அடிமட்டத் தொண்டன் ஆளுமையான வரலாறு! – ஒரு கிளைக்கழகச் செயலாளரின் கோட்டைப் பயணம்!

0
19
EPS Journey from Village Secretary to AIADMK General Secretary.
அதிமுகவின் ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமியின் 35 ஆண்டுகால அரசியல் போராட்டங்கள், சாதனைகள் மற்றும் அவர் சந்தித்த சவால்கள் குறித்த விரிவான வரலாற்றுப் பதிவு.

தமிழக அரசியல் வரலாற்றில் பல தலைவர்கள் வாரிசுப் பின்னணியாலோ அல்லது சினிமா கவர்ச்சியாலோ உருவானார்கள். ஆனால், ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கிளைக்கழகச் செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து, இன்று பல கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்திருப்பவர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி. இது வெறும் அரசியல் வெற்றியல்ல; ஒரு தொண்டனின் விடாமுயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்.

விவசாயக் குடிலில் விளைந்த வீரம்

1954-ஆம் ஆண்டு, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் பழனிசாமி. ஆரம்பக் காலத்தில் வெல்லமண்டி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போதே, அவருக்குள் பொதுவாழ்வு மீதான ஆர்வம் துளிர்விட்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். ஒரு கிளைக்கழகச் செயலாளராக அவர் ஆற்றிய பணிகள், அவரது உழைப்புக்குச் சான்றாக இன்றும் அந்தப் பகுதி மக்களால் பேசப்படுகிறது.

EPS Journey from Village Secretary to AIADMK General Secretary.

1989: அந்த 1,299 வாக்குகள் மாற்றிய வரலாறு!

1987-ல் புரட்சித் தலைவர் மறைந்தபோது கழகம் இக்கட்டான சூழலில் இருந்தது. துரோகங்களும், குழப்பங்களும் சூழ்ந்த அந்த நேரத்தில், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பக்கம் உறுதியாக நின்றார் எடப்பாடியார். அந்த விசுவாசத்திற்குப் பரிசாக 1989-ல் எடப்பாடி தொகுதியில் போட்டியிட அம்மா அவர்களால் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது அவர் ஒரு அறிமுகமில்லாத இளைஞர். ஆனால், வீடு வீடாகச் சென்று அவர் செய்த களப்பணி, அவரை 1,299 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தது. அன்று தொடங்கிய அந்த வெற்றிப் பயணம், எடப்பாடி தொகுதியை அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாற்றியது. 1991, 2011, 2016, 2021 எனத் தொடர் வெற்றிகளால் அந்த மண்ணின் மைந்தனாக அவர் நிலைத்து நின்றார்.

நிதானம் – அம்மாவிடம் பெற்ற நற்சான்றிதழ்

எடப்பாடியாரின் மிகப்பெரிய பலமே அவரது நிதானமும், சொன்ன வேலையைச் செம்மையாகச் செய்து முடிக்கும் திறனும்தான். ஆர்ப்பாட்டம் இல்லாத ஆளுமை, அமைச்சராக இருந்தபோது எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காத நிர்வாகத் திறன் ஆகியவை அம்மாவின் கவனத்தை ஈர்த்தன. 2011-ல் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக அவர் செய்த சாதனைகள், தமிழகத்தின் உள்கட்டமைப்பை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றன. இதனால்தான் அம்மா அவர்கள் தனது நம்பிக்கைக்குரிய ‘ஐவர் குழு’வில் ஒருவராக எடப்பாடியாரைத் தேர்ந்தெடுத்தார்.

சோதனைகளைச் சாதனைகளாக்கிய முதலமைச்சர் காலம்

2016 டிசம்பர் 5 – அம்மா அவர்களின் மறைவு அதிமுகவை ஒரு இருண்ட காலத்திற்குள் தள்ளியது. உட்கட்சிப் பூசல்கள், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், ஓபிஎஸ்-ன் தர்மயுத்தம் என அதிமுக அழியப்போகிறது என எதிரிகள் கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருந்தனர். 2017 பிப்ரவரி 18-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற எடப்பாடியார் மீது பலருக்கு சந்தேகம் இருந்தது. “இந்த ஆட்சி ஒரு மாதம் தாங்குமா? மூன்று மாதம் நீடிக்குமா?” என்று எள்ளி நகையாடினார்கள்.

ஆனால், அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்தார் EPS. சசிகலா குடும்பத்தின் மறைமுக அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நான்கு ஆண்டுகாலம் ஒரு வெற்றிகரமான ஆட்சியைத் தந்து, “நானும் ஒரு விவசாயிதான்” என்று கம்பீரமாக முழங்கினார். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது முதல், மருத்துவப் படிப்பில் ஏழை மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு தந்தது வரை அவரது சாதனைகள் சரித்திரம் பேசும்.

EPS Journey from Village Secretary to AIADMK General Secretary.

2026: ஒற்றைத் தலைமையில் புதிய விடியல்

டெல்லி முதல் உள்ளூர் துரோகிகள் வரை கொடுத்த அத்தனை அழுத்தங்களையும் தவிடுபொடியாக்கிவிட்டு, அதிமுகவின் பொதுச்செயலாளராக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் எடப்பாடியார். ஓபிஎஸ் போன்றவர்களின் முட்டுக்கட்டைகளை சட்டரீதியாக முறியடித்து, அதிமுகவை ஒரு கட்டுக்கோப்பான ராணுவமாக அவர் மாற்றியுள்ளார்.

“கிளைக்கழகச் செயலாளராக இருந்த என்னால் முதலமைச்சர் ஆக முடிகிறது என்றால், அது அதிமுகவில் மட்டும்தான் சாத்தியம்” என்று அவர் சொல்லும் ஒவ்வொரு வார்தையும், இன்று லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு ஒரு டானிக். 1989-ல் ஒரு சிறிய வெற்றியில் தொடங்கிய அந்தப் பயணம், இன்று 2026-ல் மீண்டும் கோட்டையை நோக்கித் துணிவுடன் முன்னேறுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry