
நடிகை விஜயலட்சுமி வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதேபோல் சீமானுக்கு எதிரான புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இரு தரப்பும் பரஸ்பரம் மன்னிப்பு கோரியதால் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “தனது உறுதிமொழிப் பத்திரத்தில் சீமான், நடிகையிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருப்பதையும், நடிகைக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்றிருப்பதையும், எந்த வகையிலும் அவரைத் தொடர்பு கொள்ள மாட்டேன் என்று உறுதியளித்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.”
பதிலுக்கு, சீமானுக்கு எதிரான தனது புகாரையும், முதல் தகவல் அறிக்கையையும் (FIR) திரும்பப் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி உறுதிமொழிப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.
Also Read : கரூர் பேரழிவு: சதி நடந்துள்ளது! SIT விசாரணை வேண்டாம்! உச்ச நீதிமன்ற கதவைத் தட்டிய தவெக!
சமரசத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “இரு தரப்பினரும் தாக்கல் செய்த இந்த உறுதிமொழிப் பத்திரங்களின் நோக்கம், அவர்களுக்கு இடையேயான அனைத்து சர்ச்சைகள் மற்றும் வழக்குகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதாகும். இரு தரப்பினருக்கும் இடையேயான அனைத்து வழக்குகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் இந்த உறுதிமொழிப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன,” என்று கூறினர்.
வழக்குகளைத் தொடர இரு தரப்பினரும் விரும்பவில்லை என்றும், சீமானுக்கு எதிராக எந்த ஊடகத்திலும், டிஜிட்டல் அல்லது சமூக ஊடகங்கள் உள்பட எந்தக் கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என்று நடிகை விஜயலட்சுமி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
நடிகை விஜயலட்சுமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷாதன் ஃபரஸாத், தனது கட்சிக்காரர் புகாரை திரும்பப் பெற்றதை சீமானுக்கு அளிக்கப்பட்ட மறைமுகமான மன்னிப்பாகக் கருதலாம் என்றும், சீமானின் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் நடிகைக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரினார். சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “அதை நாங்கள் உறுதி செய்வோம்,” என்று பதிலளித்தார்.
இரு தரப்பினரும் தங்கள் உறுதிமொழிப் பத்திரங்களில் தெரிவித்துள்ள கூற்றுகளை “எழுத்துப்பூர்வமாகவும், அதன் சாராம்சத்திலும்” கடைப்பிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கு, 2007 மற்றும் 2011க்கு இடையில் திருமண வாக்குறுதியுடன் நடிகை விஜயலட்சுமியுடன் பாலியல் உறவில் இருந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 2011 இல் சீமான் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் ஏற்படும் வாய்ப்பை ஆராயும் பொருட்டு, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 12ந் தேதி அன்று, நடிகைக்கு எதிராகப் பேசிய கருத்துக்களுக்கு அவரிடம் சீமான் மன்னிப்புக் கோர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. அவர் அவ்வாறு செய்தால், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டது. தற்போது முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ததன் மூலம், இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry