தமிழை அழித்தொழிக்கும் ‘தங்க்லிஷ்’..! அழிந்துவரும் தாய்மொழி! கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்!

0
101
Is Tanglish threatening Tamil's future? Analyze the language shift in Tamil Nadu and the challenges of mother tongue preservation.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின், அதன் மொழியைச் சிதைத்தாலே போதும். மொழி என்பது இனத்தின், சமூகத்தின் பண்பாட்டு வடிவம். மொழிக்கும் அறிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படியிருக்க, தமிழ்நாட்டின் தற்போதைய களச்சூழல் தமிழ் இன அழிவின் ஆரம்பமோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.

நூற்றாண்டாக தமிழகத்தில் மொழி அரசியல் அவ்வப்போது கொழுந்துவிட்டு எரிவதுண்டு, அதன் தற்கால பரிமாணம்தான் மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு. மீண்டும் ஒரு மொழிப்போர் என்ற அளவில் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களே ஆர்ப்பரிக்கிறார்கள். மூன்றாவது மொழியாக இந்தி புகுந்து தமிழை அழித்துவிடும் என்று பொய் பேடி காட்டுபவர்கள், தமிழின் தற்போதைய நிலையை அறிந்துதான் பேசுகிறார்களா? இல்லை, தமிழ்நாட்டில் தமிழ்மொழி மங்கி வருகிறது என்ற உண்மையை மறைக்க எத்தனிக்கிறார்களா?

தமிழ்நாட்டில், பள்ளி மாணவர்களில் பெரும் சதவிகிதத்தினர் தமிழைப் பிழையின்றிப் படிக்கவோ, எழுதவோ தெரியாமல் தடுமாறுகின்றனர். அரசுப் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களால், 2 – 3ம் வகுப்பு மாணவர்களின் அடிப்படை பாட வரிகளைப் பார்த்துக் கூட படிக்க முடியவில்லை என ஏசர்(ASER) அறிக்கை கூறுகிறது. தனியார் பள்ளி மாணவர்களுக்கோ தமிழ் என்றாலே கசப்புதான். அதிலும் சிபிஎஸ்இ மாணவர்கள் என்றால் எக்காளம் கொஞ்சம் கூடுதல்தான்.

கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற மத்திய அரசு நேரடி நிர்வாகப் பள்ளிகளில், தமிழ் கட்டாயப் பாடமில்லை எனக் குறைகூறும் மாநில ஆட்சியாளர்கள், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி தமிழ்நாட்டில் தமிழ்மொழி கட்டாயம் என்று விதி இருந்தும், அதைப் பொதுத்தேர்வில் விருப்ப மொழிப் பாடமாக வைத்திருப்பதை ஏன் வாய் மூடி அனுமதிக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஒப்பீட்டளவில் பெரும்பாலான மாணவர்கள், இளைஞர்கள் தமிழ் மொழியின் கற்பைக் கலைத்து, மொழிச் சிதைப்பின் அடுத்த கட்டமான ‘தங்க்லிஷை’ மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களிடையே தமிழ் அந்நியப்படுவது மட்டுமின்றி, தொடர்பு மொழியான ஆங்கில மொழித் திறனும் அறுபட்டுப்போகிறது. இவ்வாறு மொழிச் சிதைவை ஊக்குவிக்கும் விதமான அரசின் நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது. அண்மையில், செயலி ஒன்றுக்கு அப்பா எனப் பெயரிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை, அதன் விரிவாக்கத்தை ’Anaithu Palli’ Parent Teachers Association என்றே குறிப்பிடுகிறது.

ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சீனா, ரஷ்யா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் கல்விகளைத் தாய்மொழியிலேயே கற்பிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பள்ளி நிலையிலேயே தமிழ் மொழிக்கு விலக்கு அளிக்கப்படுவது சிசுக்கொலைக்குச் சமமானது. ஆங்கில மொழி மோகத்தால், பெரும்பாலான பெற்றோர், ஆங்கில வழி கற்பிக்கும் பள்ளிகளிலேயே குழந்தைகளைச் சேர்க்கின்றனர். தவறில்லை, தொடர்பு மொழியான ஆங்கிலமும் முக்கியம்தான். அதற்காக தமிழ் மொழிக் கற்றலைத் தள்ளி வைப்போம் என்ற மனநிலை, மொழியின் வருங்காலத்துக்கு மிகுந்த அபாயகரமானது.

மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழைப் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இனிவரும் தலைமுறைகளாவது தாய் மொழித் தமிழை முறையாகவும், முழுமையாகவும் கற்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப்பாடமாகவும், தேர்வுகளில் கட்டாய மொழிப்பாடமாகவும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். ஒரு மொழி வளர்வதும், மிளிர்வதும், மாள்வதும் ஆட்சியாளர்களின் கொள்கை நெறிமுறைகளுக்கு உட்பட்டதே. தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஊக்கம் தர வேண்டிய ஆட்சியாளர்கள், மொழியைக் கொள்கையாக மட்டும் பேசிக்கொண்டு இருக்கிறார்களே என்ற கவலை மேலோங்குகிறது.

ஒருபுறம், மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு, இந்தித் திணிப்பு போன்ற உணர்வுமிக்க முழக்கங்களை முன்வைக்கும் ஆட்சியாளர்கள், தங்களால் இயன்ற நிர்வாகக் களைகளை களையாமல் இருப்பதும், மறுபுறம், மொழிக் கொள்கையை காரணம் காட்டி நிதி தராமல் இருப்பதும், கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் கர்நாடகா போன்று மாநில மொழியைக் கட்டாயமாக்காமல் முரண்டு பிடிப்பதையும் பார்க்கும்போது, தமிழ் மொழியின் வளர்ச்சியை சுட்டுத்தள்ளும் இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போலவே மாநில, மத்திய ஆட்சியாளர்கள் நடந்துகொள்கிறார்கள்.

இரு மொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, இந்தி பெயர்ப் பலகைகள் அழிப்பு என்ற அரசியல்தான் தமிழ்நாட்டை தற்போது கவ்விக்கொண்டுள்ளது. இருப்பைத் தக்க வைக்க அரசியல் கட்சிகளுக்கு இது பயன்படலாம். இதைத் தள்ளி வைத்துவிட்டு, வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில், தமிழில் பெரிய அளவில் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்ற ஏட்டளவிலான உத்தரவை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். மேலும், தமிழைக் கட்டாயப் பாடமாக்கி, பயிற்று மொழியாக்கி, தமிழ் இனத்தையும் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டியது ஆட்சியாளர்களின் அவசர அவசியக் கடமை.

சுமார் இரண்டு தலைமுறை மாணவர்கள் தமிழ்த் தாயிடம் அந்நியப்பட்டு நிற்கிறார்கள். ஒரு மாணவரால் தமிழைப் படிக்காமல், தமிழ் வழியில் படிக்காமல் பள்ளிப்படிப்பை முடிக்க இயலும் எனில், இன்னும் அரை நூற்றாண்டில் தமிழ் என்றதொரு மொழி இருந்ததற்கான விழுமியங்கள் எஞ்சுமே இன்றி, தமிழ் பேசும் மொழியினர் இல்லாத, பெயரில் மட்டுமே தமிழைச் சுமக்கும் தமிழ்நாடு மட்டுமே இருக்கும்.

“தமிழ் இனி மெல்லச் சாகும்” என்ற பாரதியாரின் கவலை வரிகளில், ‘மெல்ல’ என்ற காலக்கட்டத்தில் பயணிக்கத் தொடங்கியிருக்கும் நம் சமூகத்தில், வேட்டி அணிவது, வாழை இலையில் உண்பது போன்ற இயல்பான வாழ் முறைகள் எப்படி விழாக்கால பெருமைமிகு கடைப்பிடிப்புகளாக மருவி இருக்கிறதோ, அதுபோல பிழையின்றி தமிழைப் படிப்பதும் பெருமைமிகு தனித்துவமாகப் பார்க்கும் ஊழி காலம் நெடுந்தூரம் இல்லை.

கட்டுரையாளர் – கி. கோபிநாத், கல்விச் செயல்பாட்டாளர், மூத்த ஊடகவியலாளர். தொடர்புக்கு : krishnagopinaath@gmail.com

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry