செயல்பட முடியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் அமைச்சரே..! பொய் பேசிக்கொண்டு பதவியில் நீடிப்பது அழகா? அமைச்சர் மனோ தங்கராஜுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

0
326
Tamil Nadu Milk Agents and Workers Welfare Association demands resignation of Dairy Development Minister Mano Thangaraj | File Pic - Minister Mano Thangaraj.

ஆவின் பால் விற்பனை தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடர்ந்து தவறான, முன்னுக்குப்பின் முரணான புள்ளி விவரங்களையும் தெரிவித்து வருவது “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்” என்கிற பழமொழியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த மாதம் 19ம் தேதி சென்னையில் நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசிய போது, “ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டை விட 23% அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.”

சு.ஆ.பொன்னுசாமி

அதன் பிறகு கடந்த மாதம் 22ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற பால் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் தாக்கல் செய்த அரசின் கொள்கை விளக்க குறிப்பிலோ, கடைசி இரண்டாண்டுகளில் ஆவின் பால் விற்பனை 3.45% அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கடந்த ஜூன் 29ம் தேதி கோவையில் பால்வளத்துறை அதிகாரிகளோடு நடத்திய ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், ”கடந்த ஆண்டை விட ஆவின் பால் விற்பனை 25% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.”

Also Read : பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் செயல்பாட்டை ஆய்வு செய்து உண்மையை உணர வேண்டும்! முதலமைச்சருக்கு அண்ணாமலை வேண்டுகோள்!

11 நாட்களுக்குள் ஆவின் பால் விற்பனை உயர்வு தொடர்பாக மூன்று விதமான, முன்னுக்குப்பின் முரணான புள்ளி விவரங்களைத் தெரிவித்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திட்டமிட்டு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறாரோ? அல்லது “சொல்வதைச் அப்படியே திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளை” போல அதிகாரிகள் எழுதிக் கொடுக்கும் புள்ளி விவரங்களை, ஆய்வு செய்யாமல் அப்படியே ஒப்பிக்கிறாரோ..? என்கிற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்றாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்கக் குறிப்புகளில் உள்ள தரவுகளின் அடிப்படையில், ஆவின் பால் விற்பனை கடந்த 2023-2024ம் நிதியாண்டில் 29.20லட்சம் லிட்டராக இருந்ததாகவும், 2024-2025ம் நிதியாண்டில் 30.25லட்சம் லிட்டராக (3.45%) உயர்ந்துள்ளது எனவும் தெளிவாக கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 2021-2022 (26.70லட்சம் லிட்டர்) – 2024-2025ம் (30.25லட்சம் லிட்டர்) நிதியாண்டுகளோடு ஒப்பிட்டால் கூட ஆவின் பால் விற்பனை 13.29% தான் அதிகரித்துள்ளது. அதுவே கடந்த 2023-2024 (29.13லட்சம் லிட்டர்) – 2024-2025ம் (30.25லட்சம் லிட்டர்) நிதியாண்டுகளோடு ஒப்பிடுகையில் வெறும் 3.54% தான் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ள உண்மை தெரிய வருகிறது. அப்படியானால் கடந்தாண்டை விட தற்போது 23%, 25% ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் எப்படி மாற்றி, மாற்றி கதையளக்கிறார் எனத் தெரியவில்லை..?

Also Read : போலீசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குகிறதா புதிய குற்றவியல் சட்டங்கள்! மீண்டும் விவாதிக்க சட்ட நிபுணர்கள் வலியுறுத்தல்!

அதுமட்டுமின்றி கடந்தாண்டு பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பொறுப்பேற்றுக் கொண்ட சில மாதங்களில் ஆவினுக்கான தினசரி பால் கொள்முதலை 40லட்சம் லிட்டராகவும், பால் கையாளும் திறனை 70லட்சம் லிட்டராக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் அமைச்சராக பொறுப்பேற்று 14மாதங்கள் கடந்த நிலையில், அவர் கூறியபடி ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்கவோ, பாலினை கையாளும் திறன் அளவை உயர்த்தவோ அப்படி எந்த ஒரு பெரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த மாதம் சட்டப்பேரவையில் பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பு (2022-2023 பால் கொள்முதல் 37.38லட்சம் லிட்டர், பால் கையாளும் திறன் 40.26லட்சம் லிட்டர்), (2023-2024 பால் கொள்முதல் 28.30லட்சம் லிட்டர், பால் கையாளும் திறன் 43.34லட்சம் லிட்டர்) என்பதை உணர்த்துகிறது.

அதுமட்டுமின்றி கடந்த அதிமுக ஆட்சியில் (2019-2020, 2020-2021) பால் கையாளும் திறன் 48.78லட்சம் லிட்டராக இருந்த நிலையில், தற்போது அது 2024-2025 நிதியாண்டில் 43.34லட்சம் லிட்டராக குறைந்திருப்பதை அறியாமல், ஓராண்டுக்கு முன் அவர் கூறிய ஆவினுக்கான தினசரி பால் கொள்முதலை 40 லட்சம் லிட்டராகவும், பாலினை கையாளும் திறனை 70 லட்சம் லிட்டராக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மீண்டும் அச்சுப்பிசகாமல் அப்படியே செய்தியாளர்கள் முன்னிலையில் பள்ளிப் பிள்ளைகள் ஒப்பிப்பித்திருக்கிறார். ஒருவேளை இந்த உண்மையை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்கிற எண்ணத்தில் அமைச்சர் அப்படி பேசினாரா..? இல்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் அளந்து விடும் பொய்கள் எல்லாம் தெரிந்து, கருணாநிதி போல் சாட்டையை சுழற்றவா போகிறார் என்கிற அசட்டு தைரியமா..? எனத் தெரியவில்லை.

Also Read : ஆந்திர நீட்டு மிளகாயால் புற்றுநோய் ஆபத்து! அதிக அளவு சேர்க்கப்படும் பூச்சிக்கொல்லிகள், நிறமிகள்..! சர்க்கரை நோய், மலட்டுத்தன்மையும் ஏற்படலாம் என எச்சரிக்கை!

மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் பெருமக்கள் என்னதான் தவறான தகவல்களை அறிக்கைகளாக வெளியிட்டாலும், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் சுட்டிக்காட்டினாலும் கூட, முதலமைச்சர் அமைதியாக கடந்து செல்வதும், அல்லது அமைச்சர்கள் கூறும் பொய் தகவலை உண்மை போல நம்பிப் பேசுவதும் தான் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடர்ந்து தவறான புள்ளி விவரங்களை வழங்கிட அவருக்கு தைரியத்தை தந்திருக்கிறதோ..? என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

மேலும், நம் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள், பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கொள்முதல் விலையை கடுமையாக குறைத்து விட்டன. இதனால் பால் வரத்து அதிகரித்து பால் பவுடர் ஏற்றுமதி குறைந்து விட்டது. எனவே தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதல் விலை, தற்போது ஆவின் கொடுப்பதை விட மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக தற்போது ஆவினுக்கு பால் கொள்முதல் தானாகவே அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியும் கூட, அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியபடி இன்று வரை பால் கையாளும் திறன் பல்வேறு மாவட்ட ஒன்றியங்களில் அதிகரிக்கவில்லை என்பது கவலைக்குரியதாக இருக்கிறது.

எனவே ஆவினுக்கான பால் கொள்முதல் அதிகரிப்பதற்கான சூழல் கனிந்து வரும் இத்தருணத்தில் அதனை தக்கவைத்துக் கொண்டு, கொள்முதல் மற்றும் உற்பத்தி, விற்பனையை உயர்த்த, வெறும் வாயில் முழம் போடாமல் பால் கையாளும் திறனை தான் கூறியபடி 70 லட்சம் லிட்டராக அதிகரிக்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்க பம்பரமாக சுழன்று போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

Also Read : சிலரை மட்டும் குறிவைத்து கொசுக்கள் கடிப்பது ஏன்? இரத்த வகை, நிறம், வாசனையை அறியும் திறன் கொசுக்களுக்கு உண்டா?

மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்துடன் அரசு தரும் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு, அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் தொடர்பான துறையின் அமைச்சராக இருந்து வரும் மனோ தங்கராஜ், அத்துறை சார்ந்த செயல்பாடுகளில் அக்கறை இல்லாமலும், முனைப்புடன் தீவிரமாக செயல்படாமலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் போன்று மத்தியில் ஆளுகின்ற பாஜக மற்றும் பிரதமர் மோடி எதிர்ப்பு மனநிலையிலேயே நித்தமும் இருந்து வருவது ஏற்புடையதல்ல.

எனவே பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இனிமேலாவது தான் சார்ந்த பால்வளத்துறைக்கும், ஆவினுக்கும் 100% உண்மையாக, ஆக்கப்பூர்வமாக செயல்படுமாறு வலியுறுத்துவதோடு, அவ்வாறு செயல்பட முடியவில்லை என்றால் மக்களின் வரப்பணத்தை வீணடிக்காமல் தன்னுடைய அமைச்சர் பதவியை மனோ தங்கராஜ் ராஜினாமா செய்து விட்டு முழுநேரமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளராக செயல்படட்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry