
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது என்று அதிமுக தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், ஆட்சியாளர்கள் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதன் கொடூர விளைவாக, திருவள்ளூரில் பொங்கல் பண்டிகை இரட்டைக் கொலையுடன் முடிந்துள்ளது. கஞ்சா போதையில் நடந்த இந்தச் சம்பவம், “விடியல் ஆட்சி” என விளம்பரம் செய்யும் திமுக அரசின் சட்டம் – ஒழுங்கு நிலை எவ்வளவு மோசமாகியுள்ளது என்பதற்கான இன்னொரு சான்றாக மாறியுள்ளது.
திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், அவரது நண்பர்கள் கேசவமூர்த்தி, சுகுமார் ஆகிய மூவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆந்திர மாநிலம் கோனே நீர்வீழ்ச்சிக்கு சென்று, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில், அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் போதையில் இரு பைக்குகளில் வந்தபோது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட சிறிய வாக்குவாதமே திடீரென கொடூர தாக்குதலாக மாறியது.
“போதையில் இருக்கிறீர்களா?” என்ற ஒரு கேள்வியே உயிர் பறிக்கும் வன்முறையாக வெடித்தது. கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் நீலகண்டன் உள்ளிட்ட நான்கு இளைஞர்கள், பார்த்திபன் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கி, கற்களை வீசி கொலைவெறி காட்டியுள்ளனர். தலையில் பலத்த காயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேசவமூர்த்தி இன்னும் உயிருக்கு போராடி வருகிறார். பொங்கல் கொண்டாட்டமாக தொடங்கிய பயணம், இரண்டு குடும்பங்களை நிரந்தர சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
இந்த கொலைகள் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், கஞ்சா போதையே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் இதுவரை கேள்விக்குறியாக இருப்பது ஒன்று தான் – இந்த அளவுக்கு கஞ்சா எளிதாக கிடைக்க காரணமானவர்கள் யார்? யார் கண்மூடி அனுமதித்தார்கள்? யார் பாதுகாப்பு வழங்கினார்கள்?
பகுதி மக்கள் கூறும் குற்றச்சாட்டுகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆந்திராவை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை படுஜோராக நடக்கிறது என்றும், குறிப்பாக மணவாளநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகிறார்கள் என்றும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதையெல்லாம் போலீஸாரும், ஆட்சியாளர்களும் பார்த்தும் பார்க்காதது போல இருப்பதாக கடும் குற்றச்சாட்டு எழுகிறது.
ஒரு வங்கியில் பணியாற்றி வந்த, மனைவி – குழந்தையுடன் வாழ்ந்த பார்த்திபனும், கர்ப்பிணி மனைவியுடன் எதிர்காலத்தை கனவுகண்ட சுகுமாரும், கஞ்சா போதை ஆசாமிகளால் பலியாகினர். ஆனால் இந்த உயிரிழப்புகளுக்கும் திமுக ஆட்சியின் அலட்சியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அரசு சொல்லுமா? போதைப்பொருள் ஒழிப்பில் “சீரோ டாலரன்ஸ்” என்று விளம்பரம் செய்த ஆட்சி, களத்தில் ஏன் காணாமல் போயிருக்கிறது?
கஞ்சா போதையால் இரண்டு உயிர்கள் பறிபோன இந்தச் சம்பவம், திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு எவ்வளவு சீர்குலைந்துள்ளது என்பதையும், போதைப்பொருள் விவகாரத்தில் அரசு எவ்வளவு தோல்வியடைந்துள்ளது என்பதையும் வெளிப்படையாக காட்டுகிறது. விளம்பரங்களில் மட்டும் அல்ல, உண்மையிலும் போதைப்பொருளை ஒழிக்க இந்த அரசு தயாரா? அல்லது இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் கணக்கா என்ற கேள்வி, தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
