2016க்குப் பிறகு பசிபிக் பெருங்கடலில் எல் நினோ மீண்டும் வந்துவிட்டது, அமெரிக்காவின் கூட்டாட்சி நிர்வாகத்தின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA), வியாழக்கிழமை இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எல் நினோ என்றால் என்ன?
ஸ்பானிய மொழியில் “சிறு பையன்” என்று பொருள்படும் எல் நினோ, 2 முதல் 7 ஆண்டுகள் வரையிலான சில வருட இடைவெளிக்குப் பிறகு, பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் உருவாகும் காலநிலை வடிவமாகும். வெப்பநிலை குறையும் நிலையை லா நினோ என்றும், வெப்ப நிலை அதிகரிக்கும் நிலையை எல் நினோ என்றும் அழைக்கிறோம்.
அதாவது கடல் பரப்பின் வெப்பநிலை அதிகரிப்பதையே நாம் எல் நினோ என்கிறோம். எல் நினோவால் கடல் மட்டத்தில் வெப்பநிலை அதிகரிப்பதோடு, நிலத்திலும் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக நீர் நிலைகள் வறண்டு போவது, நிலத்தடி நீர்மட்டம் குறைவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். மணல் பரப்பில் இருக்கும் நீரும் வறண்டு போகும்.
எனவே, மழை பெய்தால், நீர்நிலைகள், மணல் பரப்பு போன்றவற்றில் ஏற்பட்ட பற்றாக்குறையைப் பூர்த்தி செய்த பின்னரே, நிலத்தினுள் செல்லும். இதனால், நிலத்தினுள் செல்லும் தண்ணீரின் அளவு குறையக்கூடும். முக்கியமாக, கடலின் மேற்பரப்பில் உள்ள நீர், மத்திய மற்றும் கிழக்கு-மத்திய பசிபிக் பகுதியில் பூமத்திய ரேகையை வெப்ப அலை கடந்து செல்லும்போது ஒரு அசாதாரண வெப்பமயமாதலைக் காண்கிறது.
எல் நினோ எப்படி ஏற்படுகிறது?
பூமத்திய ரேகையில் இருந்து தெற்கு நோக்கி நகரும் வெப்பக் காற்றான El Nino Southern Oscillation நடுநிலையில் இருக்கும் போது, வர்த்தகக் காற்று பூமத்திய ரேகையில் மேற்கு நோக்கி வீசுகிறது. மட்டுமல்லாமல், தென் அமெரிக்காவிலிருந்து ஆசியாவை நோக்கி வெதுவெதுப்பான நீரை எடுத்துச் செல்கிறது. இருப்பினும், எல் நினோவின் நிகழ்வின் போது, இந்த வர்த்தகக் காற்று வலுவிழந்து கிழக்கிலிருந்து (தென் அமெரிக்கா) மேற்கு நோக்கி (இந்தோனேசியா) வீசுவதற்குப் பதிலாக, அவை மேற்குக் காற்றாக மாறக்கூடும்.
இந்த சூழ்நிலையில், மேற்கிலிருந்து கிழக்கே காற்று வீசுவதால், பூமத்திய ரேகைக்கு கீழே அமைந்துள்ள தென் அமெரிக்க கண்டத்தின் பசுபிக் பெருங்கடலை ஒட்டிய நாடுகளில் வெதுவெதுப்பான நீரை நகர்த்திச் செல்கின்றன. இந்த நிகழ்வு நடக்கும் ஆண்டுகளில், பசுபிக் பெருங்கடலை ஒட்டிய நாடுகளில் சராசரியான கடல் மேற்பரப்பு வெப்பநிலை நிலவுகிறது.
எல் நினோ ஏற்படுத்தும் தாக்கம்
‘கடந்த காலங்களில், உலகளவில், எல் நினோ நிகழ்வானது கடுமையான வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் வறட்சியை ஏற்படுத்தியுள்ளது. எல் நினோ அதன் வலிமையைப் பொறுத்து, உலகெங்கிலும் சில இடங்களில் அதிக மழை மற்றும் வறட்சியை அதிகரிப்பது போன்ற தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது.’
தற்போதைய எல் நினோ நிகழ்வானது இந்த நூற்றாண்டின் ஐந்தாவது ஆகும். பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, குறிப்பாக நினோ பகுதிகள் எனப்படும் பசுபிக் பெருங்கடலை ஒட்டிய தென் அமெரிக்க நாடுகளில், கணித்ததை விட மிக விரைவான வெப்பமயமாதலின் அறிகுறிகளைக் வானிலை மாதிரிகள் காட்டுகிறது.
எல் நினோவை இந்திய சூழலோடு பொருத்திப் பார்க்கும்போது, கடந்த நூறு ஆண்டுகளில், 18 ஆண்டுகள் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதில், 13 ஆண்டுகள் எல் நினோவுடன் தொடர்புடையவை. எனவே, எல் நினோ நிகழ்வுக்கும், இந்தியாவில் ஒரு வருட மோசமான மழைப்பொழிவுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.
மேலும், 1900 மற்றும் 1950 க்கு இடையில், 7 எல் நினோ ஆண்டுகள் இருந்தன. 1951-2021 காலகட்டத்தில், 15 எல் நினோ ஆண்டுகள் இருந்தன (2015, 2009, 2004, 2002, 1997, 1991, 1982,1969,1962,1962,1981 1963, 1957, 1953 மற்றும் 1951). எல் நினோ நிகழ்வுகள் அதிகரித்து வருவதை இது உணர்த்துகிறது. 1951-2021 காலகட்டத்தின் 15 எல் நினோ ஆண்டுகளில், ஒன்பது ஆண்டுகளில் 10 சதவீதம் அளவுக்கே பருமவழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் எல் நினோ நிகழ்வு ஏற்படும் என அமெரிக்காவின் NOAA கணித்திருந்த நிலையில், இந்திய பெரும்பரப்பில் ஜுன் 1ம் தேதி தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை தாமதமாகி, ஜுன் 7ம் தேதி கேரளாவில் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை தாமதம் என்பது வழக்கமான ஒன்றுதான். எனினும் இந்த ஆண்டு தாமதத்திற்கு, அரபிக் கடலில் நிலைகொண்டிருக்கும் பிபர்ஜாய் புயலே காரணம் என்றும், இதற்கும் எல் நினோவுக்கும் தொடர்பில்லை என்றும், இதனடிப்படையில் இந்த ஆண்டு பருவமழை பொய்க்காது எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கேரளாவில் தொடங்கியுள்ள பருவமழை, மற்ற மேற்கு கடற்கரையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் காற்று திசை மாநிலங்களான கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்றும், அடுத்த மாத தொடக்கத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பருவமழை கொட்டும் என்றும் கணிக்கப்படுகிறது.
கட்டுரையாளர் – பொறியாளர் வெ. ஹரிஹர், புவியியல் ஆர்வலர்.
தொடர்புக்கு : harivenkatesan777@gmail.com
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry