ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சிக்கல் மற்றும் கவலையே அவர்கள் பயன்படுத்தும் சாதனத்தில் இருக்கும் பேட்டரி ஆயுளை எப்படிப் பாதுகாப்பது என்பது தான். புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் பலர் பேட்டரி எவ்வளவு கொள்ளளவைக் கொண்டுள்ளது என்பதைத் தான் முதலில் கவனிக்கின்றனர். என்னதான் நீங்கள் பார்த்து-பார்த்துச் சிறந்த பேட்டரி அம்சத்துடன் இயங்கும் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கினாலும், உங்களின் சார்ஜிங் பழக்கம் தான் அதன் ஆயுளை நிர்வகிக்கப் போகிறது.
நாள் முழுக்க உங்களுடன் இயங்கும் இந்த சாதனத்தின் உயிர் பேட்டரியில் தான் இருக்கிறது. உங்கள் ஸ்மார்ட்ஃபோன் நீண்ட நேரம் நீடித்து நிலைக்க வேண்டும் என்றால், அதற்குக் கட்டாயம் நீண்ட ஆயுளை உடைய பேட்டரி தேவை. உங்கள் பேட்டரி ஆயுள் நீடித்து இருப்பதும், குறைவதும் உங்களின் சார்ஜிங் பழக்கத்தில் தான் இருக்கிறது. உங்கள் பேட்டரி ஆயுளை நிலையாக வைக்க நீங்கள் சில அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
உங்களுடைய சாதனத்தை சார்ஜ் செய்யும் போது, அதை 100% வரை சார்ஜ் செய்வது சரியான பழக்கம் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், இது தான் இருப்பதாலேயே மிகவும் மோசமான சார்ஜிங் பழக்கமாகும். உங்கள் ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் இயங்குவது முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு 100% வரை சார்ஜிங் செய்யும் பழக்கம் நம்மில் பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது. ஆனால், இது உண்மையில் பேட்டரிக்கு தீங்கு விளைவிக்கிறது.
பேட்டரி 0% அளவை அடையும் வரை போனைப் பயன்படுத்தும் பழக்கமும் மோசமானது. உங்கள் சாதனம் முழுமையாக சார்ஜ் இல்லாமல் OFF ஆன பிறகு சார்ஜ் செய்யும் பழக்கம் கூட தீங்கானதுதான். உங்கள் ஃபோனின் பேட்டரி ஆயுளைப் பாதுகாக்க எப்போதும் அதை 90% வரை சார்ஜ் செய்யலாம். மேலும், சார்ஜ் 30% அடையும் வரை உங்கள் போனை தொடர்ந்து பயன்படுத்தலாம். இப்போது உங்கள் பேட்டரியின் ஆயுள் நோட்டிபிகேஷன் சிவப்பு கோட்டை தொடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை ஆரோக்கியமாகவும், நீண்டதாகவும் வைத்திருக்க, உங்கள் சாதனத்தைச் சரியான நேரத்தில் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும்.
உங்கள் சாதனம் 100% சார்ஜ் செய்யப்பட்டவுடன், அது ஸ்மார்ட்போனுக்கு மின்சாரத்தை வழங்காது என்று நம்மில் பலர் நம்புகிறோம். ஆனால், உண்மையில் அப்படி நடப்பதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எப்போதும், 90% சார்ஜ்ஜை எட்டிய உடன் போனை உடனே பிளக்கில் இருந்து துண்டிக்க மறக்காதீர்கள். அதேபோல், இரவு முழுக்க சார்ஜ் செய்யும் பழக்கத்தையும் கைவிட்டுவிடுங்கள். இரவு முழுக்க சார்ஜ் செய்யும் போது, மெட்டாலிக் லித்தியம் பாதிக்கப்பட்டு, நீண்ட காலத்திற்குச் செயல்படும் பேட்டரி நிலைத்தன்மையை இது குறைக்கிறது. எனவே, உங்கள் சாதனத்தை ஒரே இரவில் சார்ஜ் செய்யாதீர்கள். இதற்குப் பதிலாக ஒரு நாளைக்கு இரண்டு முறை சார்ஜ் செய்யலாம்.
சிறந்த சார்ஜிங் பழக்கம் என்பது, உங்கள் போனை காலையிலும் மாலையிலும் ஒரு முறை சார்ஜ் செய்வது பேட்டரி ஆயுளை அதிகரிக்க உதவும். அதேபோல், உங்கள் சாதனம் சார்ஜிங்கில் இருக்கும் போது பயன்படுத்துவதும் மோசமான பழக்கமாகும். இது நிச்சயமாக உங்கள் போனின் பேட்டரி ஆயுளைக் குறைக்க மற்றொரு காரணமாக அமையும். சார்ஜர் இணைக்கப்பட்டிருக்கும் போது உங்கள் போனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜரில் செருகப்பட்டிருக்கும் போது ஸ்மார்ட்போனை நீங்கள் பயன்படுத்தினால், பேட்டரியின் எல்லா சக்தியும் விலகி டிஸ்பிளே, பிராசஸர், ஜிபியு மற்றும் பிற இயங்கும் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதன் விளைவாகச் சாதனம் அதிக வெப்பமடைவதோடு, அது பேட்டரி திறனைக் குறைக்கும். எனவே, உங்கள் போனின் பேட்டரி ஆயுளைக் காப்பாற்ற, உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜரில் இருக்கும் போது பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
Also Read : மழைக்காலத்தில் Heart Attack வர இந்த 10 உணவுகள்தான் காரணம்! இறைச்சி, மீன் சாப்பிட உகந்ததா?
வெப்பநிலை சூடாக இருக்கும்போது உங்கள் சார்ஜ் மிக வேகமாகக் குறைவதை நீங்கள் கண்டிருக்கலாம். சில நேரங்களில் இதனால் ஓவர் ஹீட்டிங் பிரச்சினை எழுந்து, பேட்டரி வீங்கி, வெடி கூட வாய்ப்புள்ளது. எனவே, சாதனம் சார்ஜருடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இதேபோல், மிகவும் குளிரான சூழலில் போனை சார்ஜ் செய்வது மிகவும் நல்லதல்ல. குறைந்த வெப்பநிலை காரணமாக பேட்டரி அதன் திறனை இழக்க நேரிடும்.
அடுத்தபடியாக, நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், போலியான சார்ஜிங் உபகரணங்களைப் பயன்படுத்துவது. இணக்கமற்ற மற்றும் தரமற்ற சார்ஜிங் கேபிள்கள் மற்றும் அடாப்டர்களைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது தான் என்றாலும், இதன் விளைவு மோசமானதாக இருக்கும். பட்ஜெட் விலைக்குள் சார்ஜிங் உபகரணங்களை வாங்குவதன் மூலம் நிறையப் பணத்தைச் சேமித்ததாக நீங்கள் உணரலாம், ஆனால், இது உங்களுடைய போனின் பேட்டரிக்கு பெரியளவில் தீங்கு விளைவிக்கிறது. குறைந்த தரம் கொண்ட சார்ஜிங் கம்பிகள் மூலம் பேட்டரியை சார்ஜ் செய்யும் போது, தேவையான மின்னோட்டம் கிடைக்காமல் போகிறது. உங்கள் ஸ்மார்ட்போன் மாடலுக்கு பொருந்தக் கூடிய பிராண்டட் சார்ஜிங் உபகரணங்களைப் பயன்படுத்துங்கள். இந்த விஷயங்களை எல்லாம் சரியாகப் பின்பற்றினால் உங்கள் பேட்டரி ஆயுள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry