
மனித இனப்பெருக்கத்தின் அடிப்படை அங்கமாகிய விந்தணு குறித்து இன்னும் பல மர்மங்கள் நீடிக்கின்றன. ‘விந்தணுக்கள் எப்படி நீந்துகின்றன? அவை கருமுட்டையை எப்படி கண்டுபிடிக்கின்றன? எப்படி கருவாக மாறுகின்றன?’ போன்ற கேள்விகள், 350 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சிக்குப் பிறகும் விஞ்ஞானிகளுக்குப் புதிராகவே உள்ளன. ஆண் மலட்டுத்தன்மைக்குத் தீர்வு காணும் வகையில், விஞ்ஞானிகள் இந்த மர்மங்களை அவிழ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விந்தணுவின் உற்பத்தி மற்றும் தனித்துவம்:
ஆச்சரியப்படும் விதமாக, ஒரு ஆணின் ஒரு இதயத் துடிப்புக்கு சுமார் 1,000 விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன. உடலுறவின் போது கோடிக்கணக்கான விந்தணுக்கள் கருமுட்டையை அடையப் போட்டியிட்டாலும், ஒரு சிலவே வெற்றியைப் பெறுகின்றன. டண்டீ பல்கலைக்கழகத்தின்(Dundee University of England) ஆய்வாளர் சாரா மார்டின்ஸ் டா சில்வா, விந்தணுக்கள் மற்ற செல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்றும், மனித உடலுக்கு வெளியே உயிர்வாழக்கூடிய ஒரே செல்கள் இவைதான் என்றும் குறிப்பிடுகிறார். அவற்றின் தீவிரச் செயல்பாடு காரணமாக, அதிக ஆற்றல் தேவைப்படும் இந்த செல்கள், பெண்ணின் உடலில் பயணிக்கும்போது சூழலுக்கேற்பத் தங்களை மாற்றி அமைத்துக்கொள்ளும் திறனுடையவை.
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்புகள்:
1677 இல் டச்சு நுண்ணுயிரியலாளர் அன்டோனி வான் லீவென்ஹோக் விந்தணுக்களை முதன்முதலில் “விந்து விலங்குகள்” எனக் கண்டறிந்தார். 1869 இல் சுவிஸ் உயிரியலாளர் ஜோஹன்னஸ் பிரீட்ரிக் மிஷர், விந்தணுக்களில் டிஎன்ஏ-வைக் கண்டறிந்து, அதை “நியூக்ளின்” எனப் பெயரிட்டார். பின்னர் 1874 இல், விந்தணுக்களின் அடிப்படைக் கூறான “புரோட்டமைன்” கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைய ஆய்வுகள், விந்தணு டிஎன்ஏ மட்டுமல்லாமல், எபிஜெனெடிக் தகவல்களையும் (மரபணு வெளிப்பாட்டை மாற்றியமைக்கும் கூடுதல் அடுக்கு) கொண்டுசெல்வதைக் காட்டுகின்றன. இது கருவின் வளர்ச்சி மற்றும் சந்ததிகளின் வாழ்நாள் பாதையைத் தீர்மானிக்கிறது.

விந்தணுவின் உருவாக்கம் மற்றும் நீச்சல் முறை:
ஆணின் பருவமடையும் காலத்தில், விந்தணு செல்கள் விரைப்பைகளுக்குள் உருவாகின்றன. ஆரம்பத்தில் வட்ட வடிவமாக இருந்து, பின்னர் வால் போன்ற அமைப்புடன் வியத்தகு முறையில் உருமாறுகின்றன. முழுமையான முதிர்ச்சியடைய ஒன்பது வாரங்கள் ஆகும்.
விந்தணுவின் நீச்சல் பற்றிய புரிதல் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. தலைப்பிரட்டையைப் போல் பக்கவாட்டில் அசைவதாக முன்னர் கருதப்பட்டது. ஆனால், 2023 இல் இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக(University of Bristol) ஆராய்ச்சியாளர்கள், இரண்டாம் உலகப் போரில் குறியீடுகளைப் படித்த கணிதவியலாளர் ஆலன் டூரிங் கண்டுபிடித்த “எதிர்வினை-பரவல்” கோட்பாட்டைப் போன்ற அலைகளை விந்தணுவின் வால் உருவாக்குவதைக் கண்டறிந்தனர். இது விந்தணுவின் நகர்வை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

கருமுட்டையை அடைவதிலும் கருத்தரிப்பதிலும் உள்ள சவால்கள்:
ஆணிடம் இருந்து வெளிப்படும் விந்தணுக்கள், பெண்ணின் கருப்பை வாய் வழியாக, ஃபெலோபியன் குழாய்கள் வழியாகக் கருவறைக்குள் சென்று, கருமுட்டையை அடைகின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால் விந்தணு, கருமுட்டையை எவ்வாறு சென்றடைகிறது என்பதை விஞ்ஞானிகளால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது அறிவியலில் நாம் கண்டறியாத மற்றொரு இடைவெளியாக இருக்கிறது.
ஆரோக்கியமான விந்தணுக்கள் மிகவும் குறைவு; பெரும்பாலானவை இலக்கை எட்டுவதில்லை. கருமுட்டையில் இருந்து வெளிப்படும் வேதியியல் சமிக்ஞைகள் அல்லது விந்தணுக்களின் “சுவை ஏற்பிகள்” ஆகியவை வழிகாட்டக்கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
விந்தணுக்களின் “தலைப்பகுதியில்” உள்ள ஒரு கூர்முனையைப் பயன்படுத்தி அவை கருமுட்டைக்குள் நுழைய முயற்சிக்கின்றன, தங்கள் வால்களை அடித்துக்கொண்டு வலுக்கட்டாயமாகத் தங்களை முன்னோக்கி நகர்த்துகின்றன. இறுதியாக, கருமுட்டை சவ்வுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே, அது கருமுட்டையைக் கருத்தரிக்கச் செய்ய முடியும்.
கருமுட்டையை அடைந்தவுடன் சவால் முடிந்துவிடுவதில்லை. கொரோனா ரேடியாட்டா, சோனா பெல்லுசிடா, முட்டை பிளாஸ்மா சவ்வு என மூன்று பாதுகாப்பு அடுக்குகளால் சூழப்பட்ட கருமுட்டைக்குள் நுழைய, விந்தணு தனது தலையில் உள்ள அக்ரோசோம் மூலம் நொதிகளை வெளிப்படுத்த வேண்டும். இந்த நொதிகள் எப்படி வெளியேறுகின்றன என்பது இன்னும் அறியப்படவில்லை.

கருத்தரிப்பின் சிக்கல் மற்றும் பாலிஸ்பெர்மி:
மனித செல்கள் இரு குரோமோசோம்களைக் கொண்ட டிப்ளாய்டு வகையைச் சேர்ந்தவை. ஒன்றுக்கு மேற்பட்ட விந்தணுக்கள் கருமுட்டையுடன் இணைந்தால் பாலிஸ்பெர்மி (Polyspermy) என்ற ஆபத்தான நிலை ஏற்படும். இதைத் தடுக்க, கருமுட்டை உடனடியான இரண்டு பாதுகாப்பு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது:
முதலில் அதன் சவ்வு விரைவாகத் தடையை உருவாக்குகிறது; பின்னர் ‘புறணி எதிர்வினை’ மூலம் கால்சியம் வெளியிடப்பட்டு, கருமுட்டையின் வெளிப்புறப் பூச்சு கடினமாகி, வேறு விந்தணுக்கள் ஊடுருவுவதைத் தடுக்கிறது. விந்தணுவின் இந்த நுட்பமான பயணத்தைப் புரிந்துகொள்வது, ஆண் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை அளிப்பதற்கும், இனப்பெருக்க மருத்துவத்தின் புதிய எல்லைகளை ஆராய்வதற்கும் மிகவும் அவசியம். இந்த ஆராய்ச்சிப் பயணம் தொடர்கிறது.
மூலம் & படம் – பிபிசி
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry