
நம்மில் ஒவ்வொருவரும் தங்களை எப்போதும் இளமையாக காட்டிக் கொள்ளவே விரும்புவோம். அதற்காக பல வழிமுறைகள், உணவுப் பழக்கங்கள், அழகுக் குறிப்புகள் போன்றவற்றை பின்பற்றவும் செய்வோம். ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் வயதான அறிகுறிகள் முகத்திலேயே தெரிந்து விடும். வயதானதை மறைக்கப் பெரும்பாலும் மேக்கப் செய்து கொள்வது, அழகு சிகிச்சையை மேற்கொள்வது என பலரும் பல முயற்சிகளில் ஈடுபடுவர்.
இந்நிலையில், உலகத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது தொடர்ந்து அதிகரித்து வரும் ஆரோக்கிய பிரச்சினைகள்தான். ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதில் ஜப்பானியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் இளமையாக இருப்பதற்கான ரகசியத்தைக் கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுமுறை மற்றும் நல்ல மரபணுக்கள் கூட ஜப்பான் மக்களின் அதிக ஆயுட்காலத்திற்குக் காரணங்களாகக் கூறப்படுகிறது. ஆனால் இரத்த வகைகள் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகிறது.
இரத்தம் நான்கு வெவ்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது A, B, O மற்றும் AB. இவற்றில் பாசிடிவ் மற்றும் நெகட்டிவ் என்ற பிரிவும் உள்ளன. ஒருவரின் இரத்த வகை ஒரு ஜோடி மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது, அதாவது பெற்றோரில் ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்பட்ட ஒரு மரபணு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. வயதாவதற்கும், இரத்த வகைக்கும் இடையே ஒரு தொடர்பை நிறுவ விஞ்ஞானிகள் முயற்சித்துள்ளனர்,
மேலும் B இரத்த வகை உடையவர்களுக்கு வயதாகும் செயல்முறையை மெதுவாக இருக்கும் என்பதைக் கண்டறிந்துள்ளனர். உலக மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதத்தினர் மட்டுமே B வகை இரத்த வகையைக் கொண்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

B இரத்த வகை மற்றவர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். 2004 ஆம் ஆண்டில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் டோக்கியோவில் வசிக்கும் 100 வயதுக்கு மேற்பட்ட 269 பேரை ஒப்பிட்டு, இரத்த வகைகளுக்கும் ஆயுட்காலத்திற்கும் இடையிலான தொடர்பை ஆராய்ந்தனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் B இரத்த வகை விதிவிலக்கான நீண்ட ஆயுளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தன. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதிலிருந்து, விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் தங்கள் ஆழமான மதிப்பீட்டைத் தொடர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, B இரத்த வகை உள்ளவர்களின் இரத்த சிவப்பணுக்களில் B ஆன்டிஜென் உள்ளது மற்றும் A ஆன்டிஜெனுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இதற்கு காரணம் B இரத்த வகையில் உள்ள சிறந்த செல்லுலார் பழுது மற்றும் மீளுருவாக்கம் வழிமுறைகள்தான் என்று சில நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சில நிபுணர்கள் இந்த இரத்த வகை வளர்சிதை மாற்ற அழுத்தத்தை மிகவும் சீராகக் கையாளுகின்றன என்று கூறுகிறார்கள். அதேசமயம் சில நிபுணர்கள் இரத்தக் குழுக்களை நீண்ட ஆயுளுடன் இணைப்பது சற்று கடினமானது என்று நம்புகிறார்கள்.
Also Read : இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் 6 ஜுஸ்! இரத்த ஓட்டம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!
ஒருவரைப் பார்ப்பதற்கு வெளிப்புறமாக ஆரோக்கியமானவராகத் தெரிந்தாலும், அவருக்கும் உடல்நல பிரச்சனைகளை வெளியில் தெரியாமல் இருக்கும். ஆரோக்கியமானவராக வெளியில் தெரிந்தாலும் உடலின் சில உறுப்புகள் மற்ற உறுப்புகளை விட வேகமாக சேதமடையக்கூடும். அது வெளியிலே தெரியாமல் இருக்கும்.
2024 ஆம் ஆண்டில், 5,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் மாதிரி அளவைக் கொண்டு, 11 உள்ளுறுப்புகளின் உயிரியல் வயதை பகுப்பாய்வு செய்ய ஒரு பெரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் இரத்த ஓட்டத்தில் 4,000 க்கும் மேற்பட்ட புரதங்களின் அளவைச் சரிபார்த்தனர். மக்கள்தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் குறைந்தது ஒரு உறுப்பிலாவது முதுமையை அடைவதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்களால் 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில், O இரத்த வகையினருடன் ஒப்பிடும்போது A இரத்த வகையினருக்கு 60 வயதிற்குள் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு Neurology இதழில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு 18-59 வயதுடைய ஆரம்பகால பக்கவாதத்தின் மரபணு அளவிலான தொடர்பு ஆய்வுகளை பகுப்பாய்வு செய்தது. இத்தகைய ஆய்வுகள் மனிதர்களை எதிர்கால ஆரோக்கிய பிரச்சினைகளிலிருந்து காப்பாற்ற உதவும்.
Summary – இளமையை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள இரத்த வகை மட்டுமின்றி ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையும் முக்கியக் காரணிகளாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவுகள், உடல் செயல்பாடுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம் எந்த இரத்த வகையினராக இருந்தாலும் இளமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry