ஒரே மாதிரி இட்லி, தோசை செய்து அலுத்துவிட்டவர்களுக்காக, பல விதமான தோசை ரெசிபிகளை கொடுத்து வருகிறோம். மீல் மேக்கர் தோசை, இன்ஸ்டன்ட் மேகி தோசை வரிசையில், மஞ்சள் பூசணி தோசை எப்படி செய்வதென்று தெரிந்துகொள்ளலாம். அதனுடனே, செட்டிநாடு ஸ்பெஷல் பச்சை மிளகாய் மண்டி எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
மஞ்சள் பூசணி தோசை செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சரிசி-1 ½ கப்
- ரவை-1/4 கப்
- அரிசி மாவு-1/4 கப்
- மஞ்சள் பூசணி-1 கப்
- வெங்காயம்-1
- சீரகம்-1 தேக்கரண்டி
- உப்பு-தேவையானஅளவு
- எண்ணெய்-தேவையான அளவு
மஞ்சள் பூசணி தோசை செய்முறை விளக்கம்:
முதலில் 1 ½ கப் பச்சரிசியை 1 மணி நேரத்திற்கு ஊற வைத்துக் கொள்ளவும். இப்போது மிக்ஸியில் ஊற வைத்த பச்சரிசி, ¼ கப் ரவை, ¼ கப் அரிசிமாவு, 1 கப் மஞ்சள் பூசணி, நறுக்கிய வெங்காயம் 1, சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மாவு அரைக்கும்போது அதில் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு, மாவை 15 நிமிடம் மூடி போட்டு வைத்து விடவும்.
இப்போது அடுப்பில் தோசைக்கல் வைத்து, எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு மாவு ஒரு கரண்டி எடுத்து அழகாக தோசை ஊற்றவும். இரண்டு பக்கமும் நன்றாக முறுகலாக வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மஞ்சள் பூசணி தோசை தயார்.
Also Read : இன்ஸ்டன்ட் மேகி தோசை..! ரவா தோசைக்கே டஃப் கொடுக்கும் சுவை! குட்டீஸ்களை குஷிப்படுத்துங்க!
பச்சை மிளகாய் மண்டி செய்ய தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய்-1 குழிக்கரண்டி
- கடுகு-1/2 தேக்கரண்டி
- வெந்தயம்-1/2 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி
- உளுந்து-1 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம்-20
- பூண்டு-10
- பச்சை மிளகாய்-10
- கருவேப்பிலை-1 கொத்து
- பெருங்யாயத்தூள்-2 தேக்கரண்டி
- கல் உப்பு-1 தேக்கரண்டி
- புளி-எழுமிச்சைப்பழ அளவு
- வெல்லம்-1 துண்டு
- நல்லெண்ணெய்-1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் மண்டி செய்முறை விளக்கம்:
முதலில் கடாயில் 1 குழிக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து, அதில் கடுகு ½ தேக்கரண்டி, வெந்தயம் ½ தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பொரிக்கவும். இப்போது 20 சின்ன வெங்காயம், 10 பூண்டு, 10 பச்சை மிளகாய், 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
இப்போது இதில் 1 தேக்கரண்டி கல் உப்பு, 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை மிளகாய் நன்றாக வதங்கி வந்ததும், ஒரு எலுமிச்சைப்பழ அளவு புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து இதில் சேர்க்கவும். குழம்பு நன்றாக கொதித்ததும் 1 துண்டு வெல்லம் சேர்க்கவும்.
இப்போது ஒரு பத்து நிமிடம் குழம்பை சிம்மில் வையுங்கள். குழம்பு நன்றாக சுண்டி வரும். அப்போது 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள், 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்விட்டு இறக்கவும். டேஸ்டியான மிளகாய் மண்டி தயார்.
Also Read : தள்ளுவண்டி கடை தண்ணி சட்னி! டிபன் பிரியர்களின் முதல் சாய்ஸ் இதுவாகத்தான் இருக்கும்!
மஞ்சள் பூசணியில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளது. இந்த குறைந்த கலோரி காய்கறியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ, லியூடின், சாந்தின் மற்றும் கரோட்டின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் ஏராளமாக உள்ளன. மஞ்சள் பூசணியில் வைட்டமின்கள் B1, B2, B6, D மற்றும் பீட்டா கரோட்டின்; தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, சுக்ரோஸ் போன்ற கனிமங்கள் உள்ளன. இதில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சில முக்கிய உப்புகள் மற்றும் புரதங்களும் உள்ளன.
Source : Kalki
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry