ என்றனர்.

போராட்ட பந்தலை போலீஸார் பிய்த்து எறிந்து, நிர்வாகிகளை கைது செய்த நிலையிலும், சாம்சங் ஊழியர்களின் போராட்டம் 31வது நாளாக தொடருகிறது. தடைகளை மீறி போராட்டம் தொடரும் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸாரின் அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணமே தி.மு.க அரசுதான் என்று குற்றம்சாட்டும் சி.ஐ.டி.யு மாநிலத் தலைவரும், சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான அ.சவுந்தரராசன்.  “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் நலன் கருதி செயல்பட வேண்டும். ஆனால், சாம்சங் பிரச்னையில் தமிழக அரசு அப்பட்டமாக பன்னாட்டு கம்பெனிக்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் நடந்துகொள்கிறது.” என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry