ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவந்த 11 பேரில், ரவுடி திருவேங்கடம் இன்று அதிகாலை போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த என்கவுன்ட்டர் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது என்று அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5-ம் தேதி இரவு பெரம்பூரில் அவரது வீட்டருகே ஆறு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட11 பேரை செம்பியம் போலீஸர் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 11 பேரில் ஒருவர் ரவுடி திருவேங்கடம். குன்றத்தூர் பெரியார் நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்த இவருக்கு 33 வயதாகிறது.
போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட திருவேங்கடம் பரங்கிமலை ஆயுதப்படை வளாகத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சரவணன் விசாரணைக்காக மாதவரம் ஆடுத்தொட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திருவேங்கடம் தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான போலீஸார் மாதவரம் ஆடுத்தொட்டியைச் சுற்றியுள்ள பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர், புழல் வெஜிட்டேரியன் வில்லேஜ் பகுதியிலுள்ள காலி இடத்தில் ஒரு தகரக் கொட்டகையில் திருவேங்கடம் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீஸார் தகரக் கொட்டகையைச் சுற்றி வளைத்து திருவேங்கடத்தைப் பிடிக்க முயன்றனர். அப்போது திருவேங்கடம் தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து ஆய்வாளர் முகமது புகாரி தற்காப்புக்காகத் திருவேங்கடத்தை துப்பாக்கியால் சுட்டார். இதில் வலது பக்க வயிறு மற்றும் இடது பக்க மார்பில் குண்டுகள் பாய்ந்து அவர் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக போலீஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். பின்னர், திருவேங்கடத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இந்நிலையில், வேலூர் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “இன்று சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடம் என்பவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர். மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்காக அதிகாலையில் அவரை வேக வேகமாக அழைத்துச் சென்றது ஏன்? கைவிலங்குப் போட்டு பாதுகாப்போடு சென்றிருக்க வேண்டும். ஏற்கெனவே, `உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை’ என்று ஆம்ஸ்ட்ராங் உறவினர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும் சொல்லி வந்த நிலையில், இந்த என்கவுன்ட்டர் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது’’ என்றார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry