ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “தலைமைச் செயலகத்தில் இன்று(8.11.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், 29 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி கல்வித்துறை செயலாளர் மதுமதி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சங்கர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள்
பள்ளிக்கல்வித் துறை சார்பில், 29 மாவட்டங்களில், 141 அரசுப் பள்ளிகளில் 171.16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 754 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 17 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்களையும் திறந்து… pic.twitter.com/6c3JHVwPDJ— Anbil Mahesh (@Anbil_Mahesh) November 8, 2024
நிகழ்ச்சிக்குப் பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறையின் 3 ஆண்டு செயல்பாடுகளை ஆய்வு செய்தார். குறிப்பாக தமிழ்புதல்வன், புதுமைப்பெண், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நிதி சார்ந்த கோரிக்கைகளை தற்போது அறிவிப்பதில் சிரமம் இருக்கிறது. ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என அமைச்சர் கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையினை முதலமைச்சர் இன்று(08.11.2024) ஆய்வு செய்து சில கோரிக்கைகள் குறித்து அறிவிக்க இருக்கிறார்கள் என்று வலுவாகவே பேசப்பட்டது. இதனால் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், ஆசிரியர்களின் எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. அன்றாடம் சித்தரவதை எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அறச்சீற்றம் கொண்டு அனல் தெறிக்க பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
Also Read : பள்ளிகள் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு! NEP 2020ஐ மறைமுகமாக அமல்படுத்தும் முயற்சியா? ஐயம் கிளப்பும் ஐபெட்டோ!
நாம் நினைப்பதை, கேட்பதை நமது ஆட்சி உறுதியாக செய்து முடிக்கும் என்று குரல் கொடுக்கிறார்கள். அரசுக்கு ஆதரவான சங்கங்கள் அந்தக் காலத்திலிருந்தே இருந்து வருகின்றன. ஆனால் நம்மை நம்பி இருக்கின்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் முகங்களை பார்க்காமல், ஆள்பவர்களின் முகங்களை மட்டுமே பார்த்து, அரசு வழக்கறிஞர்களைப் போல, அரசின் மீது எந்தக் குறையும் சொல்லக்கூடாது என்று வாதாடுகிறவர்கள் இருக்கும் வரையில், எந்த கோரிக்கையும் நிறைவேறப்போவதில்லை. நிதி சார்ந்த கோரிக்கைகள் மட்டுமல்ல, நிதி சாராத கோரிக்கைகளும் நிறைவேறப்போவதில்லை.
முதலமைச்சரை பொறுத்தவரையில், தன்னை சந்திப்பவர்களுடைய தலைமையில் தான் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் 21 லட்சம் வாக்குகளும், அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 1.75 கோடி வாக்குகளும் அணிவகுத்து நிற்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறார். 90 விழுக்காடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார் என அனைவரும், எதையும் செய்யாத அரசு அன்றாடம் தொடர்ந்து புதிய புதிய அறிவிப்புகள் மூலம் மன அழுத்தத்தினை ஏற்படுத்தி வரும் செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற பாடலைப் பாடி வருகிறார்கள்.
‘2026 பொதுத் தேர்தல் வரை எதுவும் செய்யவில்லை என்றாலும், அடுத்த முறையும் ஆட்சி அமைப்பது நமது அரசு தான்; வெளிநாட்டு தொழில் முதலீடுகள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்ததற்குப் பிறகு, சொன்னதையும் செய்வார்கள் சொல்லாததையும் செய்வார்கள்’ என்று நம்மிடம் உறுதியளித்து பேசும் சங்கத் தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். போராட்டங்களால் வெற்றி பெற்றது தான் சங்கத்தின் வரலாறு. போராடாமல் பார்த்துக் கொள்வதற்காக சங்கத் தலைவர்கள் இருப்பதை தமிழ்நாட்டின் வரலாற்றில் எங்களால் காண முடிகிறது.
எங்களைப் போன்றவர்கள் திராவிட முன்னேற்றக் கழக கட்சி உணர்வில், ரத்த ஓட்டத்தில் இரண்டறக் கலந்து பயணம் செய்து வருபவர்கள். ஆனால் கட்சியா? சங்கமா? என்றால் நூறு விழுக்காடு சங்கத்தின் பக்கம் நின்று தான் எங்கள் பொது வாழ்வை நடத்தி வந்துள்ளோம். எங்களுடைய நீண்ட கால பொது வாழ்வில் அரசியல் கட்சிகள், ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களை இதுவரை கைவிட்டதில்லை. எந்தச் சூழ்நிலையிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்கு வங்கியினை இழக்கக்கூடாது என்பதில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி உறுதியாக இருந்தார்கள்.
பாதிக்கப்பட்டவர்களான நாம் கரம் கோர்த்து நிற்போம். ஆட்சியின் தலைமை சுய பரிசோதனை செய்வதற்கு நம்முடைய உறுதிமிக்க உணர்வுகள் சான்றாக அமையட்டும். வரவேற்க வேண்டியதை வரவேற்று என்றும் நன்றி பாராட்டுவார்கள் நாங்கள். சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் பதிவு செய்து வருபவர்களும் நாங்கள் தான்..! உண்மையை உரக்கச் சொல்வோம்..!” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry