
கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. வெளியே சிறிது நேரம் சென்றாலே, உடல் வறண்டு போகும் அளவில் சூரிய கதிர்கள் சுட்டெரிக்கின்றன. இப்படி வெயில் அதிகம் அடிப்பதால், வெளியே அலைந்து வேலை செய்பவர்கள் கோடையில் சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சனை தான் மலச்சிக்கல்.
கோடை காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் உடலின் நீரேற்றம் குறைவது மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவுகளை உட்கொள்வது ஆகும். கோடை காலத்தில் அதிகப்படியான வெப்பம் இருக்கும் நிலையில், நிறைய பேர் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை.
Also Read : ஒரு டம்ளர் சுடுநீரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
கோடையில் சூரிய ஒளி மற்றும் அதிக வியர்வையால் உடல் வறட்சியடைகிறது. இந்த சூழ்நிலையில் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. கோடையில் மலச்சிக்கல் ஏற்பட இதுவும் ஒரு முக்கிய காரணம். மலத்தை நீர் மென்மையாக்குகிறது, குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது மலம் கடினமாகிறது. இதன் காரணமாக, மலம் கழிக்கும் போது வலி உணரப்படுகிறது. மலம் கடினமாகவும் திடமாகவும் வெளியேறும்.
நார்ச்சத்து ஒரு ஊட்டச்சத்து ஆகும், இது குடல் இயக்கத்தை எளிதாக்க மிகவும் முக்கியமானது. உடலில் நார்ச்சத்து இல்லாததால், உணவு சரியாக ஜீரணிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் மலம் கடினமாகத் தொடங்குகிறது. நார்ச்சத்து குறைபாடு முழு செரிமான அமைப்பையும் பாதிக்கும். குடல்கள் உணவை விரைவாக ஜீரணிக்க நார்ச்சத்து உதவுகிறது. சிறந்த செரிமானத்தை பராமரிக்க, தினமும் சுமார் 40 கிராம் நார்ச்சத்து தேவைப்படுகிறது.

உடல் சுறுசுறுப்பாக இல்லாதது மற்றும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதும் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். குறைவான உடல் செயல்பாடு காரணமாக, குடல் இயக்கம் குறைகிறது. இதன் காரணமாக, உணவு சரியாக ஜீரணிக்கப்படாமல், பின்னர் கடினமாகி மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.
மலச்சிக்கலுக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு நபர் நீண்ட நேரம் மன அழுத்தத்தில் இருந்தால், அது அவரது செரிமான அமைப்பை பாதிக்கிறது. இதன் காரணமாக, மலச்சிக்கல் அடிக்கடி தொந்தரவு செய்கிறது. செரிமானத்தை மேம்படுத்த, எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், எதிர்மறையைத் தவிர்த்து, மன அழுத்தமின்றி இருக்க முயற்சி செய்யுங்கள்.
Also Read : மூட்டு வலியை காணாமல் போகச் செய்யும் மூலிகை பானம்! சைட் எஃபெக்ட் இல்லா மேஜிக்! Joint Pain Relief!
கோடை காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் குறைவாக உட்கொள்வது மற்றும் நார்ச்சத்து இல்லாத உணவுகளை உட்கொள்வதும் மலச்சிக்கலுக்கு காரணமாகின்றன. எனவே தான் மற்ற காலங்களை விட கோடையில் மலச்சிக்கல் பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்படுகின்றனர்.
மலச்சிக்கலைத் தடுக்க வேண்டுமானால் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, நார்ச்சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுவும் கோடைக்கால பழங்களை உட்கொண்டு வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். பொதுவாக சீசன் பழங்களானது, அந்த சீசனில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்க்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும். கோடையில் சந்திக்கும் மலச்சிக்கலில் இருந்து விடுபட சாப்பிட வேண்டிய கோடைக்கால பழங்களைக் காண்போம்.

ஆப்பிள்
குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்வதில் ஆப்பில் மிகச்சிறந்த பழம். ஏனெனில் ஆப்பிளில் பெக்டின் என்னும் நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கலில் இருந்து விடுபட பெரிதும் உதவி புரியும். அதுவும் ஆப்பிளின் முழு பலனையும் பெற விரும்பினால், அந்த ஆப்பிளை தோலுடன் சாப்பிட வேண்டும்.
ஆரஞ்சு
மலச்சிக்கலில் இருந்து விடுவிப்பதில் ஆரஞ்சு பழமும் மிகச்சிறந்தது. இனிப்பும், புளிப்பும் கலந்த ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது குடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. கூடுதலாக ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

பப்பாளி
பப்பாளி கோடைக்காலத்தில் மட்டுமின்றி, அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய விலை குறைவான பழமாகும். இந்த பப்பாளியை காலை அல்லது மதிய வேளையில் தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், குடலியக்கம் சீராக இருக்கும். இதில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப் பொருள், உணவுகளை எளிதில் உடைத்தெறிந்து, குடலில் எளிதில் நகர்ந்து செல்ல உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான செயல்முறையை மேம்படுத்தும் மற்றும் குடலியக்கத்தை சீராக்கும்.
மாம்பழம்
கோடைக்கால பழமான மாம்பழம் சுவையானது மட்டுமின்றி, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிப்பதில் சிறந்தது. இதற்கு மாம்பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான் காரணம். இது செரிமானத்தை சீராக வைத்துக் கொள்வதோடு, குடலியக்கத்தையும் சீராக்கும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஒரு மாம்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலசிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

தர்பூசணி
கோடைக்கால பழமான தர்பூசணி நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இந்த தர்பூசணியில் நார்ச்சத்தும் உள்ளன. எனவே மலச்சிக்கலால் அவதிப்படும்போது, தர்பூசணி பழத்தை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.
கனிந்த வாழைப்பழம்
அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் தான் வாழைப்பழம். அதுவும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும். இப்படியான பழத்தில் தான் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் இருக்கும். இதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். அதுவே கனியாத வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச் மலச்சிக்கல் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். அதனால் தான் வயிற்றுப் போக்கின் போது கனியாத வாழைப்பழத்தை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
Also Read : முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமற்ற கொழுப்பு..? உண்மையை தெரிஞ்சிக்க இதை படிங்க…!
மலச்சிக்கலுக்கு மோர் குடிப்பது நல்லது. மோரில் சீரகப் பொடி, கல் உப்பு மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றைக் கலந்து குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சீரகம் மற்றும் கல் உப்பு கலந்து மோர் குடிப்பது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. மோரில் புரோபயாடிக்குகள் உள்ளன. இவை வயிற்றில் பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. மோர் வயிற்றைக் குளிர்விக்கும். குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சீரகத்தின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வாயு மற்றும் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. இது செரிமான நொதிகளை ஒழுங்குபடுத்துகிறது.

Summary : கோடை காலத்தில் மலச்சிக்கலுக்கு, நார்ச்சத்து நிறைந்த பழங்களை மருத்துவரின் ஆலோசனையின் படி சாப்பிடலாம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளின் மருத்துவர்களின் பரிந்துரைப்படியே பழங்களை சாப்பிட வேண்டும். மேலே குறிப்பிட்ட பழங்களுடன் பிளம், பேரிக்காய், திராட்சை போன்ற பழங்களும் மலச்சிக்கலைத் தணிக்க உதவும். பிளம் பழம் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. பேரிக்காயும் ஒரு இயற்கையான மலமிளக்கியாகும், இது மலச்சிக்கலை தணிக்கவும், குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. திராட்சை நார்ச்சத்து நிறைந்தது, இது செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.
Disclaimer : மலச்சிக்கல் ஒரு பொதுவான பிரச்சனை, ஆனால் சில சமயங்களில் இது ஒரு மருத்துவக் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனையை பெறுவது முக்கியம். மலச்சிக்கலுக்கு சரியான சிகிச்சை மற்றும் உணவு முறையை மருத்துவர் பரிந்துரைப்பார். சிலருக்கு, மலச்சிக்கல் மருந்து தேவைப்படலாம். ஆனால், உணவு முறை மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் மலச்சிக்கலை கட்டுப்படுத்த முடியும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry