
செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட ஜாமீனை மறு பரிசீலனை செய்வது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யச் சொல்லி மனுதாரர் தரப்பை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. அமைச்சரான இரண்டே நாளில் நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டிருப்பதால் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் ஏற்படுமா? என திமுகவினர் அச்சத்தில் உள்ளனர்.
Prevention of Money Laundering Act(PMLA) கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 471 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு 26.09.2024 அன்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. “திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும், வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், மாதத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்” என்ற நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்ததுள்ளது.
நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இரண்டே நாள்களில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக்கப்பட்டுள்ளார். அவர் வசம் முன்பு இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையையே முதலமைச்சர் ஸ்டாலின் அவரிடம் மீண்டும் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, செந்தில் பாலாஜியின் ஜாமீன் குறித்து மறுபரிசீலனை செய்ய மனு ஒன்றையும் தாக்கல் செய்யுமாறும் கேட்டுள்ளது. இதனால், செந்தில் பாலாஜிக்குக் கிடைத்துள்ள ரிலீஃப் தற்காலிகமானதுதானா என்கிற கேள்வி எழுகிறது.
முன்னதாக செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக் கோரி, அவரால் பாதிக்கப்பட்டதாக கூறும் ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆக.8-ம் தேதி உத்தரவிட்டது. ஓராண்டு கடந்த பிறகும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
Also Read : பொன்முடி இலாகா மாற்றத்தின் பின்னணியில் எ.வ. வேலு, ஆளுநர் ரவி! Minister K. Ponmudi sidelined in DMK!
எனவே, இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு ஏதுவாக எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தனியாக சிறப்பு நீதிபதியையும், சிறப்பு அரசு வழக்கறிஞரையும் நியமிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளித்து விட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இதே அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான ஒய்.பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன் மற்றும் குரு கிருஷ்ணகுமார் ஆகியோர், ‘‘அமைச்சராக பதவியில் இல்லை எனக் கூறி ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, தற்போது அமைச்சராக பதவியில் உள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதிவு செய்துள்ள மூன்று மூல வழக்குகளின் விசாரணையையும் ஒன்றுமில்லாமல் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்த வழக்கில் புதிதாக சேர்த்து தமிழக அரசும், தமிழக போலீஸாரும் பல்வேறு தந்திரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தவுடன்அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர்.


மனுதாரர் தரப்பின் இந்த கோரிக்கையை தற்போது இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க முடியாது என்றும், புதிதாக மனு தாக்கல் செய்தால் அதுதொடர்பாக அடுத்த விசாரணையின்போது பரிசீலிக்கப்படும் எனவும் கூறிய நீதிபதிகள், விசாரணையை அக்.22-க்கு தள்ளி வைத்துள்ளனர். மேலும், செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை மட்டும் துரிதமாக பிரத்யேகமாக விசாரித்து முடிக்கும் வகையில் தனியாக சிறப்பு நீதிபதியை நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.
15 மாதங்களுக்குப் பிறகு செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, அவர் அமைச்சராகி உள்ள நிலையில், இப்போது அமைச்சர் பதவியை ஏற்றதாலேயே அவரது ஜாமீனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமைச்சரவையில் இல்லை; அதனால் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சியங்களைக் கலைக்க மாட்டார் எனவும், நீண்ட நாள் சிறையில் இருந்ததாலுமே அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது.

செந்தில்பாலாஜி விவகாரத்தில் தி.மு.க தலைமை அவசரப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது. நிபந்தனைகளை நீக்கச் சொல்லி நீதிமன்றத்துக்குச் செல்லும்போது அமைச்சராகியிருப்பது குறித்த கேள்வியை நீதிபதிகள் நிச்சயம் எழுப்புவார்கள். மேலும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் இன்னமும் தலைமறைவாக இருப்பது குறித்த கேள்வியையும் நீதிமன்றம் எழுப்பலாம். எனவே, அமைச்சரவையிலிருந்து நீக்கும் அளவுக்கோ, நிபந்தனைகளை மேலும் கடுமையாக்கும் இடத்துக்கோ இந்த வழக்கு செல்லலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒருபக்கம், சிறப்பு நீதிபதி நியமிக்கப்பட்டால் வழக்கு விசாரணை வேகம் பெறும், மறுபக்கம், ஜாமீனை மறு பரிசீலனை செய்ய மனுத்தாக்கல் செய்யப்பட்டால் மீண்டும் அமைச்சரானது குறித்த கேள்வியை எதிர்கொள்ள நேரிடும். மீண்டும் அமைச்சராக நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை என்றாலும், அவர் அமைச்சராக இல்லாததும் ஜாமீன் கிடைக்க ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் செந்தில் பாலாஜிக்கு அடுத்து வரும் நாள்கள் சிக்கலாகவே தொடரும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
