பின்னலாடைத் தொழிலுக்கு பிஹார் மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதால் திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், தொழிலாளர்களும் பிஹார் மாநிலத்துக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் (டீமா) எம்.பி.முத்துரத்தினம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “திருப்பூர் பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த பிற தொழில்கள் என வடமாநிலங்களை சேர்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமானோர் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதில் பிஹார் மாநில தொழிலாளர்கள் பலர், பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிஹார் மாநில அரசு அங்கு பின்னலாடைத் தொழிலை பிரம்மாண்டமாக விரிவுபடுத்தும் நோக்கில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
அதாவது திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கு மானியம், தொழில் தொடங்க கட்டணமில்லாத முத்திரைத் தாள் வசதி, தொழில் கட்டடங்களுக்கு வரிச்சலுகை, ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.2 என சலுகைகளை அளித்து, இங்கிருக்கும் பிஹார் மாநிலத்தவர்களை அங்கு இழுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அம்மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் திருப்பூரில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் இந்த வாய்ப்புகளை அங்குள்ள மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் தமிழ்நாட்டில் நடப்பதை எண்ணி வேதனைப்படக்கூடிய சூழலில்தான் இங்குள்ள தொழில் துறையினர் உள்ளனர். அதாவது, மின்சார நிலைக்கட்டணம், பீக் ஹவர்ஸ் கட்டணம், சோலார் உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் என இந்த தொழில் முடங்கிப்போவதற்கான அனைத்து விஷயங்களும் தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது. இவற்றை முழுமையாக திரும்பப்பெற வேண்டும். பிஹார் மாநிலத்தில் குறைந்த செலவில் தொழில் தொடங்கும்போது, அங்கு உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கிருந்தும் திறன்வாய்ந்த தொழிலாளர்கள் அங்கு சென்று, புதிய பனியன் நிறுவனங்களை தொடங்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Also Read : வினாத்தாள்களை காப்பியடித்துப் பிடிபட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம்..! என்ன செய்யப்போகிறது உயர் கல்வித்துறை?
இந்தியாவிலேயே அதிகமான நூற்பாலைகள் இங்குதான் இருந்தன. ஒருகாலத்தில் வடமாநிலத்தவர்கள் பருத்திக் கொள்முதல் செய்ய இங்கு வருவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பருத்தித் தொழிலை கைவிட்டதால், இன்றைக்கு இங்கிருப்பவர்கள் வடமாநிலங்களுக்கு சென்று பருத்திக் கொள்முதல் செய்கின்றனர். தமிழ்நாடு அரசு இருக்கின்ற தொழில் வாய்ப்புகளை மேலும் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு உதாரணமே பருத்திதான். தமிழ்நாட்டில், பருத்தி வேளாண்மையை ஊக்கப்படுத்த வேண்டும்.
பிஹார் மாநில அரசின் சலுகைகளைப் போல், தமிழக அரசும் பல்வேறு சலுகைகளை தொழில்துறைக்கு வழங்க வேண்டும். தொழிலில் இருந்து யாரும் வெளியேறாத வகையில் மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். பின்னலாடைத் தொழிலுக்கு சிறப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாத்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நிலையான இடத்தில் நிறுத்தி வைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பின்னலாடை மற்றும் அதுசார்ந்த சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். பெரிய பின்னலாடை நிறுவனங்களிடம் இருந்தும், நேரடியாகவும் ஜாப் ஆர்டர்களைப் பெற்று சிறு, குறு, நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
தமிழ்நாடு அரசின் அடுத்தடுத்த நெருக்கடி காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறு, குறு தொழில் ஆலோசகர்கள், “ஜவுளித் தொழிலுக்கு முக்கிய உயிர் நாடியாக இருப்பது மின்சாரம். பின்னலாடைத் தொழிலில் உள்ளவர்களுக்கு மின் கட்டண உயர்வு என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது.
வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களை இருகரம் கூப்பி அழைத்து, அவர்களுக்கு சலுகை விலையில் இடம், தண்ணீர், மின்சாரம் உட்பட அனைத்தையும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது. அதேநேரம் பின்னலாடைத் தொழில் மூலம் ரூ.65 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வியாபாரம் மற்றும் ஏற்றுமதி நடக்கிறது.
வெளிநாட்டு தொழில் துறைக்கு காட்டும் அக்கறையை, உள்நாட்டு தொழிலுக்கும் தமிழ்நாடு அரசு காட்ட வேண்டும். மின்கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. திருப்பூரின் தொழில் வர்த்தக வாய்ப்புகள், பிற மாநிலங்களுக்கு செல்வதை அரசு முதல்கட்ட எச்சரிக்கையாகவே உணர்ந்து, பின்னலாடை நிறுவனங்கள் பிகார் போன்ற மாநிலங்களுக்கு செல்வதைத் தடுக்கத் தேவையைன நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை நசுக்கும் நடைமுறைகளை அரசு கைவிட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry