
ஐபெட்டோ (AIFETO) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, மத்திய அரசின் கல்விக்கொள்கை மற்றும் ஆசிரியர் விருதுகள் தொடர்பாகப் பல முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கொள்கை முடிவின்படி, ‘பள்ளிகள் இணைப்பு’ என்ற பெயரால் நாடு முழுவதும் பள்ளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. சுதந்திரம் அடைந்த காலம் முதல், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாகப் பதவி ஏற்கும் வரை, ஒவ்வொரு வருடமும் 378 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.
ஆனால் 2025-ஆம் ஆண்டில் வெறும் 45 ஆசிரியர்களை மட்டுமே மத்திய கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.” “முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ஆம் தேதி, டெல்லியில் குடியரசுத் தலைவர் அவர்களால் விருதுகள் வழங்கப்படும். விருது பெறும் ஆசிரியர்களுக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசு, வெள்ளிப் பதக்கம், மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து திருமதி ரேவதி பரமேஸ்வரன்(முதல்வர் பி எஸ் சீனியர் செகண்டரி பள்ளி, மயிலாப்பூர், சென்னை) மற்றும் திருமதி வி. விஜயலட்சுமி(பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்) ஆகிய இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
2025-ஆம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை வெறும் ஐந்து மட்டுமே! மணிப்பூர், மேற்கு வங்காளம், பீகார், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மட்டுமே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சிக் காலம் முதல் மோடி பிரதமராகப் பதவி ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கு மட்டும் 25 ஆசிரியர்கள் – 17 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும், 8 உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் – தேசிய விருது பெற்று வந்தனர். ஆனால் தற்போது ஒருவர் அல்லது இருவர் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.
நாடு முழுவதும் 378 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தேசிய விருதுகள், 45 லட்சம் ஆசிரியர்கள் கொண்ட இந்த நாட்டில், லட்சத்திற்கு ஒருவர் வீதம் 45 பேருக்கு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதன் நோக்கம் என்ன? இது விருது விரோத அரசா? அல்லது தமிழ்நாட்டு விரோதப் போக்கா? இருமொழி விரோதப் போக்கா?
இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த ஒரு ஆசிரியர் பெருமகனாரின் பெயரால் வழங்கப்படும் தேசிய விருதுகளின் எண்ணிக்கையை மத்திய அரசு குறைப்பது கண்டிக்கத்தக்கது. மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்து, 12-வது முறையாகத் தேசியக் கொடியை ஏற்றிய பெருமைக்குரிய பிரதமர் மோடி, 2026-ஆம் ஆண்டில் மீண்டும் 378 ஆசிரியர்களைத் தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். தமிழ்நாட்டிற்கு மீண்டும் 25 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
மத்திய அரசு கல்வி விரோத, மாநில விரோத அரசாகச் செயல்படாமல், அனைத்து மாநிலங்களையும் சமமாக மதித்துச் செயல்படும் அரசாகத் திகழ வேண்டும். இதை ஐபெட்டோ மற்றும் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் சார்பாக பிரதமரையும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4% கூட இல்லை. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டிய ரூ. 2,152 கோடி நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லை. மாணவர்களின் கல்வி நலனைப் பாதிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு மாற்றம் செய்யாவிட்டால், வரும் தேர்தல்களில் ஆசிரியர்கள், பொதுமக்கள், மற்றும் மாணவர்கள் அனைவரும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவார்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry