நடிகர் விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் கடந்த 19-ந் தேதி திரைக்கு வந்தது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் படத்தை தயாரித்திருந்தார்.
மேக்கிங் சிறப்பாக இருந்தாலும், லோகேஷ் கதையில் கோட்டைவிட்டதாக சினிமா விமர்சகர்கள் பலரும் கூறி வருகின்றனர். பாடல்களும் மனதில் பதியும்படி இல்லாமல் வழக்கம் போன்ற அனிருத் ஸ்டைலிலே இருக்கிறது. இதனால் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம். அவர் தனது ஹிட் படங்களின் லிஸ்டில் லியோவை இணைக்கவே இல்லை என தகவல் கிடைத்துள்ளது. லியோ படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார்.
ரிலீஸுக்கு முன்னர் லியோ திரைப்படம் ஏராளமான சிக்கல்களை சந்தித்தது. அதில் ஒன்று தான் ஷேர் பிரச்சனை. லியோ படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்தது செவன் ஸ்கிரீன் நிறுவனம் தான். அந்நிறுவனம் லியோ படத்துக்கு இதுவரை இல்லாத அளவு 80 சதவீத ஷேர் தொகை கேட்டதால் திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சென்னையிலேயே பல்வேறு திரையரங்குகள் ரிலீசுக்கு முந்தைய நாள் வரை படத்தை வாங்காமல் இழுத்தடித்து வந்தன. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி லியோ படத்தை தமிழகமெங்கும் சுமார் 850க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிட்டனர்.
இந்நிலையில் லியோ படத்தால் தியேட்டர்காரர்களுக்கு லாபமில்லை என திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘லியோ லாபகரமான படமாக எங்களுக்கு அமையவில்லை. லியோ படத்திற்கு இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவு 80% ஷேர் பங்கீடு வாங்கி உள்ளார்கள். அதிகமான ஷேர் கேட்டு எல்லா தியேட்டர்காரர்களையும் கசக்கிவிட்டார்கள். அதனால் படம் வசூல் அதிகமா செய்தாலும் அதில் எங்களுக்கு பிரயோஜனம் இல்லை. இவ்வளவு தொகை ஷேர் கேட்டால் மீதத் தொகை எங்களுடைய திரையரங்க பராமரிப்புக்கே போதுமானதாக இருக்காது.
இதே படத்திற்கு கேரளா போன்ற வெளிமாநிலங்களில் 60% ஷேர் மட்டுமே வாங்கியுள்ளனர். இது எந்த விதத்தில் நியாயம்? இந்த படத்துடன் இன்னொரு படம் மட்டும் வந்திருந்தால், இப்போ கிடைத்துள்ள தியேட்டரில் பாதி கூட கிடைத்திருக்காது. தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் இந்தப் படத்தை விருப்பப்பட்டு போடவில்லை. வேறு படம் இல்லாததால் தான் இதை திரையிட வேண்டிய கட்டாயத்தில் திரையிட்டோம்” என்று திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry