21. 11. 2023 அன்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற தனியார் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “ஜெயலலிதா மறைந்த பிறகு அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன என்று தெரியாமல் இருந்தனர். 40க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொள்ள விரும்பினார்கள். இதனை அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடத்தில் சொன்னதாகவும், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் பேசியிருந்தார்.
அவரின் இத்தகைய பேச்சு அஇஅதிமுகவுக்கும், அதன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மன உளைச்சலையும், நற்பெயருக்கு களங்கத்தையும் ஏற்படுத்தியதைக் கருத்தில் கொண்டு, அஇஅதிமுகவின் செய்தி தொடர்பாளர், அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவின் மாநில இணை செயலாளர் மற்றும் அஇஅதிமுகவின் சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் என்ற அடிப்படையில், பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் விளக்கம் கேட்டும், அவர் சொன்ன கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என்றும், மானநட்டமாக ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் எனவும் பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
ஆனால், நோட்டீஸை பெற்றுக் கொண்ட அப்பாவு எந்த விதமான பதிலும் தராமலும், சொன்ன கருத்தை திரும்பவும் பெறாமலும் இருந்ததன் அடிப்படையில், எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பாபு முருகவேல் சார்பில் அவர் மீது மானநட்ட வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கு அங்கு கோப்புக்கு எடுக்கப்படாத நிலையில், அதன் மேல்முறையீடாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அங்கும் வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாத சூழலில், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், மனுதாரர் பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையை தொடரும்படி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு, வழக்கிற்கான எண் கொடுத்த நீதிபதி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றினார்.
இந்த வழக்கு இன்று காலை நீதிபதி ஜெயவேல் முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அப்பாவுவின் வக்காலத்தை தாக்கல் செய்தார். தங்களுக்கு நீதிமன்ற அழைப்பாணையை வாங்கக் கூடாது என்ற எண்ணம் இல்லை; எங்களை மன்னிக்கவும்; இந்த நீதிமன்றத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்; நீதிமன்றம் அனுப்பக்கூடிய அழைப்பாணையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்; நீதிமன்றம் உத்தரவிடுகின்ற நாளில் அப்பாவு நேரில் ஆஜராவார் என உத்தரவாதம் அளிக்கிறோம் என்று தெரிவித்தார்கள்.
அதற்கு மறுப்பு தெரிவித்த மனுதாரரான வழக்கறிஞர் பாபு முருகவேல், ‘இந்த வழக்கைப் பற்றிய அறிவு அப்பாவுக்கு முழுவதுமாக தெரியும். கடந்த 8.8.2024 அன்று அழைப்பானை அனுப்பப்பட்ட பிறகு திருநெல்வேலியில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த வழக்கைப்பற்றி அவரிடத்திலே கேள்வி கேட்டபோது, வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று பதில் அளித்திருக்கிறார். அந்த நிகழ்வு செய்தித்தாள்களிலும் வந்திருக்கிறது. அதனால் வழக்கை பற்றிய அறிவு அவருக்கு இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை வருகிற 13-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அத்துடன், இந்த தேதியில் அப்பாவு நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார். இதன்படி, அப்பாவு வருகிற 13-ந்தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry