
சில வாரங்களாக பள்ளிகளில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்பான செய்திகள் அதிகமாக வெளிவருகிறது. பெரும்பாலும் அவை சிறுசிறு சம்பவங்களாக அல்லாமல் மாநிலம் முழுவதும் கவனம் பெறத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களாகவே உள்ளன.
குழந்தைகள் மீது பாலியல் இச்சை கொண்டவர்கள் (paedophiles) குழந்தைகளை எளிதில் அணுகக்கூடிய இடமாக பள்ளிக்கூடம் திகழ்வதாகவும், குழந்தைகள் இயல்பாகவே எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் இருப்பதால் பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவே தெரிகிறது.
Also Read : தமிழை பயிற்று மொழியாக்காமல், மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல்! மருத்துவர் ராமதாஸ் சாடல்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருச்சியில் அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில்,
4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது.பெண்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் எந்த விதமான அச்சமும் இன்றி அதிகரித்து வருவது மிகுந்த… pic.twitter.com/HksAeEoWat
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) February 7, 2025
சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக உதவி தலைமையாசிரியர் பிப்ரவரி 18ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். இவை மிகச்சில உதாரணங்கள்தான்.
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “சிறுமிகளுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் தமிழ்நாடு மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது.
‘குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம்’ என்று சொல்லும் முதல்வர், குற்றத்தைத் தடுக்க என்ன செய்தார் என்பதைச் சொல்ல மறுப்பது ஏன்?” என விமர்சித்திருந்தார்.
கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது.
“குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம்” என்று சொல்லும்…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) February 18, 2025
2012 அரசாணை என்ன சொல்கிறது?
பாலியல் சீண்டல், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்குக் கடுமையான துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுக்கும் விதமாக, 2012இல் அப்போதைய அதிமுக அரசு அரசாணை (அரசாணை நிலை எண். 121) ஒன்றை நிறைவேற்றியது.
அந்த அரசாணையின்படி,
- தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையான கட்டாய ஓய்வு அல்லது பணிநீக்கம் போன்ற தண்டனை வழங்கப்படும். (அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2) இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் 8வது விதியில் கூறப்பட்டுள்ளது.
- சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகள் அனைத்தையும் ரத்து செய்ய, அது சார்ந்த துறை மூலம் நடவடிக்கை எடுத்து கல்விச் சான்றுகள் ரத்து செய்யப்படும்.
- பள்ளிக் குழந்தைகளும், மாணவ – மாணவிகளும் பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
- ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாவண்ணம் தகுந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.
- பள்ளி மாணவ, மாணவிகளின் மனநிலையை பாதிக்கும் பிரச்னைகளைக் களைவதற்கான உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கென பள்ளிக் கல்வித்துறை மூலம் உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி, இதன்மூலம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.
இந்நிலையில், பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். ஆனால், “பாலியல் வழக்குகளில் நிறைய ஆசிரியர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் மீது துறைரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது இதுவரை வெளியே வந்தது இல்லை. ஒருவேளை அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அதுகுறித்த தகவல்கள் பொதுவெளியில் இல்லை.
“பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களை அதிகபட்சம் பணியிட மாற்றம் செய்வார்கள், பணியிடை நீக்கம் செய்வார்கள். பணியிட மாற்றம் செய்யும்போது, அந்த ஆசிரியர் வேறு சில குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்ள வாய்ப்புள்ளதே தவிர, குற்றம் தடுக்கப்படாது. எனவே, 2012 அரசாணையை முறையாக இப்போதைய அரசு நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். அப்படிச் செய்யும்போது நிச்சயமாக இந்தச் சூழலில் மாற்றம் வரும்” என்று குழந்தைகள் நல ஆர்வலர் ஆண்ட்ரூ சேஷுராஜ் கூறுகிறார்.
தமிழ்நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை என்பது இல்லை எனச் சுட்டிக்காட்டும் மற்றொரு குழந்தைகள் நல ஆர்வலரான தேவநேயன், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஒவ்வொரு மாநிலத்திலும் இத்தகைய பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
“குழந்தைகளுக்கு பள்ளிகளில் நடக்கக்கூடிய அனைத்து ரீதியான வன்முறைகள் மீதும் ஒன்றாகக் கவனம் செலுத்த வேண்டும். அதைத்தான் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து தயாரிக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை வலியுறுத்துகிறது. ஆனால், அவை இன்னும் தமிழக அரசால் செயல்படுத்தப்படவில்லை” என்கிறார் அவர்.
“பள்ளிக்கூடத்தில் இத்தகைய சம்பவங்கள் நடந்தால் நிர்வாகம்தான் பொறுப்பு. ஆனால், பெரும்பாலான நேரங்களில் பெற்றோர்கள்தான் புகார் அளிக்கின்றனர். பாலியல் சம்பவங்கள் பள்ளிகளில் நடக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டு, ஆசிரியர்கள் வெளிப்படையாகப் பேச வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள், காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்டவற்றுடன் இணைந்து பள்ளிக் கல்வித்துறை செயல்பட வேண்டும்” என தேவநேயன் வலியுறுத்துகிறார்.
இந்நிலையில், சில ஆண்டுகளில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவது 40-50% அதிகரித்துள்ளதாக அதிமுக மாணவர் அணி தெரிவித்துள்ளது. சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த கட்சி பேதத்தைத் தாண்டி தன்னார்வலராக பணியாற்ற வருமாறு அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு 91 50 65 67 67 என்ற எண்ணிற்கு உங்கள் பெயர், முகவரி மற்றும் நீங்கள் பங்களிப்பதற்கான காரணத்தையும் WhatsApp செய்ய வேண்டும்.
தன்னார்வலர்கள் தேவை!
கடந்த சில ஆண்டுகளில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவது 40-50% அதிகரித்துள்ளது என்பது மனவருத்தத்தை அளிக்கிறது.
சிறுமிகள் மற்றும் மாணவிகளுக்கு தினம் தினம் நடக்கும் பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் தங்களை பாதிக்கிறதா?
நீங்கள் எந்த கட்சி… pic.twitter.com/lA87jlpqet
— AIADMK Student Wing – அஇஅதிமுக மாணவரணி (@AdmkStudentWing) February 20, 2025
பாலியல் உள்ளிட்ட எவ்வித வன்முறைகளையும் எதிர்கொள்ளும் குழந்தைகள் 1098 என்ற இலவச உதவி எண்ணையும், தமிழக அரசு அறிவித்துள்ள 14417 என்ற உதவி எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.
With Input BBC. Image Source – Getty Image.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry