
பணி நிரந்தரம் வேண்டியும், தனியார்மயமாக்கலை எதிர்த்தும் அம்பத்தூரில் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அந்த இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் கு. பாரதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “காவல்துறையினுடைய அடக்குமுறையை கடந்து 116 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். 4 பெண்கள் 6 நாட்களாக காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். அரசு சார்பில் எந்த பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை.

ஆனால், இன்றைக்கு 4, 8ம் மண்டலங்களை 4000 கோடிக்கு தனியாருக்கு விட ஒப்பந்தம் கோரியிருக்கிறார்கள். அதுவும் கடைசி தேதி முடிந்த பிறகும், ஒரு நாள் தேதியை தள்ளிவைத்து ஒப்பந்தம் கோரியிருக்கிறார்கள். ஆட்சி முடிவதற்குள் மொத்தமாக கொள்ளையடிக்க நினைக்கிறார்கள். மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தனியார் நிறுவனங்களின் ஏஜென்ட்டாக செயல்பட்டுகிறார். அவருடைய துணைவியாருக்கு பல ஒப்பந்தங்களை ஒதுக்கியிருக்கிறார்.
200 வார்டுகளுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பறை, ஓய்வறை கட்டித் தருவதாக முதல்வர் கூறுகிறார். நான்கரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இப்போதுதான் கழிவறை இல்லை என்பது தெரிகிறதா? கார்த்திகேயன், முருகானந்தம், குமரகுருபரன் போன்ற ஐ.ஏ.எஸ்.களின் பேச்சுகளை முதல்வர் ஏன் கேட்க வேண்டும்? மாநகராட்சியில் ககன்தீப் சிங்கும், ராதாகிருஷ்ணனும் இருந்தவரை தனியார்மயம் வரவில்லையே. குமரகுருபரன் இருக்கும் போது மட்டும் எப்படி?
Also Read : சென்னை மாநகராட்சிக்கு ஆணையரா.. திமுக மாவட்ட செயலாளரா? அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நேரடி எச்சரிக்கை!
உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும், ராம்கி நிறுவனத்துக்கும் தொடர்பு இருக்கிறதோ என்கிற சந்தேகம் இருக்கிறது. 4 பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இருக்கிறார்கள். அவர்களின் உயிருக்கு சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும்தான் பொறப்பு.
குமரகுருபரன் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தோடு இயங்குகிறார். அவருக்கு எப்படி ஸ்பெஷல் பவர் கிடைக்கிறது. அவருடைய மனைவிக்கு ஒப்பந்தம் கொடுக்கும் அதிகாரம் எப்படி வந்தது? எளிய மக்கள் தங்களின் உரிமைகளை கேட்டால் தூக்கி எறிந்து விட்டு செல்லலாம் என நினைக்காதீர்கள்.
நீங்கள் வாக்கு கேட்டு வரும் போது நாங்களும் தெருவில் இறங்குவோம். சேப்பாக்கம், கொளத்தூர் தொகுதிகளில் உங்களுக்கு எதிராக தூய்மைப் பணியாளர்களை போட்டியிட செய்வோம். அடுத்தக்கட்டமாக வருகிற திங்கட் கிழமை வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கவிருக்கிறோம்.’ என்றார்.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
