
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தில், விஷச்சாராயம் அருந்தியதில் 130-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஐ நெருங்குகிறது. கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி , விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் சிலருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக கஞ்சா மற்றும் சிந்தெடிக் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், கடந்த மே மாதம் மரக்காணம் மற்றும் மதுராந்தகம் செய்யூரில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 30 பேர் உயிரிழந்தனர். அதேபோல், சரியாக ஓராண்டுக்கு முன் தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலக்கப்பட்டிருந்ததுதான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்தது. அரசு மதுக்கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுவில் சயனைடு எவ்வாறு கலக்கப்பட்டது என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.
தற்போது கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மாலை 4 மணி நிலவரப்படி இதுவரை 39 பேர் உயிரிழந்த நிலையில், 90-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி , விழுப்புரம் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் 24 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன என்பதையே இது காட்டுகிறது. இந்த சம்பவத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும்.
Also Read : சந்துருவின் பரிந்துரைகள் நடுநிலையாக இல்லை! அபத்தமான, தான்தோன்றித்தனமான கருத்துகள் என KSR விமர்சனம்!
மரக்காணம் மற்றும் மதுராந்தகம் செய்யூர் சம்பவத்திலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்ய அரசு தவறிவிட்டது. மரக்காணம் மற்றும் மதுராந்தகம் செய்யூர் சம்பவத்தில் 30 பேர் உயிரிழக்கக் காரணமான அதே மெத்தனால், கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்திலும் கலந்திருப்பது ஆய்வு முடிவில் தெரியவந்திருக்கிறது. உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. விஷச்சாராயம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி-யிடம் வழங்கப்பட்டுள்ளது. கருணாபுரத்தில் பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி(49) மற்றும் அவரது குடும்பத்தினரை போலீஸ் கைது செய்திருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள்மீது அக்கறை இல்லை. விஷச்சாராய விற்பனை குறித்து அதிமுக எம்.எல்.ஏ செந்தில்குமார் பலமுறை எஸ்.பி-யிடம் புகார் தெரிவித்துள்ளார். கஞ்சா, விஷச்சாராய விற்பனை இப்பகுதியில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது; புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.” என அவர் கூறியுள்ளார்.


தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும், சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார், உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார். கள்ளச்சாராய சாவு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் திமுககாரராகவே அறியப்படுகிறார். ஒரு மாதத்துக்கு முன்பு கள்ளக்குறிச்சி போலீஸார் இவரை கைது செய்தபோது, ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட திமுக செயலாளருமான வசந்தம் கார்த்திகேயன், போலீஸாரை மிரட்டி உடனடியாக அவரை விடுவித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடக்காமல் இருந்திருந்தால் இத்தனை உயிர்கள் போயிருக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர். தெருவுக்கு தெரு உடல்கள் வைக்கப்பட்டு, இறந்தவா்களின் உடல்களுக்கு உறவினா்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.


மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் மலையரசனுக்கு வாழ்த்து தெரிவித்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் தி.மு.க அலுவலகம் அருகில் கோவிந்தராஜ் ஃபிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். கள்ளச்சாராய சாவு குறித்த செய்தி வெளியான பிறகு நேற்று மாலைதான் அந்தப் பதாகை அகற்றப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு சாராய வியாபாரிக்கும் – தி.மு.க-வுக்கும் தொடர்பு உள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு மரக்காணம் பகுதியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான சாராய வியாபாரி மருவூர் இராஜாவுடன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மஸ்தானுக்கு நெருங்கிய உறவு இருந்ததாக அப்போது பரபரப்பாக கூறப்பட்டது.
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு தி.மு.க-வினர் கொடுத்த ஆதரவு தான். கல்வராயன்மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது. அதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும் கூட, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ.வேலுவின் ஆதரவாளரான, ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்டோர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.” என்று கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அரசின் நிவாரண அறிவிப்பும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் பட்டாசு ஆலைகளில் வயிற்றுப் பிழைப்புக்காக தினக்கூலிகளாக பணியாற்றுவோர் வெடிவிபத்தில் சிக்கி உடல் சிதறி உயிரிழக்கின்றனர். அவர்களது குடும்பத்துக்கு அரசு அதிகபட்சம் ரூ.2 லட்சம் நிவாரணம் தருகிறது. ஆனால், விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தால் ரூ.10 லட்சம் கொடுப்பது, அரசு தனது தவறை, இயலாமையை மூடி மறைக்கும் முயற்சி என்றே அரசியல் நோக்ர்கள் கூறுகின்றனர்.
பொதுவாகவே, கள்ளச்சாராயத்திற்கும், விஷ சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம். அதுவே, போதைக்காக மெத்தனால் அல்லது எத்தனால் கலக்கப்படும் போது அது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும்.
எந்தெந்த தொழிற்சாலைகளில் எத்தனால், மெத்தனால் கிடைக்கும் என்பதை கள்ளச்சாராய வியாபாரிகள் தெரிந்து வைத்துக் கொள்வார்கள். அதேபோல், கள்ளச்சாராய வியாபாரிகள் விவரத்தை தொழிற்சாலை உரிமையாளர்களும் அறிந்திருப்பார்கள். சாராய வியாபாரிகளிடம் மெத்தனாலை விற்பதன் மூலம் கூடுதல் பணம் கிடைக்கும் என்பதே இதற்குக் காரணம். இந்த சட்டவிரோத கூட்டுதான், உயிரைப் பறிக்க காரணமாகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry