ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமாரால், நாங்குநேரி போன்று இன்னொரு சம்பவம் ஏற்படாமல் தடுத்து நிறுத்திட வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலராக சிவகுமார் பணியாற்றிய காலகட்டத்தில், திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ஒரு பெண் அதிகாரியை, பலர் முன்னிலையில் உங்கள் நிர்வாகமும் உங்களைப் போன்று “சேரி நிர்வாகமாகத்தான் உள்ளது” என்று கேட்டு அவமானப்படுத்தியுள்ளார். பெண் அலுவலர் உடனே நீங்கள் பேசுவது எங்கள் இனத்தினை இழிவுபடுத்துகிற சொல்லாக உள்ளது என்று திருப்பி கேட்டிருக்கிறார். அந்த பெண் அதிகாரி தற்போது பதவி உயர்வு பெற்று முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்தும் வருகிறார்.
அதே காலகட்டத்தில், சேரன்மகாதேவி மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தவரிடமும் இனத்தை இழிவுபடுத்துகிற வகையில் பேசியுள்ளார். ஆசிரியர்களிடமும் இப்படித்தான் பேசி வந்திருக்கிறார். தற்போதும் அப்படித்தான் பேசி வருகிறார். இவரின் இந்தச் செயல் மக்கள் மத்தியில் பரவியதால், சிவக்குமாரை கண்டித்து சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டதால் அவர் உடனடியாக பணியிடமாறுதல் செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலராக மீண்டும் அவரை நியமித்திருப்பது ஏற்புடையதல்ல. அதிகார மமதை, ஆதிக்க சக்தி, ஆணவத்தனம், நிர்வாகத்தில் பணியாளர்களை இம்சைப்படுத்துவது என இதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் அவரது செயல்பாடுகளுடன் பொருத்திப் பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நான்கு பேர் உள்ளனர். மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி – 2) மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்). தொடக்கக் கல்வி இயக்குநர் நிர்வாகக் கட்டுப்பாட்டில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி) உள்ளார். மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) தனி இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ளார்.
ஆனால் இந்த அலுவலர்கள் தங்கள் பேனாவின் மூடியினைக் கூட தனது அனுமதி இல்லாமல் திறக்கக் கூடாது என்ற மன நிலையில் சிவக்குமார் செயல்பட்டு வருகிறார். எவரையும், எப்போதும் தன்னிச்சையாக செயல்படவிடுவதில்லை. ஆசிரியர்களை, அலுவலகப் பணியாளர்களை ஒருமையில் தான் அழைத்துப் பேசுகிறார். தொலைத்திடுவேன், போட்டுத் தள்ளிவிடுவேன் என்று அச்சுறுத்துகிறார்.
கண்டிக்கும் காவல்துறையே தற்போது கனிவான துறையாக மாறி வருகிறது. ஆனால் கல்வித்துறையை இவர் கலவரத் துறையாக மாற்றி வருகிறார். மாவட்டக் கல்வி அலுவலர் பொறுப்பு வழங்கும் போது பணி மூப்பு அடிப்படையில் உள்ளவரை பரிந்துரை செய்வதில்லை. உயர் நிலை / மேல்நிலைப் பள்ளி இயக்கப் பொறுப்பாளர்கள் கேட்டால் எனக்கு பிடித்தமானவர்களைத்தான் நான் பரிந்துரை செய்து நியமனம் செய்வேன் என்கிறார்.
தனக்கு வேண்டியவர்கள் என்ற ஒரு வட்டத்தை உருவாக்கி, அவர்களை வைத்துக் கொண்டு தனக்கு பிடிக்காதவர்களை அவர்களிடம் சொல்லி புகார் விண்ணப்பங்கள் எழுதச் செய்து விசாரணை என்ற பெயரால் பார்வையிட்டு சிவக்குமார் பழிவாங்கி வருகிறார் என்பதை அனைவரும் அறிவார்கள். பெண் ஆசிரியர்கள் உள்ளனர் என்ற சிந்தனை கூட இல்லாமல் இரவு 8 மணி வரை கூட்டம் நடத்துகிறார். காரணம், நம்மை யார் கேட்க முடியும் என்ற ஆணவம் தான்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் டே.பால்துரை, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எட்டான்குளம், மானூர் ஒன்றியம், திருநெல்வேலி மாவட்டம் என்பவரை, 18.12.2024 பிற்பகல் 2:30 மணிக்கு கள ஆய்வு என்று பார்வையிடச் சென்ற முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், வாசல் வழியே செல்லாமல் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தவாரே நின்றுள்ளார். (ஒரு வேளை அங்கு ஒரு பெண் ஆசிரியர் இருந்திருந்து…!)
Also Read : ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாக்கள் சொல்வது என்ன? மிக எளிமையான விளக்கம்!
பின்னர் பள்ளியின் உள்ளே நுழைந்தவுடன் காலை உணவு சமைக்கும் பெண்ணைப் பார்த்து இவர் யார் என்று கேட்டுள்ளார். அவர் காலை உணவு வழங்கும் பொறுப்பாளர் என்று பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். அப்படியானால் அவரை எப்படி நாற்காலியில் அமர வைத்து எழுதச் செய்யலாம் என்று கேட்டுள்ளார்.
காலை உணவுத் திட்டத்தை பார்வையிட்டுச் சென்ற அலுவலர் பார்வையின் போது சில தகவல்களை எழுதச் சொல்லியிருக்கிறார். அதைத்தான் அவர் அமர்ந்து எழுதியிருக்கிறார். காலை உணவு சமைப்பவர், அந்த பள்ளியில் படிக்கும் மாணவரின் தாயார். அவரை நாற்காலியில் அமர்ந்து எழுதச் சொன்னது தலைமை ஆசிரியரின் தவறா?
தமிழக அரசு சமூகநீதி வேண்டும் என்று கூறுகிறது. காலை உணவு சமைப்பவரை நாற்காலியில் அமர வைத்தது தவறு என்கிறார் சிவக்குமார். தொடர் செயலாக முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், தனது போனில் காலை உணவு சமைக்கும் பணியாளரை படம் எடுக்க முற்பட்டிருக்கிறார். இது ஒரு முதன்மை கல்வி அலுவலர் செய்யும் செயலா? ஒரு மாணவனின் பெற்றோரை அதுவும் பள்ளியின் உள்ளேயே படம் எடுக்க முயற்சித்தது தவறல்லவா?
Also Read : இலக்குகளை அடைய ஆதிக்க மனப்பான்மை ஏன் அவசியம்? The Secret to Success: Cultivating a Dominant Mindset!
தலைமை ஆசிரியர் பால்துரை, நீங்க போங்கம்மா… ஒன்றுமில்லை என்று போகச் சொல்லி உள்ளார். இது தான் அவர் செய்த தவறு. இந்த கோபத்தின் உச்சம் தான் தலைமை ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம். காலை உணவு சமைப்பவரை பாடம் நடத்த பயன்படுத்தி வருகிறீர்களா? என்று முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுள்ளார். தலைமையாசிரியர் இல்லை என மறுத்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்தபடியே மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரை அலைப்பேசியில் அழைத்து, தலைமை ஆசிரியர் பால்துரையை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து ஆணை வழங்கிட வலியுறுத்தி உள்ளார். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலரிடம், அவர் நல்ல தலைமை ஆசிரியர், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர், பணி நிறைவு பெற இன்னும் நான்கு மாதங்களே உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் நான் நேரில் சென்று பார்வையிட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால், ‘’Superior’’ நான் சொல்கிறேன், உடன் தற்காலிக பணி நீக்க ஆணை வழங்கும்மா… என உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகே DEO (E) நமக்கு ஏன் வம்பு என்று தற்காலிக பணி நீக்க ஆணையினை வழங்கியுள்ளார்கள். பள்ளிப் பார்வைக்கு உடன் வந்த முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட அலுவலர் (APO) இருவரும், பால்துரை நல்ல தலைமை ஆசிரியர், அவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்கள்.
Also Read : சிவப்பு அவல்! ஆச்சரியப்படும் அளவுக்கு கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!
தலைமையாசிரியர் பால்துரை பழிவாங்கப்பட்டிருப்பது நெல்லை மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக தற்காலிக பணி நீக்க உத்தரவினை ரத்து செய்திட வலியுறுத்துகிறோம். பணியாற்றிய அனைத்து மாவட்டங்களிலும் எந்த அலுவலரையும் சிவக்குமார் தன்னிச்சையாக செயல்பட விட்டதில்லை.
வைக்கம் நூற்றாண்டு விழாவினை கொண்டாடினாலும் சிவக்குமார் போன்ற ஆதிக்க குணம் உள்ளவர்களுக்கு சரியான பாடம் புகட்டாத வரையில் இது போன்ற செயல்கள் தொடர் கதையாகத்தான் இருக்கும். திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமாரை உடனடியாக பணியிட மாறுதல் செய்து துணை இயக்குனர் போன்ற பதவியில், இயக்குநர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துதான் தீர்வு காண முடியும்.
நாங்குநேரி சம்பவம் போல் இன்னொரு விரும்பத்தகாத கலவரம் வெடிப்பதற்கான சூழலை சிவக்குமார் ஏற்படுத்தி வருகிறார்.பள்ளிக்கல்வி இயக்குநரும், தொடக்கக்கல்வி இயக்குநரும் தனிக் கவனம் கொண்டு தீர்வு காண முன் வருவதற்கு காலதாமதம் செய்து, நங்குநேரி சம்பவம் போல மீண்டும் ஒரு நிகழ்வு ஏற்பட்டால் அதற்கு பள்ளிக் கல்வித்துறை தான் பொறுப்பேற்க வேண்டி வரும்.
Also Read : கேரளாவின் குப்பைமேடாக மாறிவிட்ட தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள்! அடகு வைக்கப்படுகிறதா தமிழர்களின் நலன்?
ராணுவத்தில் போர் முனையில் இறந்தவர்களை காட்டிலும், பதிவியில் இருந்த போது ஆணவத்தால் அழிந்த அலுவலர்கள் பட்டியல் அதிகம் என்பதை உணர வேண்டும். மேற்கண்ட தகவல்கள் முழுதும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், அலுவலர்கள் முதல், உயர்நிலை – மேல்நிலைப் பள்ளி வரை பணியாற்றும் ஆசிரியர்கள் அலுவலகப் பணியர்கள் சிலரிடம் பெற்றுள்ள தகவல் ஆகும். 52 ஆண்டு காலப் பொது வாழ்வில் அனுபவமுள்ள மூத்த தலைவர் என்ற முறையில் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry