திமுக அரசின் முதல் பட்ஜெட்டை, காகிதமில்லா இ–பட்ஜெட்டாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் கலைவாணர் அரங்கில் இன்று தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்றுள்ள முக்கியமான அறிவிப்புகளை பார்ப்போம்.
- தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் அளவுக்கு குறைக்கப்படும். இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
- கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற 2756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
- பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்காரச் சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும்.
- சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் (புறநகர் புதிய பேருந்து நிலைய அமைவிடம்) வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும். மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் சேவைக்கான நடவடிக்கை.
- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தூத்துக்குடி விழுப்புரம், வேலூர் மற்றும் திருப்பூர் என 4 இடங்களில் டைடல் பார்க் அமைக்கப்படும். இதே போல தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம்,நாமக்கல், தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும்.
- குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை.
- அரசு ஊழியர்களின் மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு
- வில்லங்க சான்றிதழ்களை இனி 1950 முதல் இணையதளத்திலேயே பார்வையிடலாம்.
- தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் 1 ஜிபிபிஎஸ் வேக திறன்கொண்ட இணைய வசதி ஏற்படுத்தப்படும்.
- 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு; தினசரி ஊதியம் 300 ரூபாயாக உயர்வு.
- பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும்.
- அனைத்து துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும்.
- கீழடி, சிவகளை, கொடுமணல் அகழாய்வு இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.
- அரசு இடங்களை அடையாளம் காண ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன ஆய்வு மேற்கொள்ளப்படும்.
- தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 14,317 புதிய பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
- அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும்.
- இந்தியாவில் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும்.
- ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு 2,000 கோடி நிதி ஒதுக்கீடு.
- 2021-22 ஆம் ஆண்டில் ரூ.8,017.41 கோடி செலவில் 2,89,877 வீடுகள் கட்டப்படும்.
- கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.
- 1லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.
- கணேசபுரம், கொன்னூர் நெடுஞ்சாலை– ஸ்ட்ரான்ஸ் சாலை, தெற்கு உஸ்மான் சாலையில் ரூ.335 கோடியில் மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
- மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் பகுதிகளில் புதிய பெருநகர வளர்ச்சிக்குழுமங்கள் ஏற்படுத்தப்படும்.
- மாணவர்கள் மனப்பாட முறையில் இருந்து விலகி சிந்திக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க நடவடிக்கை
- நடப்பாண்டில் தமிழகத்தில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடக்கப்படும்
- அண்ணா பல்கலைகழகத்துடன் இணைந்து தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழகம் உருவாக்கப்படும்.
- தமிழ்நாடு சித்தா பல்கலைகழகம் அமைக்க முதற்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு.
- ரூ.626 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள், சொத்துகள் மீட்பு.
- 100 திருக்கோயில்களில் ரூ.100 கோடியில் தேர், குளம் சீரமைக்கப்படும்.
- மசூதிகள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.
- ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ரூ.3 கோடி செலவில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.
- இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்து அமல்படுத்தப்படும்.
- அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும்.
- பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகராக சென்னை மாற்றப்படும்.
- மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
சாமானியர்களின் பார்வையில் பட்ஜெட்
இதனிடையே, மத்திய அரசின் திட்டங்களை விமர்சனம் செய்தாலும், ஜல் ஜீவன், Defeence Corridor, பிரதமர் வீட்டு வசதித் திட்டம், டிஜிட்டல் இந்தியா, மின்னணு கொள்முதல், ஸ்மார்ட் சிட்டி, கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம், ஆயுஷ் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கியிருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் டீசல் விலை குறைக்காதது விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.
மசூதிகள், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.6 கோடி ஒதுக்கியுள்ள தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறைக்கு பட்ஜெட்டில் ஏன் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பேரிடர் சூழலில், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறைக்கு ரூ.200 கோடி குறைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்துவிட்டு, சென்னை – குமரி 8 வழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. 018, பிப்ரவரி 15-ந் தேதி அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், பழனி தண்டாயுதபாணி கோயில் சார்பாக சித்தா கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்ததை, புதிது போன்று பிடிஆர் அறிவித்திருக்கிறார்.
கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி தருவதற்கு முன், அந்தக் கடன்களின் உண்மைத் தன்மை ஆராயப்படும் என்ற அறிவிப்பை திமுக–வினரே ரசிக்கவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற போதிய நிதி இல்லை என்னும் நிதியமைச்சர், நெடுஞ்சாலைத்துறைக்கு மூன்று மடங்கு அதிக நிதி ஒதுக்கியது எப்படி என்ற கேள்வி எழுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தமிழ் உச்சரிப்பு, சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. கூட்டத்தொடரின்போது, உதயநிதி ஸ்டாலினிடம் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆசி பெற்றதும் முகம் சுளிக்க வைப்பதாக பலரும் கூறுகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry