பள்ளிக் கல்வித்துறையை அடிமை போல் நடத்துவதா? தஞ்சாவூர் கலெக்டருக்கு எதிராக போராட்டம்! ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு!

0
1375
The Teachers' Association has announced a protest against the Thanjavur Collector's decision to hold a meeting despite opposition from educators. The group argues that the timing is inappropriate and ignores their concerns.

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சனிக்கிழமை பொது விடுமுறை, தொடர் மழை இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது திட்டமிட்டபடி 19.10.2024 அன்று தஞ்சாவூரில் மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்று, இரண்டு, மூன்று கற்பிக்கும் வகுப்பாசிரியர்கள் கூட்டத்தினை நடத்துவதில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிடிவாதமாக உள்ளார்.

AIFETO Annamalai

திட்டமிட்டபடி இந்தக் கூட்டம் நடத்தப்பட்டால் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்ணாசிரியர்கள் வெகு தூரத்தில் இருந்து வந்து பங்கேற்க வேண்டும். இந்த கூட்டத்தினை ரத்து செய்து உத்தரவிடுமாறு முதலமைச்சரின் தனிப் பார்வைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி இருந்தோம். தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தினோம். ஆனாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கூறுகிறார்.

Also Read : மழைக்கு நடுவே ஆசிரியர்களுக்கு பயிற்சி! ஆதிக்கம் செலுத்தும் தஞ்சை மாவட்ட ஆட்சியர்! கலெக்டர்கள் வசமாகிவிட்டதா கல்வித்துறை? முதலமைச்சருக்கு ஐபெட்டோ கடிதம்!

19ம் தேதி கூட்டத்தினை தொடர்ந்து, அடுத்த வாரம் சனிக்கிழமை 4, 5 வகுப்புகளின் ஆசிரியர்கள் கூட்டத்தினை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். தொடர்ச்சியாக மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வரை கூட்டம் நடத்தியாக வேண்டும் என்பதில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிடிவாதமாக உள்ளார்.

இந்தக் கூட்டம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அதிகாரிகளை கருத்துச் சொல்லவே அவர் அனுமதிக்கவில்லையாம். இந்த மாவட்டத்தை பொருத்தவரை நான் சொல்வதையே கேளுங்கள் என்கிறாராம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம். சனிக்கிழமைகளை விடுமுறை நாட்களாக பள்ளிக் கல்வித்துறை அறிவிக்கிறது. சிஆர்சி கூட்டம் நடத்துவதைக்கூட ஒத்தி வைத்துள்ளனர். ஆனால் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரோ, மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை ஒத்திவைத்து விட்டு ஆசிரியர்கள் கூட்டத்தை கூட்டுகிறார்.

பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்.

பிரியங்கா பங்கஜம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கிட்டத்தட்ட மூன்று மாத காலம்தான் ஆகிறது. இவரது செயல்பாடுகள் இப்படியே தொடருமானால், இவரைப் பின்பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கல்வித்துறையின் பொறுப்பினை அவர்களே எடுத்துக் கொள்வார்கள்.

பள்ளிக்கல்வி இயக்கத்தில் ஆணையர் பதவி தேவையா?, இயக்ககமா? ஆணையரகமா? என தொடர்ந்து கேள்விக் கணைகளை எழுப்பி, ஆணையர் பதவி ரத்து செய்யப்பட்டு, இயக்குனரகம் பேராசிரியர் க.அன்பழகனார் கல்வி வளாகம் ஆனது. அதுவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காலத்தில் தான் நடைபெற்றது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

பள்ளிக்கல்வித்துறையின் முழு அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்கள் எடுத்துக்கொள்வதும், சிரமங்களை கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர்கள் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் தன்னிச்சையாக கூட்டுவதும் இவர் காலத்தில் தான் நடக்கப் போகிறது. இதை உறுதிபடுத்துவதாக, முன்னுதாரணமாகத்தான் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைகள் உள்ளன. பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குநர்களுக்கு அமைச்சர் என்ன பணி கொடுக்கப் போகிறார்?

பொதுத் தேர்தலுக்கு முன்னர், அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் வாக்கு வங்கியினை ஒட்டுமொத்தமாக இழப்பதற்கு திமுக அரசு தயாராகி விட்டதா? என்ற கேள்வியைத்தான் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகள் எழுப்புகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள், உயர்நிலை – மேல்நிலைப் பள்ளி வரையில் உள்ள ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றிணைந்து, பள்ளி கல்வித் துறையின் தனித்தன்மையினை காப்பாற்றுவதற்கும், பள்ளிக் கல்வித் துறையினை அடிமை போல் நடத்தத் துணியும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கூட்டு போராட்டத்தினை அறிவித்திட உள்ளோம் என்பதையும், ஆசிரியர் சமுதாயத்தின் உணர்வுகளாக வெளியிடுகிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry