தேர்வுகளின் போது மாணவர்கள் காப்பியடிப்பது முறைகேடு. அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். ஆனால் பல்கலைக்கழகமே தேர்வுக்காக வினாத்தாளை காப்பியடித்தால்…? இப்படியொரு சர்ச்சையில்தான் வேலூரில் இயங்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சிக்கியுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முந்தைய வினாத்தாள்களை மறு அச்சு செய்து அல்லது நகல் எடுத்து 3 செமஸ்டர் தேர்வுகளுக்கான வினாத்தாள்களாக வழங்கியிருப்பது உறுதியாகி இருப்பதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பல்வேறு கல்லூரிகளில், கடந்த சனிக்கிழமையன்று செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. முதுநிலை கணிதப் பாடத்திற்கான (மூன்றாம் செமஸ்டர்) மூன்று பாடங்களுக்கான கேள்விதாள்கள், 2021 டிசம்பரில் நடத்தப்பட்ட அதே கேள்வித்தாளில் வருடம் மட்டும் மாறி இருப்பதைக் கண்டு பேராசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் பேராசிரியர் குமார் சுப்பு, ’வினாத்தாளை வடிவமைக்கும் பணியைக் கூட பல்கலைக்கழக அதிகாரிகள் செய்யவில்லை என்பது இதன்மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது. மாறாக, முந்தைய வினாத்தாள்களை எடுத்து, தற்போது மறுபதிப்பு செய்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு வினாத்தாள்களை எவ்வாறு அனுமதித்தது? செமஸ்டர் தேர்வு வினாத்தாள்களைத் தயாரிக்கும் பொறுப்பில் உள்ளவர்களிடம் அதிகாரிகள் விளக்கம் கேட்பார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் அந்தோணி பாஸ்கரன் கூறுகையில், மூன்று பாடங்களுக்கான வினாத்தாள்கள், 2021 வினாத்தாளின் நகல் என்பதால், இந்த செமஸ்டரில் அனைத்து பாடங்களுக்கும் பழைய வினாத்தாள்கள் மூலமே தேர்வுகள் நடைபெறும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்பதாக கூறினார்.
வினாத்தாள்களை புதிதாக வடிவமைக்காமல், குறுக்குவழியில் பழைய வினாத்தாள்களை வருடம் மட்டும் மாற்றி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் குறுக்குவழியில் செயல்பட்டுள்ளதாக பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விளக்கம் கேட்பதற்காக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்த்தனனை தொடர்பு கொண்டும் பலனில்லை. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் மற்றும் கல்விக் குழுவில் ஆசிரியர்களின் பிரதிநிதிகள் யாரும் இல்லாததால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, தகுதி இல்லாதவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்குவதாக சென்னைப் பல்கலைக்கழகம் சர்ச்சையில் சிக்கியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் “முனைவர் பட்டம் என்பது உச்சபட்ச கல்விதகுதியாக கருதப்படுகிறது. எனவே அதை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மெத்தனப்போக்குடன் இருக்கக்கூடாது” என அதிருப்தி தெரிவித்திருந்தது. இதுபோன்று பல்வேறு பல்கலைக்கழங்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்குகின்றன.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியோ, நிர்வாகத்தை கவனிக்காமல், ஆளுநருடன் கருத்து மோதலில் ஈடுபடுவதையும், சனதானத்தை எதிர்த்துப் பேசுவதிலும், மற்றவர்களை சிறுமைப்படுத்திப் பேசுவதிலுமே கவனம் செலுத்துகிறார். அமைச்சருக்கு வயதாவதால், நிர்வாகத்தை கவனிப்பதில் தடுமாற்றம் ஏற்படுகிறதோ என்ற கேள்வி எழுதுவதையும் தவிர்க்க இயலவில்லை.
Courtesy : DT Next
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry